(Reading time: 15 - 29 minutes)

சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி

bubble

காலையில் கண்விழிக்கும்போதே ப்ரமோதாவிற்கு வீட்டு சூழல் மாறியிருப்பது புரிந்தது. அவளை யாரும் எழுப்பிவிடவில்லை. அம்மா, அப்பா , தங்கை வாசினி யாருடைய பேச்சு சப்தமும் கேட்கவில்லை. அமைதியான இல்லம்… அவளுக்கு ஒன்றை புரிய வைத்தது. இன்றைக்கு அவளுடைய வாழ்வில் மிக முக்கியமான நாள் என்று நினைக்கிறார்கள். ஜன்னல் வழியே தெரிந்த வானில் மழைமேகங்கள் கூடியிருந்ததால் இருட்டு கட்டிக் கொண்டுவந்ததது.

இன்றைக்கு அவளுடைய விவாகரத்து வழக்கின் முடிவு தெரிந்துவிடும். அவளும் ஒப்புதல் தந்துவிட்டால் இன்றைக்கே அனைத்தும் முடிந்துவிடும். நேற்றுவரை அவளுடைய மனநிலையும் அதுதான். அவளுடைய ஒன்பது மாத திருமண வாழ்க்கை இன்று முடிவிற்கு வந்துவிடும் என்று நினைத்தாள். ஆனால்…

அவளுடைய திருமண வாழ்க்கை எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடியப் போகிறது. அவளுக்கும் அஸ்வினுக்குமான திருமண பந்தம் இப்படி பாதியிலேயே முடிவடைவதில் விருப்பமேயில்லை. துரோகத்தை மன்னிக்கும் அளவிற்கு அவளுக்கு மனம் இல்லையென்றாலும், அவளுடைய வாழ்க்கை தோல்வியடைவதை அவள் விரும்பவில்லை. அவள் எந்த தவறும் செய்யவில்லை. அஸ்வினுடனான அந்த உறவிற்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் அளித்திருந்தாள். . ஒரு உறவின் வேல்யூ தெரியும்போதுதான் அதற்குரிய நியாயத்தையையும் செய்யமுடியும் என்பது அவளது நம்பிக்கை. அஸ்வினுக்கு அவள் மீது நம்பிக்கை வரும் அளவிற்கு நல்ல மனைவியாக அவள் நடந்து கொண்டாள் என்பதும் அவளுக்குத் தெரியும். ஆனால்..…

திருமண பந்தம் புனிதமானது…. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது… காலங்களை தாண்டி நிலைத்து நிற்பது…. முக்கியமாக ஆலமரமென தழைத்து நிற்கும் குடும்ப வரைபடத்தில் புதிய உறவுகளை சேர்ப்பது…. என்பதெல்லாம் அவளுக்குள் பதிந்திருந்தது. அவள் மிகச் சாதாரணமான வாழ்க்கையை வாழ்பவள். மேலும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம். அதன் பார்வையில் மதிப்பான வாழ்க்கையை வாழத் தேவையான உறவுகளை அந்த திருமணம் தரும் என்று நம்பி மணம் புரிந்தவள். ஆனால்….

அவளாக விவாகரத்து கோரவில்லை. அஸ்வினுக்குதான் அவளுடனான வாழ்க்கை போரடித்துவிட்டதாம். புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பி மணவிலக்கு கோருகிறான். இரண்டு மாதங்களுக்கு முன் அவர்கள் பிரிய முடிவெடுத்தனர். அதுவரை ப்ரமோதாவை அவன் குறை ஒன்றும் சொன்னதில்லை. அவர்கள் திருமணம் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம். ஒரு திருமண நிகழ்வில் அவளை பார்த்துவிட்டு மிகவும் பிடித்து போனதால், அஸ்வினே விருப்பப்பட்டு பெரியோரின் அனுமதி பெற்று அவளை மணந்து கொண்டான். மணவாழ்க்கையில் அவர்கள் மகிழ்வாகவே இருந்ததாகவே ப்ரமோதாவிற்கும் தோன்றியது.

அவளுடைய அன்பு, அக்கரை, நேர்மை அத்தனையும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். பார்த்து பார்த்து அவள் செய்த சமையலை பாராட்டுவான். சிரித்து பேசி மகிழ்ந்து அவர்களுடைய வாழ்க்கை இனிமையாகவே சென்றது.

‘ப்ரமோதா என்றால் வாழ்வில் வசந்தத்தை தருபவள் என்று அர்த்தமாமே உண்மைதான்… என் வசந்த காலம் வந்துவிட்டது.’.

‘ப்ரமீ, நீ மிகவும் அன்பானவள். அம்மா அப்பா அனைவருக்கும் உன்னை பிடித்திருக்கிறதாம். தங்கமான பெண் என்கிறார்கள்.’

‘உன் வீட்டில் நீதான் செல்லமாமே. எனக்கும் நீதான் செல்லக்குட்டி’

‘உன் அலுவலகத்திலும் நீதான் ஃபேவரிட் ஸ்டாராமே. ஒரு உதவி என்றால் ஓடி ஓடி செய்வாயாமே?’

‘உனக்கு ரொம்பவும் இளகிய மனது.. யாருமே கண்டுகொள்ளாதபோதும், மயங்கிவிழுந்த அந்த பாட்டிக்கு உதவி செய்துவிட்டுதான் வந்தாய். லவ் யூ டார்லிங்!’

அந்த இளகிய உள்ளம்தான் அவளின் வாழ்க்கைக்கு சோதனையாக அமைந்தது. அவளது அலுவலக தோழி மேகலாவின் கணவன் நான்கு மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்துவிட இரண்டு வயது மகனை கையில் பற்றிக் கொண்டு தனியே தவித்து நின்றவளை ஆறுதல் கூறி தேற்றினாள். அதிலும் மேகலா காதல் திருமணம் செய்து கொண்டதால் இரண்டு வீட்டினரின் ஆதரவும் இல்லை. அவளுக்குத் தேவையான உதவிகளை ப்ரமோதாதான் செய்தாள்.

அதிலும் அப்பாவை இழந்து நின்ற அந்த இரண்டு வயது குழந்தைமேல் அவளுக்கு பரிதாபம் அதிகம் வந்தது. குழந்தைகள் சரியாக வளர்க்கப்படுவதில்தான் எதிர்கால சமுதாயத்தின் நலன் இருக்கிறது. அதற்காகவே அவள் மேகலாவிடம் அக்கரை காட்டினாள். அஸ்வினுக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவே அவனும் உதவினான்.

எங்கே எப்போது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடிக்கு ஒரு தவறான எண்ணம் தோன்றிட… மேகலாவின் பக்கம் அஸ்வின் சாய்ந்திட்டான். ப்ரமோதாதான் விவாகரத்து பெறும் நிலைக்கு ஆளானாள். மேகலாவின் சினேகித துரோகம், கட்டிய கணவனின் நம்பிக்கை துரோகம்… இவை அத்தனையும் சேர்ந்து அவளை கொதிக்க வைத்தன. பெரியவர்கள் தலையிட்டும் மனமாற்றத்தை கொண்டுவர முடியவில்லை. அஸ்வினும் ப்ரமோதாவும் பரஸ்பர ஒப்புதல் தந்து விவாகரத்தை கேட்டிருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.