Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 24 - சு. சமுத்திரம்
சரோசா அந்தக் கும்பலை உணர்வற்றபடியே பார்த்தாள். இன்றைக்கு எப்படியும் ஒருவழியாகிவிடப் போகிறோம் என்ற உணர்வு, அவளைத் தப்பிக்கும் வழியை நினைக்க முடியாமல் தடைபோட்டது. உயிரற்றவள் போல் கீழே கிடந்தாள். இதற்குள், அந்த ஆசாமிகள் சேரிக்கு இட்டுச் செல்லும் இடுக்குவழிக்குப் போனார்கள்.
சரோசாவுக்கு என்றே புதிய பங்குத் தந்தையால் தாளிடப்பட்ட அறையை நோக்கிப் போனார்கள். ஒன்றாய்ப் போய்க்கொண்டிருந்த, அனைவரும் பிறகு ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து அங்குமிங்குமாய் தேடினார்கள். பிறகு எல்லோருமாய் ஒன்றாகக் குனிந்து அவள் இருந்த பக்கமாக ஆறு தலைகளையும் ஒரே தலைகளாக நிமிர்த்தினார்கள். சரோசா பம்மிக்கொண்டே பார்த்தாள். பழக்கப்பட்ட இருவர் குரல், பழகாத நால்வர் குரலுடன் கலந்திருந்தது. காவல்நிலைய வளாகத்திற்குள் இளநீர் குடித்துக்கொண்டிருந்த இளங்கோவை அடிப்பதற்காக எகிறினானே ஒரு தோஸ்து-மணி அவன் இப்போது பட்டாக்கத்தி அந்த இருட்டில் மின்ன, கோர தாண்டவம் ஆடுவதுபோல் அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.
சரோசா நாய்னாவை உற்றுப் பார்த்தாள். அவர் தானில்லாமல் வாழப்போகும் நிலையை நினைக்க நினைக்க, அவளுக்கு ஒரு தற்காப்பு உணர்வை ஏற்பட்டது. உயிர் காக்கும்படி அக்கம்பக்கம் எழும்படி அலறலாமா...? வேறு வினையே வேண்டாம்.எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதை! அவர்கள் மெல்ல நகர்ந்தபோது, லேசாய் குறட்டை விட்ட தந்தையின் வாயை அவள் அழுத்த, அவர் மூச்சுத் திணறலில் கண்விழித்தார். ஏதோ பேசப்போன அவர் வாயை ஒரு கையால் அடைத்தபடியே "ஆபத்து! ஆபத்து! அதோ, அண்ணாத்தேயின் கொலைகார கோஷ்டி" என்று கிசுகிசுத்ததும், அவர் அவளைத் தப்பிப் போகும்படி சைகை செய்தார். அவளுக்குத் தெரியும் - இந்த மாதிரி சமயத்தில் குறிபார்க்கப்பட்ட ஒன்று கிடைக்கவில்லை என்றால், கொலைகாரக் கோஷ்டியினர் அந்தக் குறியின் துணையைப் பழி வாங்கி விடுவார்கள். அவள், தான் தப்பித்து, நாய்னாவுக்குக் கொலைத் தண்டனை வாங்கிக் கொடுக்க விரும்பவில்லை. நாயினாவை தன் பக்கமாக இழுத்து, அவள் தரையில் தவழ்ந்தாள். மூச்சைக்கூட மெல்ல விட்டபடியே ஊனமுற்றவனைப் போல், இரண்டு கைகளையும் கூட கால்களாக ஆக்கி, நாயினாவையும் இழுத்து இழுத்து தவழச் செய்து, அந்தக் கோயில் வளாக வாசலுக்கு வெளியே வந்து விட்டாள். உடனடியாக நாயினாவை தூக்கி நிறுத்தி, தாங்கிப் பிடித்து, தேநீர் பக்கக் கடைகளின் சுவர்கள் வழியாக நகர்த்தி, நகர்த்தி, அவற்றில் சாய்த்து,