"நா ஒண்ணும் சொல்லலே. உன் அபிப்ராயத்தைச் சொல்" என்றாள்.
"உங்க அப்பாவும் நீயும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது, இதல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?"
மஞ்சு இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. மூர்த்தி அக்கறை காட்டாமல் பேசியது அவளுக்கு வருத்தமாயிருந்தது.
"எதுக்கும் நீங்க நாளைக்கு வாங்கய்யா, பேசிக்குவம்" என்று சர்க்கஸ் ஆசாமியிடம் சொல்லி அனுப்பிவிட்டாள்.
மூர்த்திக்கு அவனை அறியாமல் அந்த சர்க்கஸ்காரன்மீது ஒரு வெறுப்பு தோன்றியது. பொறாமையாகவும் இருந்தது.
"நேரமாச்சு, மஞ்சு ! போயிட்டு நாளைக்கு வந்து பாக்கறேன். பாடசாலைல காத்திண்டிருப்பா" என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி.
மஞ்சுவிடம் தனக்குள்ள உரிமை என்ன, உறவு என்ன என்பதை மூர்த்தியால் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடிய வில்லை. ஆயினும் மஞ்சு தன்னை விட்டு விலகிச் செல்வதுபோல் உணர்ந்தான்.
"மூர்த்தி ! நீதானே வேதம், வேதம்னு சொல்லிண்டு அவளை விட்டு விலகிப் போயிருக்கே? நன்னா யோசிச்சுப் பார்! அவளாகவா விலகிச் செல்கிறாள்! அவள் இதுவரை உன்னைத்தானே நம்பிக் கொண்டிருந்தாள். நீ வேத பாடசாலையில சேர்ந்தப்புறம் தானே அவள் நம்பிக்கை குறைய ஆரம்பிச்சிருக்கு? சர்க்கஸ்காரன் அவளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகச் சொல்கிறான். பாதுகாப்பு இருக்கிறது என்று அழைக்கிறான். நீதான் அவள் கேள்விக்குச் சரியான பதில் சொல்லாமல் அந்த சர்க்கஸ்காரனைக் கண்டு பொறாமைப்படுகிறாய்? இப்ப சொல். விலகிப் போறது நீயா, அவளா?" என்று மூர்த்தியின் உள் மனம் கேட்டது.