(Reading time: 23 - 45 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

வந்தான். கற்பகமும் வருவதாகத் தன் தாயையும் அத்தையையும் கேட்டுப் பார்த்தாள்; வற்புறுத்திப் பார்த்தாள். "அறியாத பெண். நீ அங்கெல்லாம் போகக்கூடாது. ஏதாவது காற்று இது அது இருக்கும் இடம். அவர்கள் ஆண்பிள்ளைகள் போய் வரலாம். நீ போகக் கூடாது" என்று சொல்லி அவளைத் தடுத்து விட்டார்கள். என் மனம் கற்பகத்திற்காக இரக்கம் கொண்ட போதிலும், அவர்கள் சொன்ன காரணத்தை எண்ணிப் பேசாமல் இருந்தேன்.

  

ஆனால் அங்கே போன இடத்தில் கற்பகத்தின் வயது உள்ள பெண்கள் இருவர் ஆடு மேய்த்துக்கொண்டு திரிவதைக் கண்டேன். அவர்கள் அஞ்சாமல் உலவும் இடத்தில் கற்பகம் வந்தால் தீங்கு என்ன என்று எண்ணினேன் அதைச் சந்திரனிடம் சொல்லவில்லை.

  

தாழை மரங்கள் நல்ல நிழல் தந்து அடர்த்தியாக இருந்தன. அங்கங்கே சில பூக்கள் காணப்பட்டன. அவற்றை ஒருவன் துறடு கொண்டு பறித்துக் கொண்டிருந்தான். மலர்ந்த பூக்களின் மணம் இன்பமாக இருந்தது. இலையெல்லாம் மடலெல்லாம் முள்ளாக உள்ள மரம்; ஒழுங்கும் அழகும் இல்லாமல் வளரும் மரம், இவ்வளவு மணமுள்ள பூக்களைத் தருகிறதே என்று வியந்தேன்.

  

ஓடையில் தண்ணீர் மிகுதியாக இல்லை. சலசல என்று மெல்லிய ஒலியோடு நீர் ஓடிச் சென்று கொண்டிருந்தது. ஒரு பாறையின் மேல் பரவலாக ஓடியது, அங்கெல்லாம் பாசி மிகுதியாக இருந்தபடியால் கால்வைத்து ஏறுவதற்குத் தயங்கினேன். மாசன் அஞ்சாமல் பாசி இல்லாத இடமாகக் கால்வைத்து அழைத்துச் சென்றான். ஒரு சின்னக் கோயில் காணப்பட்டது. கன்னிக்கோயில் என்று சொன்னான். தேங்காய் நார் அங்கங்கே இருந்தபடியால், யாரோ வந்து பூசை செய்துவிட்டுப் போகிறார்கள் என்று தெரிந்தது. ஒரு பாறை மேல் உட்கார்ந்து மேலே பார்த்தோம். அந்த இரண்டு பெண்களும் அடுத்த பெரிய பாறைமேல் மடமட என்று ஏறிக் கொண்டிருந்தார்கள்.

  

"நாமும் அங்கே போவோம். அங்கேயிருந்து கூவினால், எதிரே இருக்கும் மலை அப்படியே கூவும்" என்றான்.

  

சரி என்று சந்திரனும் நானும் எழுந்தோம். ஏறிச் சென்றோம். அவன் சொன்ன இடத்தில் நின்றோம். அங்கிருந்து ஓ என்று கூவினான். எதிரே இருந்த மலைப் பகுதியிலிருந்து ஓ என்ற ஒலி திரும்பக் கேட்டது. சா-மீ என்று கூவினான். அதுவும் அப்படியே எதிரொலியாக கேட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.