கொடுத்துவிட்டேன். கொடுத்திருக்கக் கூடாது என்று நம் அம்மா கண்டித்தார்கள். போகட்டும் என்று கொடுத்து விட்டேன். இனிமேல் என் சொத்து அன்பும் அறிவும் தான்."
உள்ளம் உருகி நின்றேன்.
"என்னைப் பற்றிக் கவலைப்படாதே, தம்பி, உடம்பில் பலம் இருக்கிறவரையில் உழைத்துச் சாப்பாடு தேடிக் கொள்வேன். அதற்குப் பிறகு நீங்கள் இருக்கிறீர்கள்" என்றார்.
அந்தக் குரலில் துயரம் இருந்தது என்று சொல்வதற்கில்லை. நம்பிக்கை இருந்ததாகத் தெரிந்தது.
என் தங்கை மணிமேகலை அந்த ஆண்டில் பத்தாவது வகுப்பிலும், தம்பி பொய்யாமொழி ஏழாவது வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய படிப்பு எப்படி இருக்கிறது என்று அறிவதற்காக, அவர்களின் அலமாரிகளை ஆராய்ந்தேன். என்ன என்ன புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று பார்த்தேன். மணிமேகலையின் அலமாரியில் திரு.வி.க. நூல்களும் காந்தியடிகளின் நூல்களும் விவேகானந்தரின் நூல்களும் பல இருந்தது கண்டேன்.
தங்கையை அழைத்து, "நீ பத்தாவது படிக்கிற பெண், இந்தப் பொதுப் புத்தகங்களைப் படித்துக் காலம் போக்கிக் கொண்டிருக்கலாமா? இவ்வளவு புத்தகங்கள் வாங்கக் காசு ஏது?" என்று சிறிது கடுமையாகக் கேட்டேன்.
"எல்லாம் பாக்கியம் அக்காவின் புத்தகங்கள். மாதம் மூன்று ரூபாய் சேர்த்து ஏதாவது புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கிறார். நூல் நிலையத்திலிருந்து சிலவற்றை எடுத்த வரச் சொன்னார். அவற்றையும் படிக்கிறார். அக்காவுக்கு இடம் இல்லாததால் இங்கே அலமாரியில் ஒரு பக்கத்தில் வைத்திருக்கிறார்" என்றாள்.
"சரி. போ. அக்கறையாகப் படி" என்று சொல்லி அனுப்பி விட்டேன்.
எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மா நெருங்கி வந்து, "பாக்கியம் முன்போல் இல்லை அப்பா! நீங்கள் படிப்பதைவிட மிகுதியாகப் படிக்கிறாள். அவளுடைய ஒரு