- ஆதிசங்கரரும் அவரது தத்துவங்களும் - பிரும்மஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரி எழுதியது.
- போதாயனீயமும் பாஞ்சராத்ர வைகானஸ வழிபாட்டு முறைகளும் -
உபயவேதாந்தி ஸ்ரீ வைஷ்ணவ சண்டமாருதம் - பிரதிவாதி பயங்கரம், கோளூர் கோபாலாச்சாரியார் எழுதியது.
- அண்ட கோள விருத்தி - மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாசாலைப் பிரதம ஆசிரியர் ஸ்ரீ உ.வே. திருநாராயணய்யங்கார் சுவாமிகள் இயற்றியது.
என்று மூன்று புத்தகங்கள் அடுக்காக இருந்தன.
"என்ன தம்பீ? அப்படிப் பார்க்கறீங்க? நம்பளுது தான். படிக்கிறத்துக்காக எடுத்து வச்சிருக்கேன்" - என்று அர்த்த புஷ்டியோடு சிரித்துக் கொண்டே ரவியிடம் சொன்னார் இறைமுடிமணி.
"ஒண்ணுமில்லே... சும்மா பார்த்தேன்" என்று கூறி விட்டுப் புறப்பட்டான் ரவி. தெருமுனை திரும்பியதும் தந்தையிடம் கேட்டான் அவன்.
"இதெல்லாம் ராகு காலத்திலே புதுக்கடை தொடங்கற ஒருத்தர் படிக்கிற புஸ்தகங்களான்னு நெனைக்கறப்போ ரொம்ப ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்குப்பா!....."
"இதிலே ஆச்சரியமென்ன? எல்லா விஷயங்களையும் வெறுப்பில்லாமத் தெரிஞ்சுக்கணும்கிற சுத்தமான ஞான வேட்கை அவனுக்கு உண்டு. அவனோட இந்த முரண்பாடுகளுக்கு நடுவேயும் ஒரு முழுமை இருக்கு."
"அவை ரொம்பவும் ரம்யமான முரண்பாடுகளா இருக்குப்பா! இவரையும் நினைச்சுண்டுத் தெருத் திண்ணையிலே ஊர்ச் சோம்பேறிகளோட சீட்டாடிண்டே புகையிலையைக் குதப்பித் துப்பிண்டு இருக்கிற சீமாவையரையும் நினைச்சா, ஞான வேட்கைக்கும் ஜாதிக்கும் சம்பந்தமே இல்லேன்னு கூடத் தோண்றதே? இல்லையா?" - ரவி கேட்டான். சர்மா அதற்கு அப்போது உடனே அவனிடம் பதில் எதுவும் சொல்ல வில்லை.