(Reading time: 2 - 3 minutes)

கவிதை - நாம் பறவைகளல்லவே.. - சாகம்பரி

migratingBirds

தாகம் தீர்க்கும்  தண்ணீர் மறுத்து

பூமியடியோ தவித்து நிற்க…

மூச்செடுக்கும் காற்று மறந்து

நெல்வயல் நெடுஞ்சாலை மறந்து

பேச்சு சிரிப்பு அழுகை  மறந்து

அத்து போன சொந்தம் விட்டு

இத்து போன துரவை விட்டு

பஞ்சம் பிழைக்க வந்த நாங்கள்.

நாள் கூலிக்கோ சுமைகூலிக்கோ

நாள் முழுக்க விலை கூவியோ

வியர்வையையும் விற்று…

பகல் கடத்தி இரவு வரும்போது

கையில் இருக்கும் சில்லறையில் 

உணவெடுத்து உயிர் பிழைப்போம்

 

ஆயினும்..

பச்சைவயல் வெள்ளிநீரோடை

பூவும் பிஞ்சுமான வயலோர செடிகள்

கனவில் வந்து கை அலைந்து தேட

சாக்காடு உறக்கத்தில் மனம் சாகும்

காடு காக்கும் எங்கள் கருப்ப சாமி

மாயமான நினைவுகளை மீட்டெடுத்து

கவலையழித்து  வாழ்வு தாராதோ….

ஆனால்…

 

இடம் விட்டு பெயரும் பறவைகள்..

கோடை ஒரிடம் குளிரில் வேறிடம்

இறக்கை விரித்து கடந்து செல்லும்

மீண்டும் மீண்டும் வந்து போகும்

வட்டம்போட்ட வாழ்க்கை வாழும்

சென்ற முறை புகல் தந்த இடம்

கவலையற  கண்டு இளைப்பாறும்

அவை …

உறைவிடத்தை தொலைத்தில்லை

நினைவுகளை இழந்ததுமில்லை

கனத்த கண்கள் உண்மை சொல்ல..

மன்னராக மகாராணியாக மந்திரியாக

கூடிக் கொண்டாடிய அரசவை காலம்

முதுமக்கள் தாழிக்குள் மறைந்திட

அதனை-

அகழ்வாய்ந்து அளைந்தெடுக்க பயந்து

இரவையும் இதயத்தையும் பொத்தியே

போன காலம் போகட்டும் என்று

கால்வலிக்கு கவனமாக மருந்திட்டு

குறும் புள்ளியில் குறிக்கோள் வைத்து

தன்னையே மாயமாக்கும் புலம் பெயர்தல்…..

ஏழ்மைக்கு  மட்டுமே சாத்தியம். 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.