(Reading time: 7 - 14 minutes)

மெள்ளக்  கண்களைத் திறந்த ரிஷி இவனை நோக்கி..பிள்ளாய் யார் நீ?எதற்காக எனைத் தேடி வந்துள்ளாய் என வினவினார்.

வணக்கதிற்குரிய ரிஷி அவர்களே உம்மை வணங்குகிறேன்..எனச் சொல்லி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான் ராம்னாத்.வணங்கி எழுந்தவன் ரிஷி புங்கவரே..எனக்கு பிரம்மத்தை அடையும் வழியை சொல்வீரா?அப்பிரம்மத்தை அடைய மிகவும் ஆவலாய் உள்ளேன் என்றான்.

சிரித்தார் ரிஷி..நீயோ சிறு பிள்ளையாய் இருக்கிறாய்.அதற்குள் பிரம்மத்தைக் காண விழைகிறாய்.

ஆனாலும் உன் தேடுதலை குறைவாய் மதிப்பிட நான் விரும்ப வில்லை.இன்னும் கொஞ்ச காலம் நீ என்னுடன் இங்கேயே தங்கி இரு.பிரம்மத்தைக் காணும் வழியைச் சொல்கிறேன் என்றார்.

ன்று முதல் ரிஷிக்கான உணவு தயாரிப்பது அவரின் ஆடைகளைத் துவைப்பது பாத்திரம் கழுவுவது,ஹோமங்களுக்கான சமிது,தர்ப்பை போன்ற பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வருவது என்று எல்லா வேலைகளையு செய்தான் ராம்னாத்.

மூன்று மாதங்கள் கடந்தன.பிரம்மம் பற்றி ரிஷி ஏதும் சொல்லவில்லை.மனம் அரிக்க ஆரம்பித்தது ராம்னாத்துக்கு.வேலையில் கவனம் செல்லவில்லை.ரிஷிக்குப் புரிந்தது.

ஆறு மாதங்கள் ஆயின.ரிஷி ஒன்றும் சொல்லவில்லை.கோபம் எட்டிப் பார்த்தது ராம்னாத்துக்கு.

ஒருனாள் பொறுமையின்றி ரிஷியிடம் இது பற்றிக் கேட்டு விட்டான்.

சில நிமிடம் சிந்தனையில் இருந்தார் ரிஷி.பின்னர் ராம்னாத்தை நோக்கி..பிள்ளாய்..நீ குடிலின் உள்ளே சென்று ஒரு கிண்ணத்தில் எள்,ஒரு கிண்ணத்தில் பசுவின் பால்,ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பருத்தி விதை கொண்டு வா என்றார்.

எதற்கு இவற்றைக் கொண்டுவரச் சொல்கிறார் என்று புரியவில்லை அவனுக்கு.ஆயினு கொண்டுவந்து ரிஷியின் முன் வைத்தான்.ரிஷி எள்ளிருக்கும் கிண்ணத்தில் சிறிது தண்ணீர் ஊற்றினார்.

பின் அவனை அமரும்படி கூறினர் ரிஷி.

அவனும் அமர்ந்தான்.

ராம்னாத்..அழைத்தார் ரிஷி..

சொல்லுங்கள் குருவே..

இதோ பார்..இந்தக் கிண்ணத்தில் இருக்கும் எள்ளிலிருந்து உடனடியாக எண்ணை எடுத்துத் தருவாயாக என்றார்.

தூக்கிவாரிப் போட்டது ராம்னாத்துக்கு.எள்ளிலிருந்து உடனடியாக எண்ணை எடுப்பது எப்படிசாத்தியமாகும்?

ஈர எள்ளைக் காய வைக்க வேண்டும் பின் அதனை செக்கிலிட்டு ஆட்டவேண்டும் அப்படிச் செய்தாலல்லவா எண்ணை கிடக்கும்..என மனதில் நினைத்தவன் கொஞ்சமு மறைக்கது நினைத்ததை குருவிடம்(ரிஷி) சொன்னான்.

சரி..போகட்டும் இதோ இருக்கும் பாலிலிருந்து உடனடியாக நெய் உண்டாக்கித் தருவாயாக என்றார்.

அசந்து போனான் ராம்னாத்.குருவே.. பாலைக் காய்ச்சி ஆற வைத்து உறைஊற்றி தயிராக்கி அதிலிருந்து வெண்ணை எடுத்து அதனைக் காய்ச்சி நெய் தயாரிக்க வேண்டும் அப்படியிருக்க பாலிலிருந்து உடனடியாக நெய் எடுப்பது எப்படி சாத்தியம் என்றான்.பதிலில் கொஞ்சம் கோபம் கலந்திருந்தது.

ரிஷி அதனைக் கண்டு கொள்ளவில்லை.சரி போகட்டும் இந்த பருத்தி விதைகளிலிருந்து எனக்கு ஆடை தயாரித்துத் தர முடியுமா? என்று ராமனாத்தைக் கேட்டார். 

சாத்திய மில்லாதவற்றையே கேட்கிறீர்கள் குருவே..பருத்தி விதைகளை நிலத்தில் விதைத்து பயிர் வளர்த்து அதிலிருந்து பஞ்சை எடுத்து நூலாக்கி ஆடையை நெய்ய வேண்டும் அப்படியிருக்க உடனடியாக இப்பருத்திக் கொட்டையிலிருந்துஎவ்வாறு ஆடை தயாரிக்க முடியுமென்றான் சலிப்புடன்.

சிரித்தார் குரு.எவ்வாறு எள்ளிலிருந்து உடனே எண்னை தயாரிக்க முடியாதோ,எவ்வாறு பாலிலிருந்து  நெய்யை உடனடியாக தருவிக்க முடியாதோ எங்கணம் பருத்திக் கொட்டையிலிருந்து நினத்தவுடன் ஆடை நெய்ய முடியாதோ அது போலவே எவ்விதப் பிரயத்தனமும் செய்யாமல் பிரம்மத்தை காணவோ அப்பிரம்மத்தை அடையவோ முடியாது.பிரம்மத்தை அடைய கடுந்தவம் புரிதல் வேண்டும் மனதாலும் செயலாலும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்,ஷணமும் இறைவனை மறவாதிருத்தல் வேண்டும்,சிந்தையும் செயலும் அவனை அடைதல் ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு எவன் தன்னை ஆக்கிக் கொள்கிறானோ அவனாலேயே பிரம்மத்தை அடைய  முடியும்.

பிரம்மத்தைக் கண்டவர் கண்டதாய்ச் சொல்ல மாட்டார்கள்.கண்டதாய்ச் சொல்பவர்கள் உண்மையில் கண்டிருக்க மாட்டார்கள்.கண்டவர் விண்டிலர்.விண்டவர் கண்டிலர்.இதை நீ உணர்வாயாக..என்றார் குரு.

ராம்னாத்துக்குப் புரிந்தது.அவன் குரு சொன்னது போல் தன்னை ஆக்கிக் கொள்வானா?அல்லது பிரம்மத்தை காண விழைந்தது போதும் என வீடு திரும்புவானா? எல்லாம் பிரம்மத்தின் செயல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.