(Reading time: 28 - 56 minutes)

ன்று புதிதாக சுடிதார் கற்றுக் கொடுப்பதற்கு சொல்லி தருவதாக நேற்றே மாணவிகளுக்கு சொல்லியிருந்தாள்... ஆனால் இன்று ஏற்கனவே கற்றுக் கொண்டதையே தைத்துப் பார்க்கும்படி சொல்லிவிட்டு, ரம்யா, கலாவோடு தைப்பதிலும் இணைந்துக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்... மனதில் இருந்த குழப்பத்தால், அவளால் எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை...

அப்போது "அக்கா.." என்று அழைத்தப்படியே ஒரு பெண் அங்கு வந்தாள்... அவள் பெயர் சுமதி.. ரம்யா, கலாவோடு சேர்ந்து அவளும் கங்காவின் மாணவி... இப்போது வீட்டிலேயே மிஷின் வைத்து துணி தைத்துக் கொடுக்கிறாள்... ஏதாவது புது மாடலில் தைக்க வேண்டி வந்தால், கங்காவிற்கு போன் போட்டோ.. இல்லை நேரில் வந்தோ சந்தேகங்களை கேட்பாள்... ஆனால் இன்று கையில் குங்குமச் சிமிழோடு வந்திருந்தாள்...

"வா வா சுமதி... கையில் என்ன குங்குமச் சிமிழ்..?? ஏதாவது விசேஷமா..??" கங்கா கேட்டதும்,

"என்ன சுமதி... கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா..??" என்று ரம்யாவும் கேட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"ஹே அதெல்லாம் இல்லடி..." என்ற சுமதி, கங்காவிடம் திரும்பி... " இப்போ தானக்கா 20 வயசு ஆகுது... இன்னும் 2, 3 வருஷம் போட்டும்னு வீட்ல சொல்லியிருக்கேன்க்கா.. நான் இப்போ வந்தது.. வீட்டுப்பக்கத்துல ஒரு கடை வாடகைக்கு எடுத்து நானும் நம்ம ஆயிஷாவும் சேர்ந்து தைக்கலாம்னு இருக்கோம்க்கா... வர வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்... அதுக்கு தான் உங்களையெல்லாம் கூப்பிட வந்திருக்கேன்.." என்றவள் எல்லோருக்கும் குங்குமம் கொடுத்தாள்...

"ரொம்ப சந்தோஷமா இருக்கு சுமதி..." என்று அவள் கொடுத்த குங்குமத்தை வைத்தவள்... "ஆனா வீட்டுல தைக்கறதுக்கும், கடையில் தைக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு... கரெக்டா இந்த நாள் தைச்சுக் கொடுக்கறதா சொன்னா, அதே போல கரெக்டா தைச்சுக் கொடுத்தடனும்... கஸ்டமரை சும்மா அலைய வைக்கக் கூடாது... அதேபோல ஆல்ட்ரேஷன் வொர்க்க்காகவும் அவங்களை அலைய வைக்கக் கூடாது...

கடையை ஓரளவுக்கு நீட்டா வச்சுக்கனும்... துணியெல்லாம் கலைச்சுப்போட்டு வைக்காம, தைக்கப் போற துணி தனியாகவும், தைச்ச துணி தனியாகவும் வைக்கனும்.. அப்புறம் அடிக்கடி கடைக்கு லீவ் விடக்கூடாது... யாராவது ஒருத்தர் கடையிலேயே இருக்க மாதிரி வச்சுக்கனும்.. அப்படியே லீவ் விட்ற மாதிரி வந்தாலும், முன்னாடியே கஸ்டமர்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ற மாதிரி பார்த்துக்கனும்... அப்போ தான் கஸ்டமர்ஸ் நிறைய வருவாங்க என்ன..??" என்று ஆலோசனை கூறினாள்...

"கண்டிப்பாக்கா... நான் உங்கக்கிட்ட க்ளாஸ்க்கு வந்தப்போ.. இதெல்லாம கவனிச்சிருக்கேன்... நீங்க சொன்னமாதிரியே ஃபாலோவ் பண்றேன்க்கா... அப்புறம் அக்கா...

நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்னா.. நீங்க தான் காரணம்... என்னமோ இந்த மண்டையில படிப்பே ஏறல.. நீயெல்லாம் எதுக்கு தண்டத்துக்குன்னு பொறந்தன்னு அம்மா திட்டுவாங்க... தையல் க்ளாஸ்க்கு கூட ஆயிஷா கூட ஒரு டைம் பாஸ்க்காக தான் வந்தேன்... ஆனா நீங்கன்னவே தான் நான் சின்ஸியரா கத்துக்கிட்டேன்னு கூட சொல்லலாம்...

