மேகலை, குடும்பத்தை நினைத்தாள். மணியார்டர் பணம் திரும்பி வந்ததையும் நினைத்தாள். என்னையும் வீட்டோடு வைத்திருந்தால், எப்படி இருந்திருக்கும்... இயல்பான அவளது உள்ளத்தின் இளக்கம் திரவ நிலையிலிருந்து, திடப் பொருளானது. தனக்குள்ளேயே ஏதேதோ முனங்கிக் கொண்டாள்.
இதற்குள், லட்சுமி, ‘ஒன்றைத்’ தேடிப் பிடித்துச் செல்லம் செல்லமாய்ப் பேசிக்கொண்டிருந்தாள். குஞ்சம்மாவுக்கு, ஒரு மலையாள அலி கிடைத்தாள். மார்க்ரெட்டும் பகுச்சார்தேவியும், இன்னும் கடல் பக்கமிருந்து திரும்பவில்லை. நீலிமா பெங்காலியில் உரத்துக் கத்தினாள். அப்படியாவது எந்த வங்காளிக்காரியும் தன்னை அடையாளம் கண்டுகொள்ளட்டும் என்பது போல். பிறகு தனது தோல்வியை வெற்றியாக்கும் வகையில் சிறிது தொலைவில் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த மொழியறியாப் பெண்களுடன் விழியால் பேசினாள். அப்புறம் டோலக்கின் டொக் டொக். அவர்களின் டக்... டக்...
எல்லோருடைய கவனமும் மேகலையை விட்டு விட்டுப் புதுக்கதாநாயகியான நீலிமாவின் ரொட்டி மாவு முகம் நோக்கிப் போனபோது, அவளை விட இன்னொன்று அதிகமாகக் கவர்ந்தது.
அரவான் சாமியின் மரத்தலை வைக்கப்பட்ட கோயில் தேர், மேள தாளத்துடனும், வாணவேடிக்கையுடனும் வந்துகொண்டிருந்தது. இங்கிருந்த அலிகளைப் போல் பல மடங்கு அலிக்கூட்டம், தேருக்கு முன்னாலும் பின்னாலும் ஆடிப்பாடி வந்தனர். கரகாட்டம், காவடியாட்டம், பிரேக் டான்ஸ். நீலிமா பக்கத்திலிருந் தவள்களை விட்டு விட்டு அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து டோலக்கைத் தட்ட விட்டாள். இதற்குள், அரவான் என்றும் அழைக்கப்படும் கூத்தாண்டவரின் தேர் கோவிலுக்கு எதிரே வந்தபோது, உள்ளூர் மேளம் விலகி, செட்டு மேளம் அதிர்ந்தது. நாதஸ்வரம் உச்சத்திற்குப் போனது. கற்பூர ஒளி வட்டத்தோடு கீழே இறக்கப்பட்ட அரவான் தலைக்குத் தயாராய் வைக்கப்பட்ட மரக்கால்கள், மரக்கைகள் உட்பட அத்தனை உறுப்புக்களும் பொருத்தப்பட்டன. அவருக்கு மடிசார் வேட்டியும், மஞ்சள் கலர் சட்டையும் உடுத்தப்பட்டன. மரக்கையில் ஒரு இரும்பு திரிசூலம் பொறுத்தப்பட்டது. அவர் உள்ளே கருவறைக்குக் கொண்டு போகப் பட்டார். அங்கே இருந்து ஒரே ஒரு கருப்புப் பூசாரி நூற்றுக்கணக்கான மஞ்சள் துண்டுக் கயிறுகளோடு வெளியே வந்தார். கீழே உட்கார்ந்து அவரும் நான்கைந்து சேலா பூசாரிகளும் கயிறுகளில் மஞ்சள்