(Reading time: 12 - 24 minutes)

“களைப்பா இருப்பீங்க, பல் தேச்சுட்டு வாங்க. காபி கலக்குறேன்!” என்றார் கவிதாவின் மாமியார். இருவரும் ஹாலில் இருந்து எழுந்தனர். கவிதா குளியலறைக்குச் சென்றாள்.

“சீக்கிரமா குளிச்சுக் கிளம்புங்க. கோவிலுக்குப் போகணும்பா!” கவிதாவின் மாமனார் குரல் கேட்டது.

“அரவிந்த்! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!”

“என்னப்பா? சொல்லுங்க?”

“இந்த சாவியைப் பிடி!’

“என்ன சாவி இது?”

“கவிதாவோட நகைப்பெட்டி சாவி!”

“அவகிட்டயும் ஒரு சாவி இருக்கும்னு நினைக்கிறேன்பா!”

“இல்ல அந்த சாவி வச்சு தொறக்க முடியாது. நான் வேற பூட்டு போட்ருக்கேன்!”

“ஏன்பா?

“அந்த பூட்டை உடைக்க வேண்டியதாகிடுச்சு.”

“கவிதா கொடுத்த சாவி என்னாச்சு?”

“தொலைந்து போச்சுப்பா”

“சரி அவ நகைப்பெட்டி சாவி அவகிட்ட இருக்குமே. நீங்க பூட்டை உடைச்சது ஏன்?”

“பிரியா கல்யாணத்துக்கு அவசரமா அறுபதாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. என்ன பண்றதுன்னு தெரியல. எப்படியும் கல்யாணத்துக்கு நீங்க வரப்போறதில்ல, அதனால் கவிதாவோட தங்க செயினை அடமானம் வச்சேன். நீங்க பணம் அனுப்பினதுக்கு அப்புறம் அதை மீட்டுட்டேன்!”

“என்னப்பா சொல்றீங்க?”

“இல்லப்பா. எனக்கு அந்நேரம் வேற வழி தெரியல!”

“எவ்வளவு பெரிய விஷயம். நம்ம மேல உள்ள நம்பிக்கைலதான் அவ நகையை இங்கே வச்சிட்டு போயிருக்கா. அவ அனுமதி இல்லாம அதை எடுத்துப் பார்த்தால்கூட தப்புப்பா. உங்கள நம்பி சாவி கொடுத்துட்டு போனதுக்கு நீங்க என்ன காரியம் பண்ணியிருக்கீங்க? இரண்டு வருஷம் ஆகுது. நீங்க யாரும் இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலியே!”

“இல்லப்பா. உங்க ரெண்டு பேருக்கும் சண்டை ஏதாவது வருமோன்னு பயந்துட்டு தான் நாங்க யாரும் சொல்லல.!” பேச்சை வளர்த்தாமல் வெளியேறினார் அவர்.

முகத்தைத் துடைத்தவாறே உள்ளே நுழைந்த கவிதாவிடம், “இந்தா உன்னோட நகைப்பெட்டி சாவி!”

“என்கிட்டே இருக்குங்க. ஹேன்ட்பேக்ல வச்சிருக்கேன். இது இங்கே மாமாகிட்ட கொடுத்த சாவியா இருக்கும்.”

“இல்ல இது வேற சாவி. பழைய பூட்டை உடைச்சிட்டாராம். இது புது பூட்டோட சாவி.”

ஏன் என்பது போல் கவிதா பார்க்க, நடந்ததை அரவிந்த் சொல்லவும் கவிதாவின் முகம் மாறியது.

“ச்சே! மாமா இப்படி பண்ணுவாங்கன்னு கொஞ்சம்கூட நினைக்கல” என்றாள் கோபத்துடன்

“சரி. நடந்தது நடந்து போச்சு. விடு!”

“என்ன அரவிந்த், எல்லா விஷயத்திலும் நான் விட்டுக்கொடுத்துப் போனா, என்னை ஏமாளின்னு நினைக்கிறதா? என் நகையெல்லாம் எடுத்துட்டுப் போய் அம்மா வீட்டிலேயே பத்திரமா வைக்கப்போறேன்.”

“சரி வச்சுக்கோ.”

“இப்பவே எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.”

“கவி! ரிலாக்ஸ்! ஈவ்னிங் போலாம்”

“முடியாது அரவிந்த். யாரையும் நம்ப முடியல. எவ்வளவு தடவை போன்ல பேசுறோம். ஸ்கைப்ல பேசுறோம். இரண்டு வருசமா ஒரு விஷயத்தை எல்லாரும் மறைச்சி வச்சிருக்காங்க. என்னால இங்கே இருக்க முடியாது.! அப்பா அம்மாக்கு கால்  பண்ணி இப்பவே கூப்பிட வர சொல்றேன்.”

“உனக்கு உன் நகைதான் பெருசுன்னா தாராளமா போன் பண்ணி வர சொல்லு.”

“எனக்கு நகை பெரிசில்ல. நம்பிக்கை தான் பெரிசு. எல்லார் மேலயும் வச்சிருந்த நம்பிக்கை ஒரு நிமிஷத்தில் போச்சு. என் குடும்பம்னு நான் நம்புறவங்க என்கிட்ட உண்மையா இல்லைங்கறத என்னால ஜீரணிக்கவே முடியல. எவ்வளவு ஆசைஆசையா நான் வந்தேன். என்னால இதை ஏத்துக்கவே முடியல. அத்தை சொல்லி இருக்கலாம். பிரதீபா அண்ணியோ ப்ரியாவோ சொல்லி இருக்கலாம். ஒருத்தருக்கும் நம்மகிட்ட சொல்லணும்னு தோணல. எனக்கு இப்பவே எங்கம்மா வீட்டுக்குப் போகணும். இங்க இருக்கவே எனக்குப் பிடிக்கல.”

“நான் வேணா எங்கப்பாவை உன்கிட்ட மன்னிப்புக் கேட்க சொல்லவா? உன் கோபம் தீருமா?”

“ஒண்ணும் வேண்டாம். இங்கே இருந்து போகணும்.”

காபி எடுத்துக்கொண்டு  அவள் மாமியார் வர, “அவங்க வீட்டுக்குப் போகணும்னு அடம் பிடிக்கிறா. ஆட்டோ கூட்டிட்டு வரேன்!” என்று எழுந்தான்.

“ஏண்டா. என்னாச்சு திடீர்னு? கோவிலுக்குப் போணும்னு அப்பா சொல்லிட்டு இருந்தாரே!”

“அவர் பண்ண காரியத்துக்கு அவர் மட்டும் கோவிலுக்குப் போகட்டும்.!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.