(Reading time: 28 - 56 minutes)

துஷ்யந்த் பற்றிய நினைவுகள் வந்ததும், திரும்பவும் அவனுக்கு போன் செய்யலாமா..?? வேண்டாமா..?? என்ற குழப்பம் அவளை சூழ்ந்தது... இப்போது அவன் திருமணம் முடிவாகிவிட்ட நிலையில், அது தவறில்லையா..?? ஆனால் இவள் போன் செய்வாள் என்று அவன் எதிர்பார்ப்பானே..?? என்ற சிந்தனையில் அவள் இருக்க, வாசலில் காய்கறி விற்கும் பெண்மணியின் குரல் கேட்டது...

"வாணிம்மா.. காய்கறிகாரம்மா வந்திருக்காங்க.."

"இங்க அடுப்புல வேலையா இருக்கேன் கங்கா... நீ போய் என்னன்ன வாங்கலாம்னு பாரு... இதோ வரேன்.."

வாணி சொன்னதும் வெளியே சென்றவள், அந்த பெண்மணி சுமந்திருந்த காய்கறி கூடையை கீழே இறக்கினாள்...

"காய்கறில்லாம் புதுசா இருக்கும்மா.. கொஞ்சம் நிறைய வாங்கி வச்சிக்கோங்க.. இங்கப் பாருங்க காலி ஃப்ளவர் கூட புதுசா இருக்கு.." என்று அந்த பெண்மணி சொன்னதும், சப்பாத்தி, காலிஃப்ளவர் குருமான்னா துஷ்யந்த்க்கு ரொம்ப பிடிக்கும்.. என்ற சிந்தனை இணைப்பாக வந்து ஒட்டிக் கொண்டது...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அந்த சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு அவள் தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டிருந்தாள்... அப்போது வாசல் கதவை திறந்துக் கொண்டு இன்னொரு பெண் வந்தாள்..

"அக்கா.. இந்த மாசம் பால் காசு வாங்க வந்திருக்கேன்க்கா.."

"ஓ... பால் கணக்கெல்லாம் வாணிம்மாக்கு தான் தெரியும்... கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க வரேன்... நீங்களும் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்கம்மா.." என்று காய்கறி விற்கும் பெண்ணிடமும் கூறிவிட்டு கங்கா உள்ளே போனதும்... அந்த இரு பெண்மணிகளும் பேசிக் கொண்டனர்.

"இப்போ இந்த ஏரியாக்கும் நீங்க தான் பால் போட்றீங்களா..??"

"ஆமாம்மா.. ஒரு நாலஞ்சு மாசமா போட்றோம்.."

"இந்த வீட்டுக்கு எவ்வளவு நாளா போட்றீங்க..??"

"ஆரம்பத்துல இருந்தே போட்டுக்கிட்டு இருக்கோம்மா..."

"எப்போ வந்தாலும் இந்த வீட்ல இந்த ரெண்டுப்பேர் மட்டும் தான் இருக்காங்க... வேற யாரும் இருக்க மாதிரியே தெரியலையே.."

"ஆமாம்மா... இவங்க ரெண்டுப்பேர் மட்டும் தான் இருக்காங்க... இப்போ போனாங்களே அந்த அக்கா... அவங்க ஏதோ தையல் க்ளாஸ் சொல்லித் தர்றாங்க... கூட இருக்க அந்த அம்மா இந்த அக்காக்கு ஏதோ சொந்தக்காரங்க போல... வீட்ல வேலையெல்லாம் அவங்கத்தான் பார்க்கிறாங்க...

"அப்படியா..?? ஆனா.. அந்தப் பொண்ணு கழுத்துல தாலி இருக்கு.. காலில் மெட்டி போட்ருக்கு... அப்போ அந்தப் பொண்ணோட புருஷன் அதுக் கூட இல்லியா..??"

"கூட இல்லாத மாதிரி தான் தெரியுது.." என்றவள்... வீட்டின் உள்ளே இருந்து யாராவது வருகிறார்களா... என்று பார்த்துவிட்டு.. பின் ரகசிய குரலில்...

"ரெண்டு வீடு தள்ளி லாண்டரிக் கடை வச்சிருக்காங்களே அந்த அக்கா... அவங்க சொல்லுவாங்க... இந்த வீட்டுக்கு ரெண்டு ஆம்பளைங்க அடிக்கடி வருவாங்களாம்... ஒருத்தன் பெரிய கார்ல வருவானாம்... ஒருத்தன் பைக்ல வருவானாம்..."

"அப்படியா..?? பார்த்தா குடும்ப பொண்ணா.. லட்சணமா இருக்கு... ம்ம் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னே தெரியலையே... இவ லட்சணம் தெரிஞ்சு தான் இவளை விட்டுட்டு இவ புருஷன் ஓடிப் போய்ட்டானோ..??"

