Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 11 - சாவி
கௌரி அத்தையும் கனபாடிகளும் காலை பஸ்ஸுக்கே சிதம்பரம் புறப்பட்டுப் போய்விட்டார்கள்,
“அத்தை ஒரே ஒருநாள்தான் தங்கி இருந்தா. எவ்வளவு கலகலப்பா இருந்தா. அவள் போனதும் வீடே வெறிச்சோடிப் போச்சு!" என்றாள் கமலா.
அத்தைக்குத்தான் எத்தனை ஆசை!
தலை பின்னி, பொட்டிட்டு, பூவைத்து காசுமாலை போட்டு அகமகிழ்ந்த அத்தை ‘எத்தனை அழகுடி நீ ! மகாலட்சுமியாட்டம் இருக்கே !’ என்று பிரியமாகச் சொன்ன வார்த்தைகள், உள்ளத்தில் உறைந்துவிட்ட வார்த்தைகள்,--பாகீரதியின் கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டன.
வாசலில் கிலுகிலுப்பைக்காரன் ரோதனையாக ஒலி எழுப்பி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்ட அம்புலு தெருப்பக்கம் கையைக் காட்டிக் காட்டி அம்மாவைப் பார்த்து அடம்பிடித்து அழுதது.
"இந்த கிலுகிலுப்பைக்காரனுக்கு இந்த வீட்ல குழந்தை இருக்குன்னு எப்படித்தான் தெரிஞ்சுதோ? முக்கிலே வேர்க்கும் போலிருக்கு !" என்று முணுமுணுத்துக் கொண்டே பாத்திரத்தில் கொஞ்சம் அரிசி அள்ளிப் போட்டுக்கொண்டு பண்டமாற்று முறையில் கிலுகிலுப்பை வாங்கப் போனாள்.
கிட்டா வழக்கமில்லாத வழக்கமாய் காலையிலிருந்தே ரொம்ப உற்சாகமாய்க் காணப்பட்டான். கனபாடிகளிடம் பழகியிருந்த பர்த்ருஹரி சுலோகங்களை தன்யாசி ராகத்தில் சேதப்படுத்திக் கொண்டிருந்தான்!
பாகீரதி சமையல் வேலையை மறந்து, உக்கிராண அறையில்போய் உட்கார்ந்து, மூர்த்தியின் தகரப் பெட்டியைத் திறந்து வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
பழைய பட்டு வேட்டி, திருக்குறள் புத்தகம், பகவத்பாதாள் சரிதம், காசி மடம் விபூதிப்பை, தக்ளி, முள் ஒடிந்த பேனா, செல்லாத அரையணாக் காசு-இவ்வளவும் அதில் கிடந்தன. திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் ‘அப்பா வாங்கிக் கொடுத்த தமிழ் வேதம்’ என்று எழுதி அதன் கீழ் மூர்த்தி என்று கையெழுத்திடப்பட்டிருந்தது.