(Reading time: 9 - 17 minutes)

ஜெய் அவனைப் பிடி… விட்டுடாத….”

இஷானின் குரல் சத்தமாய் கேட்க, தன்னைவிட்டு சற்று தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த திவாகரை மெதுவாக பின் தொடர்ந்தான் ஜெய்…

அவனின் நடவடிக்கைப் புரியாமல் போக, விலங்கு மாட்டி வைத்திருந்த ரவுடிகள் ஐந்து பேரையும் சேர்ந்து கட்டிப்போட்டுவிட்டு ஜெய்யை நோக்கி ஓடினான் இஷான்…

மறைவான இடத்திற்கு சென்ற திவாகரின் கை செல்போனில் பதிய, வேகமாக அடுத்த சில நொடிகளில் அவன் யாருக்கோ போன் செய்தான்…

ஹலோ என்று இவன் பேசுவதற்குள், அவனுக்கு முன் சற்று தூரத்தில் வந்து நின்றான் ஜெய்….

“போன் பண்ணிட்டு ஏன் பேசாம இருக்குற?....... பேசு….”

ஜெய் கைகாட்ட, அவனை முறைத்தான் திவாகர்…

“வெளிய எடுக்க ஆள் இருக்குற திமிருலதான நீ இத்தனை நாள் ஆடின… இனி எப்படி ஆடுறன்னு பார்க்குறேன்…”

“என்னைப்பத்தி உனக்கு தெரியாம நீ நடந்துக்குற…”

“எல்லாம் தெரியும்டா நாயே…..”

ஆத்திரத்துடன் உறைத்தான் ஜெய்….

“தெரிஞ்சுமா மோதுற?..”

“தெரிஞ்சதுனாலதாண்டா உன் இடத்துக்கே வந்தேன்…”

சிரித்துக்கொண்டே ஜெய் சொன்னதும்,

“என்னை அரெஸ்ட் செய்யதானடா வந்த… பண்ணிக்கடா… எப்படி வெளிய வரணும்னு எனக்கு தெரியும்…”

அகங்காரத்துடன் திவாகர் குரல் ஒலிக்க,

“அப்புறம் எதுக்குடா ஓடிவந்த?.. அதுவும் தப்பிச்சு?...”

“ஆமா நான் தான் தப்பிச்சு வந்தேன்… இப்போ நானே சொல்லுறேன்… என்னை அரெஸ்ட் பண்ணு… வா…”

அவன் தனது இருகரத்தினையும் ஜெய்யை நோக்கி நீட்ட ஜெய்யின் முகத்தில் முறுவல் வந்திருந்தது…

“சே… சே… உனக்கு எதுக்கு தேவையில்லாத அலைச்சல்?...”

நக்கலாக கேட்டான் ஜெய் அவனிடத்தில்…

“என்னடா சொல்லுற?...”

“நடக்கப்போறதை சொல்லுறேன்….”

“……………….”

“சட்டத்துக்குப் புறம்பா ஆயிரம் வேலையை பண்ணுவீங்க… அதை ஏன்னு தட்டி கேட்க போலீஸ் வந்தா அவனை கொன்னு புதைச்சு அவன் இடத்துல புல் முளைக்க வைப்பீங்க… இல்ல?... உங்களுக்குத்தான் இந்த ஆளைக்கொல்லுறதெல்லாம் தெரியுமா?... எங்களுக்கெல்லாம் தெரியாதா?...”

ஜெய் அனல் தெறிக்க கேட்க, திவாகர் அவனையே பார்த்தான் திகிலுடன்…

“உயிரைப் பணயம் வச்சு செய்யுற வேலைக்கு துரோகம் செய்யக்கூடாதுன்னு நாங்க வேலை பார்ப்போம்… நீங்க நோகாம வந்து எங்க குடும்பத்தை சேர்ந்தவங்களை கடத்திட்டு போய் மிரட்டுறது, அடிச்சு சித்திரவதை பண்ணுறது, எல்லாத்துக்கும் மேல, அவங்க உயிரையே பறிக்குறதுன்னு ரொம்ப சுலபமா செஞ்சிட்டு போயிடுறீங்க… ஏண்டா எங்களை எல்லாம் பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு?...”

ஜெய் கிட்டத்தட்ட ரௌத்திரமாக, திவாகர் மென்று முழுங்கினான்…

“பயம் வருதா?... இந்த பயத்தை எத்தனை நாள் அப்பாவி மக்கள்கிட்ட காட்டியிருப்பீங்க… இப்போ உன் உயிர்னு வரும்போது பயம் வருதா உனக்கு?...”

“வேண்டாம்… என் உயிருக்கு எதாவது ஆச்சு, நீ செத்துடுவடா…”

“அதையும் பார்க்கலாம்டா…”

கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து திவாகரை குறிவைத்தான் ஜெய்….

“எனக்கு எதாவது ஆச்சுன்னா, நீ உன் மேலதிகாரிக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்… ஜாக்கிரதை…”

“அதைப்பத்தி எனக்கில்லாத கவலை உனக்கெதுக்குடா?....”

கேட்டுக்கொண்டிருந்தவனை கவனித்தபடி, இஷான் வர, அதற்குள் திவாகரை சுட்டுத்தள்ளியிருந்தான் ஜெய் கண்டபடி…

அவன் கீழே விழவும் இஷான் அங்கே வரவும் சரியாய் இருக்க, வந்தவன்,

“என்னடா?... ஏன்?...” என்று கேட்க,

“தப்பிக்க பார்த்தான்… அதான் சுட்டேன்…” என்றான் ஜெய் இலகுவாக…

“அப்படின்னாலும் முட்டிக்கு கீழதான சுடணும்… ஆனா நீ என்ன பண்ணி வச்சிருக்க?...”

“என்னைக்கொல்ல வந்தான்…. தற்காப்புக்காக சுட்டேன்னு நான் சொல்லிக்கிறேன்… நீ வா….”

இஷானிடம் இயல்பாக சொல்லிவிட்டு ஜெய் நகர, அவன் போவதையேப் பார்த்துக்கொண்டிருந்தான் இஷான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.