(Reading time: 11 - 21 minutes)

வள் எண்ணும் அன்பாய் ஆதரவாய் அவளுடன்  வாழ்நாள் முழுமைக்கும் வருபவனாய் அந்த மாப்பிள்ளை இருந்திருக்கலாமோ?  அதனால்தான் அம்மா இதற்கு சம்மதித்தாரோ? என்று ஒரு ஓரமாக இருந்த அவளது மனசாட்சி உரைக்க, “எப்பவுமே நடுவுல வர்றதே உனக்கு வேலையா போச்சு.  நான் எல்லாம் பாத்துக்கறேன்.  நீ உள்ளே போ” என்று மனதை அடக்கி ஒரு நிலவறையில் தள்ளியது மூளை.

எப்போதும் யோசித்தே பழக்கப்பட்ட அது, இப்போதும் ஆராய முற்பட்டது.  தந்தையின் இந்த முடிவின்பின் ஏதேனும் இருக்குமென்றது அது.  அவளது மனமும் இதற்கு அமைதியாக இருக்க, குழம்பிப்போனாள் ப்ரியா.  அதற்கு ஏற்றவாறு மனமும் பல காரணங்களை அடுக்க ஆரம்பித்தது.

சென்னையில் பணிபுரிபவளுக்கு ஏன் கோவையில் பணிபுரிபவனை பார்க்க வேண்டும்?  அவளது கம்பெனிக்கு கோவையில் கிளைகள் இல்லை என்பதை அறியாதவர்களா இருவரும்?  இவள் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள் என்பது தெரிந்தும் ஏன் தன் முடிவை திணிக்கப்பார்க்கிறார்?  அதுவும் ஜெட் வேகத்தில் இந்த திருமண ஏற்பாடு ஏன்?  பலவாறு குழம்பினாள் அவள்.

ஒருவரது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பெரிதும் காரணமாக இருப்பது அவரது பெற்றோர்களே.  தன் குழந்தைகளை தட்டிக்கொடுத்து, உறுதுணையாக இருந்து அவர்கள் வளர்க்கும்போது, அந்த குழந்தைகள் தன்னம்பிக்கை உடையவர்களாக வளர்ந்து வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.  ‘உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று சொல்லியோ, மிகுதியான கட்டுப்பாடோடோ வளர்க்கப்படுபவர்கள், தன் மீது நம்பிக்கை என்பது சிறிதும் இல்லாமல், சுருக்கமாக சொல்லப்போனால், முதுகெலும்பு இல்லாமல் வளர்வர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அந்த வகையில் ப்ரியா கொடுத்து வைத்தவளே.  அவளுக்கு அவளது தந்தையின் துணை இல்லாவிடினும், பவானியின் துணை எப்போதும் இருந்தது.  கைலாசநாதனால் கண்கொத்திப் பாம்பென கண்காணித்து வளர்க்கப்பட்டவள் ப்ரியா.  ஒரு சிலவற்றில் கட்டுப்பாடுகளை கைலாசநாதன் விதித்தாலும், அவரது பல கட்டுகளிலினால் கட்டப்படாமல் ப்ரியா சுதந்திரமாக பறப்பதற்கு மிக முக்கியமான காரணம், அவளது தாயார்.

ப்ரியாவின் விருப்பங்கள் சிறியதோ, பெரியதோ, அவை உரைக்கப்படுவது அவளது அன்னையிடமே.  அது ஏனோ, அவரிடம் சொல்லிவிட்டால், ‘இனி எல்லாம் அம்மா பார்த்துப்பாங்க’ என்ற நம்பிக்கை தோன்றிவிடும் அவளுக்கு.  அவளது கோரிக்கைகளை நிறைவேற்ற அவரும் கைலாசநாதனிடம் பெரிதும் போராடியிருப்பார் என யூகித்திருந்தாள் ப்ரியா.

