(Reading time: 3 - 5 minutes)

உடைந்தது கண்ணாடியா??? மனமா??? – மீரா ராம்

udainthathu

மயங்க வைக்கும் மைவிழிகள்…

புன்னகை தவழும் அதரங்கள்…

சந்தன நிற நெற்றியில் சிகப்பு குங்குமம்….

கொடி இடை தட்டும் கார்குழல்…

தங்கத்தில் செய்து வைத்த சிலையா?

ஆம்… அவள் தான் அந்த வைர மங்கை….

பெண்ணோ, கற்பனையோ, இல்லை

வரைந்து வைத்த ஓவியமோ….

பார்ப்பவர் வியப்பில் மூழ்கினரோ

அறியவில்லை கடவுளும்…

கடவுளே விதிவிலக்கில்லை எனும்போது

நான் எம்மாத்திரம்???...

பெண்ணாக பிறந்து வளர்ந்த போதிலும்

பொறாமை என்று ஒன்று கொண்டேன் என்றால்

அது அவளிடம் மட்டுமே…

ஆம்… பெண் குழந்தையை விரும்பும் உனக்கு

பரிசளிக்க இந்த இள வயது நங்கையை

கண்ணாடியில் தீட்டினேன் ஓவியமாய்…

நேரில் நீ வர முடியாத நிலையில்

உன் வீட்டிற்கே அனுப்பினேன் பயந்த நெஞ்சத்துடன்…

பாதுகாப்பாய் உன் கைசேர வேண்டுமென…

அச்சம் இதயத்தை உலுக்கி ஆக்கிரமித்திருந்த வேளை

நீயும் சொன்னாய் பரிசு கிடைத்தது என்று…..

சந்தோஷம் உள்ளத்தில் கொப்பளித்தாலும்

ஒருபுறம் இனம் புரியாத கவலை

அதை சுற்றி வளைத்ததையும் உணரமுடிந்தது…

இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கேட்டேன்

நன்றாக இருக்கிறதா என?...

ஆம்… என நீயும் சொன்ன நொடியில்

ஓவியத்தின் புகைப்படத்தை எனக்கு அனுப்ப வேண்டினேன்…

உடனேயே மறுத்தாய் அது முடியாதென…

ஏனென நானும் பிடிவாதமாய் கேட்க

நீயும் பிடிவாதமாய் இருந்தாய்…

கடைசியில் என் கெஞ்சலுக்கு செவிசாய்த்து

சொன்னாய் நெஞ்சை உலுக்கும் வார்த்தையை…

கண்ணாடி ஓவியம் உடைந்தே கைசேர்ந்ததென…

எந்த நெற்றியை நீ ஆசையாக வருடுவாய் என

எண்ணி எண்ணி எழுந்த பொறாமையையும் தட்டிவிட்டு

கண்ணும் கருத்துமாய் உயிர் கொடுத்தேனோ,

அந்த பிறை நெற்றி உடைந்து நொறுங்கி இருக்க…

அவளின் உடம்பின் சில பகுதிகளிலும் கீறல்கள் தொடர்ந்திருக்க

சிதறி தான் போனேன் நீ சொன்னதை கேட்டு…

இதற்கு தான் நேரில் தருகிறேன் என்றேன் நீ கேட்டாயா?...

என குமுறிவிட்டு அழுத என்னை சமாதானம் செய்தாய்

விடு… அழாதே… லேசாக தானே உடைந்திருக்கிறது…

நான் பத்திரமாக வைத்திருப்பேன் என….

சொல்லிய நொடியில் வேண்டாம் என்றேன் பதற்றத்துடன்…

ஏன் என்ற உன் ஒற்றை கேள்விக்கு

சிதைந்த கண்ணாடி வீட்டிற்கு ஆகாதென்று கூற, திட்டினாய்…

அதெல்லாம் எதுவுமில்லை… நான் தூர போடமாட்டேன்

என்ற உன் வார்த்தைக்கு தடுப்பு போட்டேன்…

தூர போட்டே ஆக வேண்டுமென அடம்பிடித்து….

சரி என்ற பதில் வரவே, எதுவும் பேசாது உன்னிடமிருந்து நகர்ந்தேன்…

அறையில் இரவின் தனிமையில், கண்களில் கண்ணீர்,

உதட்டில் அரற்றல்கள், கைகளில் நடுக்கம்,

அடிநெஞ்சின் ஆழத்தில் ஓயாத கதறல்கள்….

ஆசை ஆசையாய் உனக்கு அளித்த முதல் பரிசிற்கு

இந்த அவலநிலை நேர்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் என்ன?...

விழி மூடி கடவுளை சில நிமிடங்கள் நினைக்கையில்

கடவுள் என்னைப் பார்த்து கேட்பது போல் இருந்தது…

உடைந்தது கண்ணாடியா?... இல்லை… உன் மனமா??... என்று…

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.