துண்டுகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். உடனே அவள்கள் நாலா பக்கமும் இருந்து குவிந்தார்கள். சின்னக் கருவறைக்குள் இடம் போதவில்லை. இதற்குள் உள்ளூர் மீனவ தர்மகர்த்தாக்கள் ஒவ்வொருத்தியையும் அவள் மினுக்கத்திற்கு ஏற்ப குரல் போட்டார்கள். நகைக்காரிகளுக்கு ஒரு யாசக சத்தம். பட்டுப் புடவைக்காரிக்கு ஒரு தடவல், வாயில் புடவைக்கு ஒரு அதட்டல். கூரைப்புடவைக்கு ஒரு குத்து.
நூற்றுக்கணக்கான மொந்தைப் பூக்கள் ஆயிரக்கணக்கான கோணத்தில் சுயமாய் ஆடுவது போன்ற தோற்றம். ஆயிரமாயிரம் மனிதத் தலைகள், ஒரே ஒரு உருவம் பெற்றது போன்ற நெரிசல்; ஆனாலும் எப்படியோ வரிசை விரிவானது. உள்ளேயும் ஒரு பூஜாரி. புகை மூட்டத்திற்குள் புகைந்து போனவர். கருவறைக்குள் வந்த அலிகளுக்கு, மஞ்சள் துண்டு கொண்ட மஞ்சள் கயிற்றைக் கட்டிவிட்டார். உள்ளே தாலி போட்டவள்கள் வெளியே நின்ற வெறுங்கழுத்துகளை ஏளனமாய்ப் பார்த்தன.
சிறிது ஒதுங்கி நின்ற மேகலையைச் சுட்டிக்காட்டி, ஜமாத்தலைவி சுந்தரம்மா மூத்த தர்மகர்த்தா ஒருவரிடம் ஏதோ சொன்னாள். அவள், கார் வைத்திருப்பதை வார்த்தையாலும் சொல்லி, இரண்டு கைகளையும் ஸ்டியரிங் மாதிரி வைத்து அங்கேயே கார் ஒட்டுவது போலக் காட்டி, படம் போட்டுக் கதை சொல்வதுபோல் சொன்னாள். உடனே அந்த தர்மகர்த்தா மேகலைமீது ஒரு வி.ஐ.பி. பார்வை போட்டார். நாற்பது வயது சுந்தரம்மாவே, பெண்ணுக்குத் தோழியாக உள்ளே போனாள். உருண்டு திரண்ட கம்பத்து ஆண்டவராய் உள்ள உற்சவமூர்த்தி கூத்தாண்டவரையும் அதே மாதிரி கற்சிலையாய் ஆனவரையும் அவள் உற்றுப்பார்த்தாள். அப்போது பூசாரி, தேங்காய் உடைத்த கையோடு, அவள் கழுத்தை லேசாய் வளைத்து தாலி கட்டினார். பட்டுப் புடவையோடும், பகட்டும் நகைகளோடும் தோன்றிய அவள், வித்தியாசப்பட்டவள் என்பதை உணர்ந்ததுபோல் மூன்று முடிச்சுக்களையும் ஆற அமர முழுமையாகவும் வித்தியாசமாகவும் கட்டினார். பிறகு சுந்தரம்மாவுக்கு ஒப்புக்குக் கட்டுவதுபோல் ஒரு இழுப்பு இழுத்தால் அவிழ்ந்துவிடுவது மாதிரி, தாலி, கருவறையிலிருந்து வெளியே வந்த மேகலை, கூத்தாண்டவரையே வெறித்துப் பார்த்தாள். அங்கே, அதே மர உருவம் மனிதனாகிறது. கையில் பிடித்துள்ள சூலாயுதம் ஸ்டெதாஸ்கோப்பாகிறது. டேவிட். அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். மேகலை கழுத்தில் தொங்கிய மஞ்சள் துண்டு தாலியை,கண்களுக்குக் கொண்டு போய் ஒற்றிக் கொண்டாள். மனதிற்குள் டேவிட், டேவிட் என்றாள். அவளை ஆச்சரியமாய் பார்த்த சுந்தரம்மாவிடம் பட்டும் படாமலும் கேட்டாள்.