(Reading time: 13 - 26 minutes)

வெயிட்டரிடம் பேசிமுடித்து திரும்பியவன் இவளின் பார்வையை கவனித்துவிட்டான்.  சட்டென ப்ரியா தலை கவிழ்ந்தாள்.  அவளின் செயலை ரசித்த ஆதர்ஷ் அவளையே பார்த்துகொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்தும் அவன் அமைதியாகவே இருக்கவும் இவள் மெல்ல நிமிர்ந்து அவனை கேள்வியாக நோக்கினாள்.

“சொல்லுங்க ப்ரியா” என்றான் மென்னகையோடு.

குழம்பியவளாக, “என்ன சொல்லனும்?”

“நான் எப்படின்னு சொல்லுங்க? எவ்வளவு மார்க் தேருவேன்?” முகத்தில் குறும்பு கொப்பளித்தது.

அவனின் கேள்வியில் மேலும் குழம்பியவளாக, “புரியலை!” என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“இல்லை… நான் வெயிட்டரிட்ட பேசிட்டிருக்கும் போது நீங்க என்னை மேலிருந்து கீழே வரைக்கும் நல்லா ஸ்கேன் பண்ணீங்களே… அதான் எனக்கு எத்தனை மார்க் போடுவீங்கன்னு தெரிஞ்சிக்க ஆசை”  

அவன் சொன்னது புரிந்ததும் அதிர்ந்து வெட்கினாள் ப்ரியா.  ‘எப்படி கண்டுபிடிச்சான்? அய்யோ…இப்படி மாட்டிகிட்டேனே!’

“இல்லை! நீங்க தப்பா…” அவள் ஏதோ சொல்லவும் அவர்கள் ஆர்டர் செய்தவைகளை வெயிட்டர் டேபிளில் வைத்தான்.

ப்ரியா மறுபடியும் அமைதியானாள்.  அவளின் மனவோட்டத்தை உணர்ந்தவனாக

“சாப்பிடுங்க ப்ரியா!”

தன்னுடைய ஷேக்கை உறிஞ்சினான்.  அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஆராய்ச்சியின்படி ஒருத்தரை பற்றிய முதல் அபிப்பிராயம் (First impression) அவங்களை சந்தித்த 3 – 5 நொடிகளில் மனதில் ஏற்படுமாம்.  அந்த நொடிகளிலேயே எதிரிலிருக்கறவங்க மேல ஒரு நம்பிக்கையும் பிடிப்பும் நமக்கு வந்திரும்.  அந்த நம்பிக்கையும் பிடிப்பும் எந்த சதவிகிதத்தில் இருக்கு என்பதின் மேல் தான் அவங்களுக்கும் நமக்கும் இடையேயான உறவின் ஆழம் முடிவாகுது.”

‘இவன் என்ன சம்மந்தமே இல்லாம பேசிகிட்டிருக்கான்? ஒருவேளை இவனுக்கும் என்னை மாதிரியே என்ன பேசறதுன்னு தெரியலையோ?’ சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை கேள்வியும் குழப்புமாக ஏறிட்டாள்.

“இதை ஏன் இப்போ சொல்லிட்டிருக்கேன்னு நினைக்கிறீங்களா?”

ஆமோதிப்பதாக தலையை மேலும் கீழும் ஆட்டினாள் ப்ரியா.

ஒரு புன்முறுவலோடு, “நாம ரெண்டு பேரும் சந்தித்து ஒரு மணி நேரமாவது ஆயிருக்கும்.  ஸோ நீங்க என்னை ஸ்கேன் பண்ணதை வைத்து என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லலாமே” குரலில் குறும்பு அதிகமானது.

‘அய்யோ! இதை விடவே மாட்டானா?’

“நானும் வந்ததிலிருந்து கவனித்துட்டு இருக்கேன்… நான் எதை சொன்னாலும் கேட்டாலும் நீங்க உங்க மனசுக்குள்ளேயே பேசிக்கிறீங்க? இங்க வந்ததே நாம ரெண்டு பேரும் பேசிக்கதான்… அதை மறந்திடாதீங்க”

இவள் மனதில் பேசியதை கண்டுபிடித்துவிட்டானே என்று அசடுவழிந்தாள் ப்ரியா.

“இப்பவாவது ஏதாவது பேசுங்க, ப்ரியா”

அவள் மறுபடியும் மௌனத்தையே பதிலாக்கினாள்.

“ஓகே…நானே பேசுறேன்! நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு உங்க வீட்டில் ஆல்ரெடி சொல்லியிருப்பாங்க…”

ஆமோதிப்பதாக தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

‘மறுபடியும் அதே தலையசைப்பா?’ பெருமூச்செறிந்தவன் “உங்களுக்கு வேற ஏதாவது தெரியனுமா?”

“இல்லை!”

“ஆனால் உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியனும்.  என்னை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?” ஆதர்ஷிடமிருந்து எதிர்பார்ப்போடு வந்த கேள்விகள் அவளை யோசிக்க வைத்தன.

சற்று தயங்கியபடி, “எனக்கு யோசிக்கனும்… கொஞ்சம் டைம் வேணும்” கண்களை சுருக்கி அவள் சொல்லிய விதத்தில் சொக்கி தான் போனான் எதிரிலிருந்தவன்.  அந்த மயக்கத்திலிருந்து விடுபட மனமில்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

பதிலுக்காக அவள் தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்தவன், “தாராளமா… நீங்க யோசிக்கலாம்….டேக் யுவர் டைம்.  ஆனா எனக்கு யோசிக்க எதுவுமில்லை.  உங்களை பிடிச்சிருக்கு! என்னோட சரிபாதியா நீங்க இருந்தா, வாழ்க்கை அழகாயிருக்கும்னு ஒரு நம்பிக்கை வந்திருக்கு.  அதே மாதிரி உங்களுக்கும் தோனும்னு நம்புறேன் ப்ரியா!”

“……….”

“நான் உங்களை ஃபோர்ஸ் பண்ணுறதா தப்பா நினைக்காதீங்க…. ஆனா நல்ல முடிவா சொல்லுங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.