சிரித்தேன். "படித்தால் விளங்குகிறதா?" என்று கேட்டேன்.
"திருக்குறள் பாதி விளங்குகிறது. பெண்ணின் பெருமை விளங்கவில்லை. உங்கள் தங்கையைப் பத்தாவது வரையில் படிக்க வைத்தார்கள். என்னை யார் அப்படிப் படிக்க வைத்தார்கள்? கிராமப் பள்ளிக்கூடத்தில் எட்டாவதோடு சரி" என்றாள்.
"அதைப் பற்றிக் கவலை இல்லை. பாக்கியம் எத்தனையாவது படித்தார்? படிக்கப் படிக்கத்தானே அறிவு வளரும்" என்றேன்.
உடனே, "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி" என்ற குறளைச் சொன்னாள்.
எனக்கு வியப்பாக இருந்தது. "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி சொல்லும் என்பதுபோல் இருக்கிறதே பாக்கியத்தோடு பழகியதால்-"
நான் சொல்லி முடிப்பதற்குள், "அந்த அம்மா அடிக்கடி சொன்ன குறள் இது. அதனால் மனப்பாடம் ஆகிவிட்டது" என்றாள்.
இருந்தாலும், புத்தகப் படிப்பில் அவளுக்கு, ஆர்வம் இல்லை. போகப் போக அதை நன்றாக உணர்ந்தேன். புத்தகப் படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், அறிவுப் பசி மட்டும் இருந்தது. செய்தித்தாள் படித்து ஏதாவது சொன்னால், ஆர்வத்தோடு கேட்பாள். வார இதழிலிருந்து ஏதாவது கதை படித்துச் சொன்னால் கேட்பாள். நாளடைவில் அவளே அந்த இதழ்களில் இருந்த கதைகளைப் படித்துப் பழகினாள். பழக்கம் விடவில்லை. வார இதழ்கள் எப்போது வரும் என்று காத்திருந்தாள். சிறு கதைகளைவிடத் தொடர் கதைகளில் ஆர்வம் காட்டினாள். போன வாரத்தில் கதைத் தலைவன் இந்த ஊருக்குப் போனான். தலைவி இப்படி இருந்தாள். இந்த வாரத்தில் என்ன நடக்குமோ தெரியவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதைவிட ஆர்வம் மிகுதியாக இருந்த ஒரு துறை சினிமா என்று தெரிந்து கொண்டேன். சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசையை அவள் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். நெருங்கிப் பழகிய பிறகு, "அங்கே புதுப்படம் ஓடுகிறதாமே இங்கே புதுப்படம் ஓடுகிறதாமே. வாங்க போகலாம்" என்று என்னை வருமாறு வற்புறுத்தலானாள். எனக்கு வேலை நெருக்கடி மிகுதியாக இருந்த நாட்களில் "உங்களுக்கு