(Reading time: 15 - 30 minutes)

ஆஆ…. வலிக்குது. விடும்மா” என்று பொய்யாக அழுதவளினை விடுவித்தவர், “சரி சரி… நடிச்சது போதும். அது என்ன அப்பப்ப அம்மா, அப்பப்ப பவான்னு கூப்பிடற?” என்று கேட்டார். (சேம் டவுட் பவா… சாரி, பவானியம்மா)

“அது வந்தும்மா…” என்றவள், பவானியை விட்டு பிடிக்க முடியாத தூரத்தில் நின்று, “நீ என் ஃப்ரெண்டா இருக்கும்போது பவா… மிலிட்டரியா இருக்கும்போது அம்மா” என தன் அறையை நோக்கி ஓடியே போனாள் ப்ரியா.

“அடி இவளை… என்னை மிலிட்டரின்னா சொல்ற” என்று செல்லமாக அவளை அடிக்க இரண்டடி எடுத்துவைத்து, அதற்குமேல் செல்லாமல் அதே இடத்தில் புன்னகையுடன் நின்றார் பவானி. இந்தக் காட்சியை ப்ரியாவின் குரல்கேட்டு வெளியே வந்த கைலாசமும் கண்டு ரசித்தார்.

அவரைப் பார்த்த பவானியும், “பாருங்க உங்க பொண்ணு… என்ன சொல்லிட்டு போறான்னு” என்றார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“அவ உண்மையைத் தான சொன்னா” என்றவரிடம், “அப்ப இனிமேல் உங்களுக்கு தினமும் நாங்கு மணிக்கு பரைட் நடக்கும்” என்று எச்சரித்தார் பவானி.

“நான் சரண்டர்” என்று இரு கைகளையும் தூக்கி சிரித்தார் கைலாசம்.

தன் கணவன் இவ்வளவு சாதரணமாக இருப்பதைப் பார்த்து, இது புயலுக்கு முன் வரும் அமைதியோ என்று எண்ணியது அவர் நெஞ்சம். இன்று என்னென்ன நடக்கும் என்பது அவருக்கும் தெரியவில்லை. தந்தையின் முடிவைக்கேட்டு என்னென்ன செய்யப்போகிறாளோ? என்று நினைத்து அமர்ந்தார்.

பவானி எண்ணியபடியே, காலையுணவு முடிந்ததும் உள்ளே செல்ல எழுந்த ப்ரியாவை, “உன் பொண்ணை கொஞ்சம் நிக்க சொல்லு பவானி. நான் அவகிட்ட பேசனும்” என்று நிறுத்தினார்.

“என்னிடம் இப்படி தூதுவிட்டு சொல்றதுதானே? நீங்களே கேளும்மா. உங்கிட்ட இருந்து நான் கேட்டுக்கறேன்” என்று உதாசீனப்படுத்திவிட்டு மேலேறினாள் ப்ரியா.

பல வருடங்களாக தொடர்ந்த மௌனத்தை இப்போது உடைக்க வேண்டியது அவசியமாதலால், தானே அழைத்தார் ப்ரியாவை. “நில்லு ப்ரியா”

மூன்றடி ஏறியவள், தன்னை விளித்த தந்தையின் குரலால் திரும்பி, “சொல்லுங்க” என்று அங்கேயே இரு கைகளையும் மடித்து நின்றாள்.

“இங்கே வந்து உட்கார்” என்று தன் எதிர் மேசையைக் கைக்காட்டினார் கைலாசம்.

“பரவாயில்லை. இப்படியே சொல்லுங்க. நான் கேட்டுக்கறேன்”

“இங்கே வான்னு சொல்றேன்ல்ல” என்றார். அந்த குரலில், ‘என் சொல்லை மீறாதே’ என்ற மிரட்டல் வெளிப்பட்டது. அந்த மிரட்டலுக்கு அடிபணிந்து அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் அமர்ந்தாள் ப்ரியா.

“நீயும் உட்காரு பவானி” என்று கைலாசம் கூறியவுடன், ப்ரியாவின் அம்மாவும் ப்ரியாவின் அருகிலேயே அமர்ந்தார்.

“நான் இன்னும் பவானிகிட்டேயே சொல்லலை. ரெண்டுபேரிடமும் ஒன்னா சொல்லிடறேன்” என்று ஆரம்பித்தார் கைலாசம்.

அவர் இடைவேளை விட்ட தருணம், அம்மாவை அணுகி, “எதைப் பற்றி?” என்று சைகையில் கேட்டாள் ப்ரியா. அதற்கு, “பொறு” என பதிலளித்தார் பவானி.

“நான் இதைப் பற்றி ரொம்ப நாளாக யோசித்திருக்கிறேன். ஆனால், இப்போ முடிவே செய்துட்டேன். இந்த வேலையை விட்டுவிட்டு நம்ம ஊருக்கே போகலாம்னு இருக்கேன்” என்று முடித்தார்.

‘இது என்னடா, வெடியை எதிர்பார்த்தா புஷ்வானமா போச்சு’ என்று நினைத்தாள் ப்ரியா. (பின்னே என்னங்க? அப்பாவிடம் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்று கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதிவைத்துவிட்டு, அதனை டைரெக்ட் செய்யக் காத்திருந்தவளுக்கு முற்றிலும் வேறான ஒன்றைப் பற்றிப் பேசினால்?)

“இதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே” என்றவளை இருவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

“எப்படி?” என்று வினவினார் பவானி. அவரிடம் கைலாசநாதர் ஏற்கனவே பிற்காலத்தில் தன் வீட்டினருடன் வசிப்பதைப் பற்றி கூறியிருக்கிறார். பவானியும் மனமுவந்து அதனை ஏற்றும் கொண்டார். அதனால் இது அவருக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

“இவரு அடிக்கடி சொல்வாரேம்மா, ஊருக்கு போகும்போதெல்லாம் அங்கே இருப்பவர்களிடம், ‘கூடிய சீக்கிரமே இங்கேயே வந்துடறேன்’னு”

“முதலில் ரிடையரானதற்கு பிறகு போக நினைத்தேன். இப்போ, இந்த மாசமே வேலையை விட முடிவு செய்துட்டேன்” என்றார்.

“சரி. அவ்வளவுதானே. நான் இப்போ போகலாமா?” என்று ‘இது எனக்கு நீங்க சொன்ன இன்ஃபர்மேஷன்னு எனக்கும் தெரியும்’ என்று காட்டினாள் ப்ரியா

“இன்னும் ஒரு விஷயம் இருக்கு. இன்று ஈவினிங் உன்னை பெண் பார்க்க வர்றாங்க. இன்றே நிச்சயம். பதினைந்து நாளில் உன் திருமணம். நமது ஊரில் அனைத்து ஏற்பாடும் செய்தாச்சு. இப்போ நீ போய் ரெடியாகு” என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தார். “இன்னொன்னு, அவங்களுக்கு நீ வேலைக்கு போவதில் விருப்பமில்லை. சோ, ரிசைன் செய்திடு”

“ஒரு நிமிஷம். இதை யாரைக்கேட்டு முடிவு செய்தீங்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.