"அழகு இன்னது என்று தெரியாத களி மண் நீ! யாரைக் கேட்டு அதை அடுப்பில் போட்டாய்? அதற்காகவா நான் கேட்டு வாங்கிவந்து, கூடத்தில் மாட்டினேன்? உனக்கு அப்படிப்பட்ட அழகு இல்லையே என்ற பொறாமையால் செய்திருப்பாய்? இருக்க இருக்க உன் மூளையே மாறுகிறது" என்று பொய்க் கோபத்துடன் பேசினேன்.
"நான் அப்படித்தான் செய்வேன். உங்கள் நடத்தையே எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. ஊருக்கு வாங்க. பாக்கிய அம்மாவிடத்திலே மாமியிடத்திலே சொல்லிப்பார்க்கிறேன். யாருக்கு மூளை மாறிவிட்டது என்று அவர்களே சொல்லட்டும்" என்று அழத் தொடங்கினாள்.
"அழகான படம், கூடத்துக்கு அலங்காரமாக இருக்கும் என்று வாங்கிக் கொண்டு வந்தேனே" என்று கொஞ்சம் தணிந்த குரலில் சொல்லி வருந்தினேன்.
"பார்க்கிறவர்களின் மனம் கெடுமானால், எவ்வளவு அழகான படமாக இருந்தாலும் வாழ்கிற வீட்டுக்குள் வரக்கூடாது. உங்களுக்குத் தேவையானால், என்னை ஊருக்கு அனுப்பிவிட்டு, அப்புறம் என்னாவாவது செய்யுங்கள்".
இதற்கு மேல் போகக்கூடாது என்று நடிப்பை நிறுத்திக் கொண்டேன். உடனே உண்மையைச் சொன்னாலும் பயன்படாது என்று அமைதியாக இருந்தேன்.
மூன்று நாள் கழித்து, "இன்று சினிமாவுக்குப் போகலாமா?" என்றேன்.
"வேண்டா. நான் வரவில்லை" என்றாள்.
"என்ன அவ்வளவு வெறுப்பு"
"ஆமாம். வெறுப்புத்தான். அதை பார்த்துக் கெட்டுப் போவதைவிட வீட்டோடு நல்லபடி இருக்கலாம்."
"நான் வாயால் அழகைப் பாராட்டியது குற்றமா? மனத்திற்குள்ளே நினைத்துக் கொண்டு மனத்திலேயே அவர்களின் அழகைப் போற்றிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். எல்லாரும்