கடற்கரை மணல் மேட்டில் 'உங்கள் நண்பன்' காவல் கூண்டிலிருந்து ஒரு டார்ச் ஒளி தெரிந்தது. இன்னொரு கையில் ஏதோ கனமான ஒன்று. நின்றால் பிடிப்பான். ஓடினால் கடுவான். லோக்கல் போலீசையும், குவாட் போலீசையும் சரிக்கட்டிட்டதாய் அண்ணாத்தே சொன்னாரே... இவன் தலையிலயும் தொப்பிகீது.
"டேய்... பேமானிப் பசங்களா! ஆம்பளையின்னா நில்லுங்கடா."
மிரண்டு நின்ற அந்தக் கும்பல் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டது. இப்போது ' சுடுவேன்' என்ற சத்தம் வரல. தப்பிப் போறதுக்கு வழி சொல்றது மாதிரி தோணுது.
உயிர் கொல்ல வந்த கும்பல் உயிர் காக்க ஓடியது. அந்த ஒற்றைப் போலீசின் துப்பாக்கிக் குண்டுகள் தலையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக பிடறிகளில் கைகளைக் கோத்தபடியே ஓடியது.கீழே உட்கார்ந்து உட்கார்ந்தும், எழுந்து எழுந்தும் ஓடியது.
அந்த போலீஸ்காரரும் ஓடிவந்தார். அவர்கள் ஓடுவதையோ, அந்த போலீசின் பூட்ஸ் சத்தத்தையோ சட்டை செய்யாமல், கீழே அசைவற்றுக் கிடந்த உருவங்களை அவர் உற்றுப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தார். 'டக்... டக்...' என்ற அவரது காலடிச் சத்தம், அந்த உருவங்களுக்குள் அவர்களே கேட்ட இதயத் துடிப்புச் சத்தங்களில் முங்கிப் போனது.
மதுரைக்கு விடுமுறைக்குப் போய்விட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு டூட்டியில் சேர்ந்த கான்ஸ்டபிள் திருமலையப்பன்தான் அவர். லத்திக்கம்பால் அந்த உருவங்களைத் தட்டினார். பிறகு, அவர்கள் கொலை செய்யப்பட்டு அப்படிக் கிடக்கிறார்களோ என்று பயந்துபோய் கீழே குனிந்தார். இதற்குள், சரோசா உடம்பை அசைக்காமலே கண்களை அசைத்தாள். ஒருசாய்த்துப் படுத்துக்கிடந்த தந்தையை தன் மடியிலே போட்டுக்கொண்டு போலீஸ்காரரை மலங்கமலங்கப் பார்த்தாள். அவர் அதட்டினார் :
"ஏய், ஒன் பேரு சரோசாதானே? இளங்கோன்னு ஒருத்தனோட விவகாரம் பண்ணிட்டு லாக்கப்ல இருந்தது நீதானே? என்ன நடந்தது?"
சரோசா, மெல்ல மெல்ல சுய உணர்வு பெற்றாள். நாயினாவை உற்றுப் பார்த்தாள். அவரும் சரி, தானும் சரி, இன்னும் வெட்டுப் படவில்லை என்ற மெய்யுணர்வு உந்த, மெல்ல எழுந்தாள்.