‘கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு, அங்கதானே தங்கி யிருப்பதாகச் சொன்னாள்? அவளைப் பார்க்க வேண்டும்போல் உள்ளுக்குள் ஒரு ஆசை பொங்கியது. தன்னைக் காப்பாற்றியவளுக்கு நன்றிகூடச் சரியாகச் சொல்லவில்லையே’ என்று எண்ணியபடியே சத்திரத்தை நோக்கி நடந்தான். அங்கே வாசலில் உட்கார்ந்திருந்த சத்திரத்துக் காவலாளியிடம் "அந்த கழைக் கூத்தாடிங்க இங்கதானே தங்கியிருக்காங்க?" என்று கேட்டான்.
"அவங்களா! இப்பத்தானே புறப்பட்டுப் போனாங்க!" என்றான் காவல்காரன்.
"எங்க போனாங்கன்னு தெரியுமா?"
”திருவையாறு போறதாச் சொன்னாங்க."
"அடாடா, கொஞ்சம் முன்னாடி வராமல் போனோமே!" என்ற ஏமாற்றத்தோடு திரும்பினான்.
தெருவிளக்குகள் ஏற்றப்பட்ட பிறகே மூர்த்தி பாட சாலைக்குத் திரும்பினான். வித்தியார்த்திகள் இனிய சங்கீதமாய்ப் புருஷ ஸூக்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மூர்த்தி நேராக கிணற்றடிக்குப் போய் கைகால், முகம் கழுவி, விபூதி பூசி, சந்தியாவந்தனம் முடித்து புருஷ ஸூக்தத்தில் கலந்துகொண்டான்.
சத்திரத்து மணி ஒன்பது அடித்து ஓய்ந்தது.
"மூர்த்தி! அப்பா கூட ஊரில் இல்லை. பின் கட்டில் நான் மட்டும் தனியாகப் படுத்துத் தூங்க பயமாயிருக்குடா. முனியம்மா வர முடியாதுன்னுட்டா! நீதான் எனக்குத் துணையா பின் கட்டிலே வந்து படுத்துக்கணும். தலைவலி இப்ப எப்படி இருக்கு? சுடச்சுட மிளகு ரசம் வெச்சிருக்கேன். உனக்குப் பிடிக்குமேன்னு தோட்டத்திலிருந்து பிஞ்சு அவரைக்காயாகப் பறிச்சிண்டு வந்து கறி பண்ணியிருக்கேன், இலை போடறேன். சாப்பிடறயா?" என்று கேட்டாள் பாகீரதி.
"இப்ப பசி இல்லை. பசங்களோட பந்தியிலயே சேர்ந்து சாப்பிடறேன்" என்றான்.
பந்தி முடிய மணி பத்தாகிவிட்டது. பாகீரதி அடுப்படியில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.