மறந்து நானும் சிறு பையன் போல் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன். உண்மையாகவே, அவள் பேசச் சலிக்கவில்லை; நான் கேட்கச் சலிக்கவில்லை. அவள் பேசிய பழைய பேச்சையே பேசினாலும் அதைக் கேட்பது எனக்கு இன்பமாகவே இருந்தது. தன் தாய் வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்களைப் பற்றிப் பேசுவாள். அந்த ஊரில் சில பெண்கள் கணவன்மாரோடு சண்டை போடும் வகைகளைப் பற்றிப் பேசுவாள். என்னுடைய தங்கையும் அவளுடைய கணவரும் பேசும் முறைகளையும் பழகும் முறைகளையும் பற்றிச் சொல்வாள். வாலாசாவில் கண்ட பலவகைப் பெண்களைப் பற்றியும் மதிப்புரை வழங்குவாள். பாக்கியத்தைப் பற்றி அடிக்கடி சொல்வாள். அவரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தனி மதிப்புத் தந்து அன்போடு பேசுவாள். சில சமயங்களில் அவருடைய திக்கற்ற வாழ்வை நினைத்து இரக்கத்தோடு பேசுவாள். அவர் தனக்குச் சொல்லிக் கொடுத்த சமையல் பாகங்களைப் பற்றி எனக்குச் சொல்வாள்; நான் ஒன்றும் விளங்காமலே கேட்டுக் கொண்டிருப்பேன். மிளகுவடை, கோதுமை அல்வா, தேன் குழல் இவற்றைப் பாக்கியம் கைப்படச் செய்தால் தனிச் சுவையாக இருக்கும் என்பாள். "உனக்கு என்ன தெரியும்? நீ நேற்று வந்தவள். நான் குழந்தையாக இருந்தது முதல் அவர் கைப்படச் செய்து கொடுத்த தின்பண்டங்களைச் சாப்பிட்டுப் பழகியிருக்கிறேன்" என்று நானும் என்னுடைய இளமை அனுபவங்களை மெல்லச் சொல்வேன். வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பதில் பாக்கியத்துக்கு யாரும் இணை இல்லை என்று என் மனைவி சொன்னபோது கேட்ட என் உள்ளம் குழைந்தது. அறிவுத்திறன் உடையவர்கள் எந்தச் சிறு வேலையில் ஈடுபட்டாலும் தனிப்பெயர் பெற முடிகிறது என உணர்ந்தேன். பாக்கியம் தோட்டத்தில் நடத்தும் பள்ளிக் கூடத்தைப் பற்றி மனைவி பல குறிப்புகள் சொன்னாள். எந்தப் பையனையும் பெண்ணையும் அடிக்காமலே அன்பாகச் சொல்லித்திருத்தியது பற்றிப் பல நிகழ்ச்சிகளைச் சொன்னாள். பக்கத்துத் தெருவில் ஒரு பையன் பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்காமல் பள்ளிக்கூடத்துக்கும் போகாமல் அடம் பிடித்தானாம். அவனை முதலில் பாக்கியம் சேர்த்துக் கொள்ளவில்லையாம். "பிள்ளைகள் மிகுதியாக இருக்கிறார்கள். இடம் இல்லை. என்னாலும் கவனிக்க முடியவில்லை" என்று பாக்கியம் சொல்லி மறுத்து விட்டாராம்.
கடைசியில் பெற்றோர் என்னுடைய தாயிடம் வந்து முறையிட்டார்களாம். தாய் சிபாரிசு சொல்லவே சரி என்று பாக்கியம் சேர்த்துக் கொண்டாராம். அந்தப் பையனைத் தோட்டப் பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்து, படி என்று சொல்லவே இல்லையாம். அவன் பக்கத்தில் உட்கார்ந்து, கதைகளே சொல்லிக் கொண்டிருந்தாராம். இப்படி இரண்டு வாரம் கதை சொல்லிச் சொல்லி அவனுடைய மூளைக்கு உணவு கொடுத்த பிறகு ஒரு நாள் அவனே பெற்றோரைக்