(Reading time: 5 - 10 minutes)

திலீப் செய்த பிழையை சரயூ தனது ஒரே ஒரு கேள்வியில் கோடிட்டு காட்டிவிட்டு செல்ல, அவன் நிலை குலைந்தான்…

அதன் பின்னர், அவன் அவளிடம் பேச முனையவில்லை…

என்ன பேசுவான் அவன்?... இல்லை பேசத்தான் வாய் வந்திடுமா?...

அதிர்ச்சியில், அது புரிய வைத்த உண்மையில் அவன் பேச்சற்று போயிருந்தான்… அதுதான் நிஜம்….

தான் என்ற ஆணவம், அதற்கும் மேல் ஆண் என்ற சர்வாதிகாரம்… அத்தனையையும் சரயூவின் மேல் இத்தனை நாள் பிரயோகப்படுத்தியிருக்கிறோம் என்ற எண்ணமே அவனை தள்ளாட வைத்தது…

தான் நல்ல கணவனாக இல்லையோ?... என்ற எண்ணம் அவன் மனதில் சாட்டையடியாக விழுந்தது…

மனதில் அடிவாங்கிய தருணம், அவனைத் தேடி வந்தாள் சரயூ…

அறைக்குள் வந்தவளை எந்த முகத்தோடு பார்த்திட என்று தெரியாது அவன் தயங்கி நிற்க, அவனின் முன் வந்து நின்றாள் சரயூ…

“நேரம் ஆச்சே… தூங்கலை?...”

கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே அவள் கேட்க, அவன் அவள் முகத்தினைப் பார்க்காது பதில் சொன்னான்…

“தூக்கம் வரலை…” என….

அவனின் பதில் கேட்டு, அவனின் அருகே நெருங்கினாள் அவள்…

அவன் சற்றே அதிர்ச்சியுடன் நிற்க, அவள் மேலும் முன்னேறினாள்…

“சரயூ…. நீ…………..”

வார்த்தைகள் தடுமாறியபடி வந்து விழ, அதற்கு வந்த அவளின் பதிலோ அவனை வாயடைக்க செய்தது…

“ஒரு மனைவியா நான் என் கடமையை செய்யுறேன்… அவ்வளவுதான்… அதுக்கும் மேல உங்களுக்கு ஒரு பையனை பெத்து கொடுக்கணுமே… அப்போ என்னோட மனைவிங்கிற கடமையில இருந்து நான் தவற முடியாது தான?...….”

முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாது அவள் கேட்க, அவன் ஒட்டுமொத்தமாக அவளிடம் வீழ்ந்தான்….

அவன் பேச்சற்று இருக்கும்போதே, அவள் அவனின் கரம் தொட, சட்டென்று தனது கையை உதறினான் திலீப் வேகமாய்…

அவள் கொஞ்சமும் அதிராமல்,

“என்னாச்சு?...” என்று கேட்டதோடு மட்டுமல்லாமல்,

அவனிடம் இன்னொரு கேள்வியையும் கேட்க, அவன் விழிகளில் நீர் நிறைந்தது உடனேயே….

“இப்போ வேண்டாமா?...”

விழி நிறைந்த நீருடன் அவன் அவள் முகத்தினை ஏறெடுத்துப்பார்க்க,

“நான் வேண்டாம்னு சொன்ன நாட்களில் எல்லாம் கோபப்பட்டீங்க… ஆனா இப்போ ஏன் எதுவும் பேசக்கூட மாட்டிக்குறீங்க?...”

அவன் பட்டென திரும்பி கொள்ள, அவனின் முன் வந்து நின்றாள் அவள்…

“சரி… என் கடமையை செய்ய எனக்கு எப்போ வாய்ப்பு கொடுக்கணும்னு நினைக்குறீங்களோ, அப்பவே கொடுங்க… அதுவரை தாராளமா காத்திருப்பேன்…”

அவன் வேதனையுடன் விழி மூடிக்கொள்ள, அவள் முகத்தினில் பரவியது வேதனை ரேகைகள் சரசரவென்று…

மெல்ல அவன் விழி திறக்க, சட்டென்று தனது துக்கத்தை உள்வாங்கிக்கொண்டவள் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள,

திலீப்பின் விழியைத் தாண்டி கன்னம் தொட முனைந்தது அவனது கண்ணீர்…

அதைக் கண்டவளுக்கு அதற்கும் மேல் அங்கே நிற்க முடியாது போக,

“இங்க தான வச்சேன்… எங்க போச்சு?...”

எதையோ தேடுவது போல் அவள் அந்த அறையின் ஒரு ஓரத்தில் சென்று நின்று கொள்ள, அவளது கரமோ இமை சிந்திய தன் கண்ணீரை துடைத்துக்கொண்டது மௌனமாக….

திலீப்போ, ஒட்டுமொத்த தன் தவறையும் அந்த நொடியில் உணர்ந்தான் முழுமையாய்…

அவள் நின்ற திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, தானாக கண்ணீர் பெருகிவர, அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் அப்படியே நின்றான் அவன் ஊமையாக…

தொடரும்

Episode # 24

Episode # 26

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.