வேலை தீர்ப்பாடு இல்லை. நீங்கள் வரமாட்டீர்கள். அந்த வீட்டுப் பெரியம்மா போகிறார்களாம். நான் அவர்களோடு போகட்டுமா?" என்று அனுமதி கேட்டாள். அவள் விருப்பம்போல் இசைந்து போகச் செய்தேன். ஆனாலும் அவளுடைய சினிமா வேட்கை தீரவில்லை. போன ஆண்டில் பார்த்த பழைய படமே திரும்பி வந்தால், மறுபடியும் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். வேண்டா என்று தடுத்தால் உடனே அவளுடைய முகம் மாறுவதைக் கண்டேன். அது எனக்கும் வருத்தமாக இருந்தது. இந்த வகையில் அவளைத் திருத்த முடியாதுபோல் இருக்கிறதே என்று அவள் விருப்பம் போல் விட்டேன்.
ஓய்வு கிடைத்தபோது நானே அவளைச் சினிமாவுக்கு அழைத்துச் சென்றேன். ஒருமுறை அடுத்தடுத்து மூன்று நாள் படம் பார்க்கப் போயிருந்தோம். அப்போது நான் விளையாட்டாக ஒரு தந்திரத்தைக் கையாண்டேன். வீட்டுக்கு வந்த பிறகு, சினிமா நடிகைகளைப் பற்றியே புகழ்ந்து பேசினேன். இன்னாருடைய முகவெட்டு இப்படி, கண் இப்படி, புருவத்தின் அழகே தனி, கன்னமும் உதடுகளும் அமைந்த அமைப்பே சிறப்பு. மார்பு இப்படி, வயிறு இப்படி கைவிரல்கள் இப்படி, கழுத்தின் அழகு இப்படி, மூக்கின் எழில் இப்படி, இன்ன நடிகையின் கூந்தல் அழகே அழகு, பேசும்போது அவளுடைய உதடுகளின் அசைவு என்ன அழகு, நடக்கும்போது என்ன ஒயில், கைகளை வீசும்போது அதுவே ஒரு தனிக்கலை, அப்படி எட்டிப் பார்க்கும்போதே உயிர் போகும்போல் இருக்கிறது. ஒரு சிறு கண்சிமிட்டுக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடு ஆகாது என்று இப்படியே நாள்தோறும் ஒரு நடிகையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவள் ஒரு நாள் பொறுத்தாள், மறுநாளே என் பேச்சில் வெறுப்புக் காட்டத் தொடங்கினாள். பிறகு நான் இந்தப் பேச்சில் ஈடுபட்டபோதெல்லாம் எழுந்து போய்விட்டாள். சினிமாப் படங்களைப் பற்றி எந்நேரமும் பேசிக் கொண்டிருந்தவள், என் போக்கு இவ்வாறு ஆன பிறகு அந்தப் பேச்சையே விட்டுவிட்டாள். நானோ விடவில்லை. இந்த விளையாட்டின் எல்லைக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று முனைந்தேன். ஒரு நாள் அவள் உணவு பரிமாற வந்தபோது, அவளுடைய கால்களைப் பார்த்தபடியே இருந்தேன். "என்ன, சினிமா நட்சத்திரங்களின் நினைப்பா?" என்றாள். "ஆ ஆ! அந்த படத்தில் பார்த்த நடிகை உன்னைப் போல் நடந்து வரும்போது ஆ ஆ! என்ன அழகு, என்ன ஒய்யாரம்! அந்தக் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. ஒரு ரோசாப்பூவை ஒய்யாரமாகப் பறித்து அவள் தன் தலையில் சூட்டிக் கொண்டபோது அந்தக் கையை எடுத்ததே ஒரு கலை! அந்த விரல்களின் வளைவு நெளிவு அடடா! பூவைத் தலையில் சூடிக்கொண்டே அவள் திரும்பிப் பார்த்த பார்வை! அடடா! உயிரே கொள்ளை போகிறாற் போல் இருந்ததே!" என்றேன்.