(Reading time: 6 - 11 minutes)
Muthu Sippi
Muthu Sippi

"ஹும்... ஊருக்குக் கிளம்புகிறீர்கள். ஆமாம்..... ஆபீஸ் என்றும், வேலை என்றும் ஒன்று இருக்கிறதே. எத்தனை நாட்களுக்கு ஒரு இடத்தில் இருக்க முடியும்? அவரவர் வேலையை அவரவர் செய்தாக வேண்டுமோ இல்லையோ ஹும்..."

  

தங்கையைத் தனியாக விட்டு விட்டுப் போகிறாயே அவளுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டாம் நீ' என்று கேட்பதற்குப் பதிலாக அவர் ஏதோ சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பது கோமதிக்குப் புரிந்து போயிற்று.

  

"அவரவர் வேலையை அவரவர் இருக்கிற இடத்தில் இருந்து கொண்டுதானே மாமா செய்ய வேண்டும்? இன்னொரு இடத்தில் வந்து உட்கார்ந்து செய்ய முடியுமா? அதுவும் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு நாள் கூட வெளியே போக முடியாது. பத்து தினங்களாக இங்கே இருந்ததே மேல். இன்னும் எத்தனை நாட்கள் இருப்பது?" என்று கேட்டு விட்டுக் கோமதி. அருகில் நின்று கொண்டிருந்த பவானியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

  

இந்தப் பத்து தினங்களில் கல்யாணம் கோமதியின் சுபாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர். வீட்டிலே பிறந்த பெண். மணத்தை இழந்து வாடும்போது தன்னுடைய சுகத்தில் ஒன்றும் குறைவு ஏற்படக்கூடாது என்று நினைப்பவள் கோமதி.

  

கல்யாணராமன் கோமதிக்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அவருடைய சிந்தனை வேறு எங்கோ லயித்துக் கிடந்தது. உற்றாரும் உறவினரும் இருந்தும், ஒரு பெண்ணுக்கு தனிமை என்பது எப்பொழுது ஏற்படுகிறது என்று சிந்திப்பதில் முனைந்திருந்தார் அவர். உடன் பிறந்த அண்ணனும், பெற்று வளர்த்த பெற்றோரும் இருந்தால்கூட. கட்டிய கணவன் இல்லாமல் போகும் போது அவள் தனிமையில் சிக்கி வாடுகிறாள்.

  

ஒரு பெரிய நந்தவனம். அதில் மல்லிகை, இருவாட்சி, ரோஜா, கனகாம்பரம், மருக்கொழுந்து முதலிய மலர்ச் செடிகள் நிறைந்திருக்கின்றன. தோட்டக்காரன் ஒரு முல்லைக் கொடியை நட்டுப் பயிர் செய்கிறான். கொடியும் செழித்து வளர ஆரம்பிக்கிறது. கப்பும் கிளைகளுமாகப் புதருடன் மண்டி வளருகிறது. அப்பொழு-தெல்லாம் தோட்டக்காரன் கவலைப்படுவதில்லை. எல்லாச் செடிகளையும் போலச் செழுமையாக வளருகிறது என்றே நினைத்து ஆறுதல் அடைகிறான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.