"அது என்னவோ... இவங்களைப் பத்தி தெரிஞ்சு இவங்கள விட்டு ஓடிப்போனாரோ.. இல்ல அவர் ஓடிப் போனதால இவங்க இப்படி இருக்காங்களோ..?? யாருக்கு தெரியும்..." அந்த பால்கார பெண் சொல்லிக் கொண்டிருந்த போதே... வேகமாக வெளியில் வந்த வாணி...

"இந்தாம்மா பால் காசு.. இதோட கணக்க முடிச்சிக்கலாம்... நாளையிலிருந்து நீ பால் போட வேண்டாம்..." என்றவர்... காய்கறிகாரம்மாவை பார்த்து...

"இந்த காயெல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பு... நான் நாளையிலிருந்து மார்க்கெட் போய் வாங்கிக்கிறேன்.." என்றார்..

அவர்கள் இருவரும் வியாபாரம் கெட்டுவிட்டதே என்று வாணியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க... சத்தம் கேட்டு கங்கா வெளியே வந்தாள்...

"என்ன வாணிம்மா இங்க சத்தம்..." என்று அவள் கேட்டதும்,

"நம்மக் கிட்ட வியாபாரம் செய்ய வந்துட்டு... நம்மல பத்தியே தப்பா பேசறாங்க கங்கா.." என்று அவர் சொன்னதும், என்னவாக இருக்கும் என்று அவள் யூகித்துவிட்டாள்...

பின் வாணியை சமாதானப்படுத்திவிட்டு, அவர்களிடமே பாலும், காய்கறியும் வாங்கிக் கொள்வதாக சொல்லி அனுப்பி வைத்தாள்... அந்த பெண்மணிகள் இருவரும் வெளியே செல்லும்போது... "ரொம்ப நல்ல பொண்ணா தான் இருக்கு.. இதுக்கு கடவுள் இந்த வாழ்க்கையை கொடுத்திருக்காரு பாரு.." என்று புலம்பிக் கொண்டே சென்றனர்...

"இப்போக் கூட எப்படி பேசிட்டு போதுங்க பாரு.." என்று முனகிவிட்டு வீட்டுக்குள் வந்தார் வாணி...

"இவங்களுக்கெல்லாம் கருணைக் காட்டக்கூடாது கங்கா.. நம்மக்கிட்ட வியாபாரம் பண்ணிட்டு.. நம்மலையே எப்படி பேசுதுங்க பாரு.."

"விடுங்க வாணிம்மா... இது ஒன்னும் புதுசில்லையே... இப்படி எத்தனையோ பேர் பேசிக் கேட்டாச்சு... நானும் இவங்கெல்லாம் இப்படி பேசும் நிலைமையில் தானே இருக்கேன்...

அந்த பால் வியாபாரம் பண்ற பொண்ணுக்கு என்னோட சின்ன வயசா தான் இருக்கும்.. கல்யாணம் ஆனதுமே புருஷன் கூட வியாபாரத்துக்கு வந்துடுச்சு... அந்த காய்கறிகாரம்மாக்கு ஒரு 50 வயசுக்கு மேலேயாவது இருக்கும்... இந்த வயசுல அவங்க கஷ்டப்பட வேண்டியிருக்கு... இவங்களுக்கெல்லாம் இப்படி ஏதாவது, யாரைப்பத்தியாவது பேசிப் பொழுது போக்கறது தான் ஒரு ரிலாக்ஸ் மாதிரி... அதுக்காக அவங்க வியாபாரத்தை கெடுக்கிறீங்களே...??

நீங்களே எனக்கு எத்தனை தடவை அட்வைஸ் பண்ணியிருக்கீங்க... யார் பேசறதையும் கேட்டு ஃபீல் பண்ணக்கூடாது... நம்ம வாழறத தான் நாம பார்க்கனும்னு சொல்வீங்க... இப்போ உங்களுக்கு என்னாச்சு..??"

"நம்ம வீட்டு முன்னாடி நின்னுக்கிட்டு உன்னைப் பத்தி தப்பா பேசறாங்களே.. அதான் கஷ்டமா இருந்துச்சு.."

"விடுங்க வாணிம்மா.. இப்போல்லாம் எனக்கு இதையெல்லாம் கேட்டு பழகிடுச்சு... நம்ம வேலையை நாம பார்த்துக்கிட்டு போய்ட்டே இருக்கலாம்...

எனக்கு இன்ஸ்டியூட்க்கு டைம் ஆச்சு.. நான் ரெடியாகிறேன்... நீங்க உங்க வேலையை பாருங்க.." என்று அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்...

வாணி அப்படியே ஆச்சர்யத்தோடு கங்காவை பார்த்தப்படி நின்றிருந்தார்... ஆறு வருடத்திற்கு முன் அரை உயிராய் தூக்கு கயிறில் தொங்கிக் கொண்டிருந்த கங்காவா இது என்று ஆச்சர்யமாக இருந்தது...

இந்த ஆறு வருட வாழ்க்கை கங்காவிற்கு நிறைய பக்குவத்தையும், அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது... ஆனால் இதெல்லாம் துஷ்யந்த் விஷயத்தில் மட்டும் மாறாமல் இருப்பதை நினைத்து நொந்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.