(Reading time: 10 - 20 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

சுடப்பட்ட கொக்கோடு சுடாமலே செத்துப் போனதாய் அனுமானித்துக் கீழே விழும் கொக்கு போல், கைகளை விரித்து தரையில் கிடந்த நாயினாவை உசுப்பினாள். பிறகு அந்த போலீஸ்காரரின் இரண்டு கால்களையும் கட்டிப் பிடித்துக்கொண்டு, அவர் முட்டிக்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டே விம்மி, விம்மிப் பேசினாள்.

   

"பேசாம என்னை இன்ஸ்பெக்டர் சொன்னாப்போல வேலூருக்கு அனுப்பிடுங்க சாரே; வாழ்ந்தும் பிரயோசனமில்ல. இருந்தும் பிரயோசனமில்ல சாரே. அண்ணாத்தே என் ரத்தத்தக் குடிக்கத் துடிக்கான் சாரே. நாயினா! நாயினா! நாம நாளைக்கி எப்படியோ, இன்னிக்கி பிழைச்சிட்டோம், நாய்னா!"

   

திருமலையப்பன், அவளின் நாயினாவை தூக்கி நிறுத்தினார். கீழே கிடந்த கோணிப்பையை எடுத்து அவர் முதுகில் போர்த்தினார். அந்தப் போர்வையின் மேல் தன் உடம்போடு கிடந்த கம்பளியை எடுத்துப் போட்டார்.

   

"நல்ல வேளை, பீட்டுக்கு டூட்டி போட்டதுனால பிழைச்சிங்க. சரி, என் பின்னால நடங்க. சாப்பிட்டீங்களா?"

   

சரோசா எதுவும் பேசாமல் நாயினாவை தோளில் சாய்த்துக் கொண்டு திருமலையப்பனைத் தொடர்ந்தாள். மூவரும் மணல் மேட்டுக்கு வந்தார்கள். அவர் 'உங்கள் நண்பன் கூண்டை'த் திறந்தார். நாயினாவை தோளைப் பிடித்து அழுத்தி, அவரே கீழே உட்கார வைத்து, மரச்சுவரில் சாய வைத்தார். பிறகு சரோசாவை ‘நடந்ததைச் சொல்' என்பது மாதிரி பார்த்தார். கீழே உட்கார்ந்திருந்த சரோசா அவரை அண்ணாந்து பார்த்தாள். பார்க்கப் பார்க்க பயம் போய் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. மனச்சுமையை சொல்லிக் சொல்லி அதை குறைத்தாள். இளங்கோவிடம் சுருக்கமாகச் சொன்ன தனது வரலாற்றை, அவரிடம் விலாவாரியாகச் சொன்னாள். ஒவ்வொரு கட்டத்திலும் ‘ஆருமே இல்லாமே பூட்டோமே சாரே' என்று மூச்சு முட்டச் சொன்னாள். அத்தனையும் சொல்லிவிட்டு அதற்குமேல் எதுவும் இல்லை என்பதுபோல் அவரை வெறுமையோடு பார்த்தாள். அவள் கதையை பேச்சற்றுக் கேட்ட திருமலையப்பன், ஐந்து நிமிட மவுனத்திற்குப் பிறகு அறிவுரை சொன்னார்:

   

"இனிமேல் இந்தப் பக்கம் இருந்தீங்கன்னா, ஒங்க உயிருக்கு ஆபத்துதான். எங்கே இருக்கப் போறதா உத்தேசம்?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.