அப்படித்தான் இருக்கிறார்கள். நான் வெளிப்படையாக உன்னிடம் பாராட்டிச் சொன்னது குற்றம். பெண்கள் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள். ஆண்கள் அழகை அழகு என்று வாயால் சொல்கிறார்கள். அது குற்றமா?"
அதற்கு மறுமொழியாக என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.
இரண்டு நாள் கழித்து மறுபடியும் படம் பார்க்க அழைத்துப் பார்த்தேன். முடியவில்லை. மறுநாள் முயன்றேன். அன்றும் மறுத்துவிட்டாள்.
எல்லாம் பழங்கதையாய்ப் போகட்டும் என்று இரண்டு வாரம் சும்மா இருந்தேன். பிறகு, இனி அப்படி நடிகைகளின் அழகில் மயங்குவதில்லை என்று உறுதிமொழி கொடுத்து, சினிமாவுக்கு வருமாறு அழைத்தேன். அன்று மனம் இறங்கி வந்தாள். நானும் பழைய நடிப்பு ஒன்றும் இல்லாமல் நடந்து கொண்டேன். இருந்தாலும், வீட்டுக்கு வந்த பிறகு, "ஆண்களையே நம்ப முடியாது. நீங்கள் அந்த நடிகைகளின் அழகை அடிக்கடி மனத்திற்குள் நினைக்கிறீர்கள் அல்லவா?" என்று கேட்டாள்.
"எனக்கு இப்போது வேலை மிகுதி. ஓய்வு ஏது? அவர்களின் அழகைப் பற்றிய நினைப்பே வருவதில்லை" என்றேன்.
"கடவுள் உங்களுக்கு எந்த நாளும் ஓயாத வேலை கொடுத்தபடியே இருக்கவேண்டும்" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
எனக்குச் சிரிப்பாக இருந்தது. "இதற்காக நான் மாடுபோல் ஓயாமல் உழைக்கவேண்டும் என்று சாபம் கொடுக்கிறாயா? நீ மட்டும் ஓய்வாக வீட்டில் சுகப்படு" என்றேன்.
அவளும் சிரித்தாள்.
அப்போதுதான் என் உள்ளம் திறந்து சொன்னேன். "நான் அப்படிப் படத்தின் அழகில் மயங்கிக் கெட்டுப் போகிற ஆள் அல்ல. அதெல்லாம் உண்மை அழகு அல்ல. மேற்பூச்சும் அலங்காரமுமே அதிகம். அவற்றை நம்புகிற பேர்வழி நான் அல்ல. நடிப்பு மட்டும் உண்மையாகவே சிறந்த கலை. அதைத்தான் பாராட்ட வேண்டும்" என்றேன்.