(Reading time: 1 - 2 minutes)

எழுந்து வா என் தோழி - தங்கமணி சுவாமினாதன்

வெள்ளைப் பறவை ஒன்றுச்

சின்னமுள் குத்திச்

சிறகுகள் சிதைந்து போக

விண்ணில் பறக்காமல்

கண்ணில் நீர்கோர்த்துக்

கரையில் சாய்ந்ததுபோல்

நெஞ்சினில் துயர் சேர்த்து

விழிகளில் நீர் தேக்கி..

ஒற்றைக் கால் மீது

மற்றொரு கால் இணைத்து

உலகத்துக் கவலையெல்லாம்

மொத்தக் குத்தகையாய்

இறைவன் கொடுத்ததுபோல்

கன்னத்தில் கை வைத்துக்

கவலையாய் அமர்ந்திருக்கும்

என் முதுமைத் தோழியே

நம்மைப்போல் உலகில்

நூராயிரம் தோழியர்

அன்றாடம் அவரவர்-சந்திக்கும்

அவலங்கள் ஆயிரம் ஆயிரம்

ஆயினும் அனைவரும்

அழுது புலம்பி ஆகப்போவதென்ன?

 

முதுமையால் நம் முகத்தில் சுருக்கம்

முதுகில் வளைவு-ஆயினும் என் தோழி

அடிக்க அடிக்க இரும்பு எஃகாய் ஆவது போல்

அனுபவப்பட்டுப் பட்டு நம் மனம் உறுதியாய்-

ஆனதன்றோ?

எழுந்திரு என் தோழி...

உனக்கும் எனக்குமாய் 

நான்கு கரங்கள்..ஒன்றால் ஒன்றைப் பற்றி

உள்ளத்தால் உள்ளம் தேற்றி

காலணியை உதறுதல் போல்

கவலைகளை உதறித்தள்வோம்

நாம் அழப்பிறக்கவில்லை என் தோழி

மறத்தமிழ்ச்சி நாம்..உலகை மாற்றப்-

பிறந்துள்ளோம்

நம் அனுபவங்கள்-இவர்களுக்கு-

உரமாகட்டும்..

வரும் சந்ததியர் வாழ்வு வளமாகட்டும்.

எழுந்து வா என் தோழி......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.