ப்ரியாவின் தந்தை அவளை தனது ஆக்டோபஸ் கரங்களால் அவளை வளைக்காமல் இருக்க இதுவரை அவரை தடுத்து நிறுத்தியவர்கள் எவ்வளவு காலம் தான் அதனை செய்ய முடியும்?  எனவே, கூடுமானவரை எதுவும் கேட்காமலேயே இருக்கப் பழகிக்கொண்டாள்.

உண்மையில் சொல்லப்போனால், வெகு காலத்திற்குப் பின் அவள் கேட்டது, கல்லூரி இறுதியாண்டில் வேலைக்கு செல்வது பற்றியே.  அவளை சென்னைக்கு அனுப்ப முடியவே முடியாது என குதித்தவரை மலை இறங்கி வந்து சம்மதிக்கவைக்க அனைவரும் என்னென்ன பாடுபட்டிருப்பரோ?  ஆம்.  இதற்கு அவளது அன்னை மட்டுமல்ல, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன் என அனைவரது உதவியும் தேவைப்பட்டது அவளுக்கு.

அவள் மேலும் யோசிக்கவிடாமல் கதவுக்கு மறுபுறம் ஒலித்தது அவளது தாயின் குரல்.  “ப்ரியா, நம்ம ஊருக்கு கிளம்பனும்மா.  சீக்கிரம் ரெடியாகு”

அவரது குரலைக் கேட்டு, ‘நான் வரலை’ என சொல்ல நினைத்தாள் ப்ரியா.  ஆனால், அவளது மூளை, “ப்ரியா, இப்போ எதிர்ப்பைக் காட்டாதே.  அப்பா சுதாரிச்சிடுவார்.  நீ சரின்னு இப்போதைக்கு சொல்வதுதான் நல்லது” என எடுத்துரைத்தது.

“சரிம்மா” என்று முயன்று சாதாரண குரலில் கூறியவளால், எவ்வளவு முயற்சி செய்தும் சிறிது பிசிரடிப்பதைத் தடுக்க முடியவில்லை.  அதனை அவளது தாயாரும் கண்டுகொண்டாரோ என்னவோ?

“நல்ல நேரத்துலயே போகனும்மா.  அங்கே போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.  அப்போதான் ஈவினிங் ஃபங்ஷனில் முகம் சோர்வில்லாம தெரியும்” என்று கூறிவிட்டு நகர்ந்தார் அவர்.  மகள் மிகவும் அழுதிருக்கிறாள் என நொடியில் கண்டுபிடித்துவிட்டார் அவளது அன்னை.  அவரும் எத்தனை முறை வாதாடி பார்ப்பது?

“இப்போ என்னங்க அவசரம்?” என்றால், “இப்போ செய்யாமல் எப்போ செய்வது?”

“இல்லை… ப்ரியாவிற்கு பிடிக்கவில்லை” என்றால், “அவளுக்கு எதுதான் நான் சொல்வது பிடிச்சிருக்கு?”

“சின்னப்பொண்ணுங்க” என்றால், “அதனால் தான் தள்ளிப்போடாமல் இப்போவே செய்யப் பார்க்கிறேன்” என்று அவரை ஒவ்வொரு வகையிலும் ஏதேனும் கூறி மடக்கிக்கொண்டே வந்தார் கைலாசநாதன்.

பெண்ணின் விருப்பத்திற்கே என்றும் முக்கியத்துவம் கொடுப்பவராயிற்றே அவர்?  அவளது திருமணமும் அவள் விருப்பப்படி அவளுக்கு பிடித்தவனுடன் நடக்க வேண்டும் என்றெண்ணினார் அவர்.  ப்ரியா, தற்போதைக்கு யாரைக் கைகாட்டினாலும் வேண்டாம் என்றே கூறுவாள் என்பதை அறிந்திருந்தார் அவர்.  எனவே, அவளுக்கு தேவையான கால அவகாசத்தை அளிக்க நினைத்தே கணவனிடம் பேச முயன்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.