இப்போ நானும் நாலு காசு சம்பாதிச்சு... எங்க வீட்டுக்கு உதவியா இருக்கேன்னு நினைக்கும் போதே சந்தோஷமா இருக்குக்கா... இப்போ தனியா கடை வைக்கிற அளவுக்கு வந்தது உங்களால தான்... அதனால நீங்க தான் கடைக்கு வந்து முதல்ல பூஜைப்போட்டு ஆரம்பிச்சு வைக்கனும்.. வருவீங்கல்ல..??"

"அது சுமதி... உனக்கே தெரியுமில்ல.. நான் எந்த பங்ஷன்க்கும் போறதில்ல... அதான் ரம்யாவும், கலாவும் வரப்போறாங்களே.. அப்புறம் நான் வந்து ஆரம்பிக்கனும்னு என்ன இருக்கு..?? உன்னோட நல்லதுக்காக யோசிக்க உன்னோட அப்பா, அம்மா இருக்காங்க.. அவங்கள வச்சு பூஜை பண்ணு... இல்ல கைராசி உள்ளவங்க யாராச்சும் செய்யட்டும்... நீ நல்லப்படியா முன்னேற.. நான் எப்பவும் கடவுள்க்கிட்ட வேண்டிப்பேன் சரியா..??"

"நீங்க வரமாட்டேன்னு சொன்னாலும், உங்களை எப்படியாவது வற்புறுத்தி கூப்பிடனும்னு நினைச்சிக்கிட்டே வந்தேன்க்கா.. ஆனா இப்போ முடியல.. உங்கக் குரலில் ஏதோ வசியம் இருக்குக்கா.. உங்கப் பேச்சை மீறவே முடியல.." என்று சுமதி சொன்ன போது...

"உன்னோட குரலில் ஏதோ மேஜிக் இருக்கு... அதுதான் எனக்கு ஒரு எனர்ஜியை கொடுக்குது... அதான் எனக்கு மீட்டிங் சக்சஸா முடியறதுக்கு காரணம்.." என்று துஷ்யந்த் அடிக்கடி சொல்வது கங்காவிற்கு ஞாபகத்திற்கு வந்தது...

"சரி விடுங்கக்கா... நீங்க வரலன்னாலும் பரவாயில்ல... உங்க ப்ளவுஸ் ஒன்னு கொடுங்க... என்னோட புது மிஷின்ல ஃபர்ஸ்ட் அதை தான் தைக்கப் போறேன்... ப்ளீஸ்க்கா.." என்றதும் கங்காவால் மறுக்க முடியாமல், அவள் தைப்பதற்காக வைத்திருந்த ஃப்ளவுஸ் பிட்டை சுமதியிடம் கொடுத்தாள்...

"உங்க அளவுக்கு இல்லன்னாலும், ஓரளவுக்கு தைப்பேன்க்கா.. ரொம்ப தேங்க்ஸ்..." என்று கங்காவிடம் கூறிவிட்டு, ரம்யாவையும் கலாவையும் மீண்டும் ஒருமுறை அழைத்துவிட்டு விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள்..

சுமதி அப்படிப்போனதும், கங்கா மாணவிகள் எப்படி தைக்கிறார்கள் என்று பார்வையிட அவர்கள் அருகில் சென்றாள்... அப்போது கலா ரம்யாவிடம்...

"ரம்யா... இந்த சுமதிக்கு ஏதாவது இருக்கா பாரேன்... புதுசா கடை ஆரம்பிக்க, கங்கா அக்காவை கூப்பிட்றாளே..??"

"ஏன் கூப்பிட்டா என்ன..??"

"இல்ல அவங்க ஹஸ்பண்ட் அவங்கக் கூட இல்ல... ஏன் அவரைப்பத்தி எந்த விவரமும் யாருக்கும் தெரியாது... இந்த மாதிரி இருக்கவங்கள இதுபோல நல்லதுக்கு கூப்பிடலாமா..??"

"ஏன் கூப்பிடக்கூடாது..?? அவங்கக்கிட்ட தொழில் கத்துக்கும்போது மட்டும் சரியா ஃபீஸ் கொடுக்கமாட்ட... ஆனா இதுக்கெல்லாம் மட்டும் அவங்களை ஒதுக்கி வைப்பீங்களோ...??"

"ஹே நான் சொல்லலப்பா.. சுமதி வீட்டு  பெரியவங்கல்லாம் அப்படி சொல்லுவாங்கன்னு சொன்னேன்.." என்று சமாளிப்பாக பேசும்போதே... அதை கவனித்த கங்கா...

"நான் தான் வரப்போறதில்லன்னு சொல்லிட்டேனே... நீங்க எதுக்கு வாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. வேலையைப் பாருங்க..." என்றதும் கலாவுக்கு தர்ம சங்கடமாக இருக்க... ரம்யாவோ அவளை முறைத்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.