(Reading time: 14 - 28 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

பார்வையிலும் தளர்ச்சி இருந்தது. கவலை முதுமையை விரைந்து கொண்டு வருதலை உணர்ந்தேன். சந்திரனுடைய முகத்தை நன்கு கவனித்தேன். அவன் முன்னைவிட மிகுதியாகப் பேசினான். ஆனாலும் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது இருந்த உள்ளக் கலப்பு இல்லை. ரயில் பயணத்தின்போது அன்பு இல்லாமலே ஓயாமலே பேசுகின்றவர்கள் இல்லையா? அந்தப் போக்கில் இருந்தது, சந்திரனுடைய பேச்சு. வேலைக்காரர்களைப் பற்றியும் விலைவாசியைப் பற்றியும் பிள்ளை வீட்டுக்காரரின் மந்தமான போக்கைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தான். சாமண்ணா ஒருமுறை என்னைத் தனியே அழைத்துச் சென்று, "பிள்ளை எப்படி? நன்றாகத் தெரியுமா?" என்று கேட்டார். கடிதத்தில் எழுதிய கருத்துக்களையே திரும்பச் சொன்னேன். மகிழ்ந்தார். பிறகு சந்திரனைப் பற்றிச் சில குறிப்புகள் சொன்னார். "திருந்துவான் என்று பார்த்தேன். திருந்துவதாகத் தெரியவில்லை. குடும்பத்திற்குப் பிள்ளை என்று இருக்கிறான். அவ்வளவே தவிர நல்ல பெயர் எடுப்பதாகத் தெரியவில்லை. பொருளிலும் கருத்து இல்லை. வரவு செலவு பார்த்து வாழக் கற்றுக் கொள்ளவில்லை. கேட்டால் உதறிவிட்டுப் போய் விடுவானோ என்று பயமாக இருக்கிறது. அவனுக்கு வந்த மனைவியோ தங்கம். உரிமை கொடுக்கத் தெரியாதவர்கள், அதிகாரிகளாய் உயர்வோடு நடப்பார்கள்; அது முடியாதபோது அடிமைகளாய்ப் பணிந்து நடப்பார்கள் என்று அறிஞர் ஒருவர் சொன்னது பொருத்தம்தான்."

  

என்னிடமே உரிமையோடு அன்பாகப் பழக முடியாதவனாக இருக்கிறானே. அன்பும் உரிமையும் இருந்தால், எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவானே, நீலகிரியிலிருந்து இவனை அழைத்து வந்தபிறகு இன்றுதானே பார்க்கிறேன்! அன்பாகப் பழக வேண்டும் என்ற ஆர்வமும் நன்றியுணர்ச்சியும் இருந்தால், விடுமுறையிலாவது வாலாசாவுக்கு வந்திருக்கக் கூடாதா? திருமணம் ஆனபிறகு மனைவியோடு வெளியூர்க்குப் போகவேண்டிய காரணத்தை முன்னிட்டாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா என்று திண்ணை மேல் உட்கார்ந்தபடி பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.

  

"யார்? வேலுவா?" என்று அப்போது ஆசிரியர் வந்தார். "எங்கே வராமல் நின்றுவிடப் போகிறாயோ என்று எண்ணினேன். வந்தது நல்லது. வரப்போக இருந்தால் தான் அன்பும் உறவும் வளரும்" என்றார்.

  

"தொடர்பும் பழக்கமும் இல்லாதிருந்தாலும் உண்மையான நட்பு நீடிக்கும் என்று திருவள்ளுவர் கூறுகிறாரே" என்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.