சரோசாவுக்கு சம்பளம் கிடைத்துவிட்டதா என்று அவளிடமே கேட்பதற்காக, உள்ளே வந்த இளங்கோ, வாசலில் சிறிது நின்றுவிட்டு, பின்னர் போலீஸ்காரரை நெருங்கிக் கேட்டான்.
"அப்படி என்ன சார் இந்தப் பொண்ணு தப்புப் பண்ணிட்டு?”
“தப்புக்கும் தவறுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா? இவள் செய்தது தப்பும் இல்ல, தவறும் இல்ல... ஒரு கொலை; துரை என்கிற கள்ளச்சாராய வியாபாரியைக் கொன்னு, கோணி மூட்டையில் கட்டி மகாபலிபுரம் கடலுல போட்டிருக்காள். ஏய்! நடடி ஸ்டேஷனக்கு. நீ கெட்ட கேட்டுக்கு ஒனக்கு கவர்மெண்டு வேலையா?"
அதுவரை அந்த போலீஸ்காரரை முகம் மாறாமல் பார்த்தபடி நின்ற சரோசா, அப்படியே சரிந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். இரண்டு கைகளையும் எடுத்து தன்னை அறியாமலேயே தலையில் வைத்து அசைவற்றிருந்தாள். பிறகு அவள் கண்முன்னால் ஆடிய லத்திக் கம்பின் ஊசலாட்டத்தைக் காணும் சுரணை இன்றி ஒப்பாரியிட்டாள் :
"தொரண்ணே! அய்யய்யோ, தொரண்ணே! கட்சியிலே அந்த தட்டுவாணி தடிச்சியும், அண்ணாத்தேயும் சேர்ந்து உன்னைத் தீர்த்துக் கட்டிட்டாங்களே. நானு பாவிண்ணே. இந்த ஒரு மாசத்துல ஒரு வாட்டியாவது ஒரு நட நடந்து உன்னைப் பார்க்காமப் பூட்டேனே. நீ அருண்டு மருண்டு துடிச்சப்போ ஒனிக்கு ஆறுதல் சொல்லாம இருந்துட்டேனே. ஏய் அண்ணாத்தே, நீ உருப்படுவியா? ஒன்னையும் உன் வப்பாட்டியயும் இதே மாதிரி அடிச்சுக் கொல்ற காலம் வராதா? அய்யோ... அய்யய்யோ...!"
சரோசா, வாயில் அடித்துக் கொண்டாள். எல்லோரும் அவளைக் கொலைகாரியாகப் பார்த்தபோது இளங்கோவின் கண்கள் கலங்கிவிட்டன. சிலர் பிரமிப்போடு எழுந்தார்கள். போலீஸ்காரர் லத்திக் கம்பை தரையில் தட்டியபடியே அதட்டினார்:
"இன்னும் ரெண்டு கொலை செய்வேன்னா சொல்றே? நல்லாத்தான் நடிக்கே? இல்லாட்டி ஒரு ஆம்பளைய பதினாறு இடத்தில் வெட்டி கடலுல போடுவியா? எழுந்திருடி."