Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 40 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 40
மேகலையும் சுந்தரம்மாவும் காரைத் தேடிப் போனார்கள். ஒரே ஒரு கார்தான். கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. சுந்தரம்மா, தன்னுடைய சேலா அலிகளைக் கண்டுக்காமல் போனாள். தரையில் கால் பாவாமல் நடந்தாள். மேகலை, அங்கே கூடிய தனது கோஷ்டிக்கு தாலி கட்டிக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு, காரில் ஏறிக் கொண்டாள். ஜமாத் தலைவியையும் ஏற்றிக்கொண்டாள்.
கடலூருக்குள் கார் பஜார் பஜாராய்ச் சுற்றியது. அவள் கண்கள் ஒவ்வொரு டாக்டர் போர்டாய் பார்த்தது. சுந்தரம்மா, அதைப்பற்றிக் கவலைப்படாமல், அர்ச்சுனனுக்கும் நாககன்னிகைக்கும் பிறந்த அரவான் கூத்தாண்டவராய் மாறிய புராணத்தை நீட்டி முழக்கிச் சொல்லிக் கொண்டே இருந்தாள். மகாபாரதப் போரில், பாண்டவர் வெல்ல வேண்டுமானால், அத்தனை சாமுத்திரிகா லட்சணங்களையும் கொண்ட ஒருவனைப் பலியிட வேண்டுமென்று சகாதேவன் ஜாதகமாக சொல்லிவிட்டான். இந்த லட்சணங்களைக் கொண்டவர்கள் மூவர். அர்ச்சுனன், கிருஷ்ணன், அரவான். இவர்களில் இளிச்சவாயன் கடைசி ஆள். சம்மதித்தான். ஆனால் ஒரு நிபந்தனை போட்டான். காளிக்குப் பலியாகும் முன்பு, கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்றான். எந்தப் பெண்ணும் இணங்கவில்லை. இறுதியில், கிருஷ்ணனே ஒரு அலியாகி, அவனைக் கட்டிக்கொண்டார். போரில் காளிக்கு அரவான் படைக்கப்பட்டான். ஆனால், காளியாத்தா, மனமிரங்கி அரவானை ஒற்றைத்தலை உருவமாக்கி அதற்கு உயிரூட்டினாள். அவருக்குப் பேர்தான் கூத்தாண்டவர். ஆகையால் எல்லா அலிகளுமே கிருஷ்ண அவதாரங்கள்.”
இந்தக் கதையை கருத்தோடு சொன்ன சுந்தரம்மா, பிறகு சலிப்போடு சொந்தக் கருத்தைச் சொன்னாள். இந்தக் கொள்ளயில போற அரவானுக்கு என்ன வந்திட்டுது. அவனுக்குத்தான் புத்தியில்லன்னா, இந்த கிருஷ்ணனுக்குமா... கிருஷ்ணன், ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுத்துட்டு அலியானான். இந்த அரவானும் ஒரு ராத்திரி ஆசைய தீர்த்துக்கிட்டான். கடைசியில நாமதான் அம்போன்னு ஆயிட்டோம்.”
மேகலை, ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்த அந்தக் கதையை நயத்தகு நாகரிகம் கருதிப் புதிதாய்க் கேட்பது போல் தலையாட்டிக் கேட்டாள். பிறகு வெறுப்போடு சொன்னாள்:
“கிருஷ்ணன் கிடக்கான் விடு. அவனுக்கென்ன பழையபடியும் ஆணாய், மாறிட்டான். டிரைவர், சிதம்பரத்துக்கு வண்டிய விடுப்பா...”