(Reading time: 2 - 4 minutes)

ஒரு நொடி… - லதா

Oru nodi

ம்மா” கொஞ்சலாக அழைத்து வந்த என் மூன்று வயது குழந்தையை பார்த்து புன்னகைக்க கூட நேரமில்லாமல் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பினேன்.

“அம்மா ஈவ்னிங் வந்து பேசுறேன் கண்ணா”

வழக்கமான என் பதிலில் அந்த பிஞ்சு முகம் வாடி போனது கண்ணில் பட்டாலும் நிற்க நேரமில்லாமல அவசரமாக கிளம்பினேன். இன்று முடிக்க வேண்டிய நிறைய வேலைகள் நிலுவையில் இருந்தன.

குழந்தையுடன் சில மணி நேரமாவது செலவிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நானும் நினைப்பதுண்டு ஆனால் இன்று நேற்று என்றில்லாமல எப்போதுமே இதே ஓட்டம் தான்.

அலுவலகத்தை அடைந்த பின் மற்றவை எல்லாம் என் கருத்தில் இருந்து மறைந்து போனது.

மாலையில் சோர்வுடன் பேருந்தில் ஏறி வீட்டின் அருகில் இருந்த நிறுத்தத்தில் இறங்கினேன். அங்கே இருந்து பத்து நிமிடங்கள் நடக்க வேண்டும் என்ற நினைவே சோர்வை தந்தது. போய் வேலையாள் செய்து வைத்திருக்கும் இரவு உணவை முடித்து விட்டு அப்படியே தூங்க முடிந்தால் நன்றாக தான் இருக்கும். அனால் இன்று அலுவலகத்தில் முடிக்க முடியாமல் போன சில வேலைகள் காகிதங்களாக கையில் இருந்தன. வேலையை பற்றி நினைக்கும் போதே காலையில் வாடி போன குழந்தையின் முகம் மனதில் நிழலாடியது. ஆனால் இன்று(ம்) அவளுடன் என்னால் நேரம் செலவிட முடியும் என்று தோன்றவில்லை. மனதுள் அலுப்பு தோன்றியது.

இருபக்கமும் கவனித்து விட்டு சாலையை கடக்க நான் முயலும் போது, என் கைப்பையில் இருந்த கைபேசி அழைக்கும் ஒலி கேட்டது. ஒரு நொடி நின்று அதை வெளியே எடுத்தேன். அதே நேரம் ஒரு இரு சக்கர வாகனம் மிக வேகமாக கிட்டத்தட்ட என்ன உரசியபடி சென்றது.

எதற்காக இந்த கண் மண் தெரியாத வேகம்?

அவசரமாக அந்த சாலையை கடந்து ஓரமாக வந்த போதும், ஒரு நொடியில் என்ன நடந்திருக்கும் என்று உணரவே எனக்கு சில நிமிடங்கள் ஆனது. ஒரு நொடியில் என் உயிர் பிரிந்திருக்கும்!

அப்படி மட்டும் நடந்திருந்தால்?

ம்மா!”

ஓடி வந்து கட்டிக் கொண்ட என் குழந்தையை நானும் அணைத்துக் கொண்டேன்.

“எனக்கு கதை சொல்லி தாங்க அம்மா”

மற்ற நாட்களை போல், அம்மாக்கு நிறைய வேலை இருக்கு நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லாது,

“சரி கண்ணா, அம்மா சொல்லி தரேன்” என்று அவளை மேலும் இறுக்க அணைத்துக் கொண்டேன்.

பல வருடங்களாக நான் கற்காமல் இருந்த பாடத்தை ஒரு நொடி எனக்கு கற்றுக் கொடுத்திருந்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.