(Reading time: 15 - 29 minutes)

“ப்ரமீ, எழுந்திட்டியா? பல் விளக்கிவிட்டு ஹாலிற்கு வா. காபி கொண்டு வருகிறேன்.” அம்மாவின் குரல் அவளின் எண்ண ஓட்டத்தை தடை செய்தது.

அறையின் உள்ளே வந்த அம்மா, ப்ரமோதாவின் அருகில் அமர்ந்து தலையை வருடிவிட்டாள். “உனக்கு ரொம்பவும் கஷ்டமாகவே இருக்கும் செல்லம்!. நம்பிக்கை துரோகம் என்பது நம் வாழ்க்கையை மறித்துக் கொண்டு ஓடும் நெருப்பு ஆறு. மலைத்துக் கொண்டே தேங்கி நிற்காமல் அந்த ஆற்றை கடந்தே ஆக வேண்டும். இல்லையென்றால், நம்மை அது எரித்துவிடும்.” என்ற அம்மாவின் மடியை கட்டிக் கொண்ட ப்ரமோதா அழுதாள்.

“நெருப்பை கடக்கும் திறமை எனக்கு இல்லையேம்மா. அஸ்வின் செய்த துரோகத்திற்கு… அவனை என்னால் ஒதுக்கித் தள்ளவும், யாரோவென நினைத்து கடந்து போகவும் முடியும். ஆனால், நாளைய என்னுடைய உலகத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. எப்படி அதனை எதிர்கொள்வேனம்மா? நான் ஒரு தவறும் செய்யவில்லையே..”

“உன் மேல் தவறில்லை ப்ரமீ. அஸ்வினுடைய பார்வைதான் மாறிவிட்டது. அடிப்படையில் அவனுக்கு திருமணம் பற்றிய புரிதலே தவறாகத்தான் இருந்திருக்கிறது….தேவைக்கு வாழ்ந்திருக்கிறான்” சற்று நிதானித்து குரலை செருமிக் கொண்டு தொடர்ந்தாள்.

“உன்னை பார்த்ததும் மணம் முடிக்கத் தோன்றியது போல, இப்போது மேகலாவை உரிமையுடன் மணம் முடிக்க விரும்புகிறான்.அவனுக்குரியதை அடுத்தவர் கொண்டு செல்லாமல் காப்பாற்றிக் கொள்ளும் ஆதிகால நோக்கமாக திருமணத்தை நினைத்திருக்கிறான்.” சமூகவியல் பேராசிரியையான அம்மாவின் வார்த்தைகள் அவளுக்கு மெல்ல புரிய ஆரம்பித்தன.

“ப்ரமீ, இது போன்ற திருமண பந்தம் பற்றிய எண்ணங்கள் சில ஆண்கள் மனதில் ஆரம்பத்தில் இருந்தாலும், குடும்பம் பிள்ளைகள் என்று ஆன பின்பு மாறிவிடும். பொறுப்பானவர்களாக மாறிவிடுவார்கள். அதுவரை நல்ல வளர்ப்பும் குடும்ப பின்னணியும் மனதிற்கு கட்டுப்பாட்டை தரும். ஆனால், நல்ல குடும்பத்தில் பிறந்த இவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை.” ஆமாம், அவளுடைய புகுந்தவீட்டு மனிதர்களை பற்றி ஒரு குறையும் கூறமுடியாது. அவள் மேல் அதீத பிரியம் உள்ளவர்கள். அவர்களையும் ஒதுக்கிவிட்டுத்தான் இந்த முடிவை எடுத்தான்.

“திருமணம் என்பது ஆல்போல் வளரும் உறவென நாம் நினைக்கின்றோம். புயல் காற்றுக்கும், அடை மழைக்கும் விழாமல் உறுதியாக பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தாலும் , சில உறவுகள் சிறு தூசி பட்டாலும் உடைந்துவிடும் காற்றுக் குமிழாகிவிடுகின்றன. அதற்குள் இருக்கும் காற்று நம்முடைய உயிர் காற்று என்பதைக்கூட கூட அறியாதவர்களால் நம் கண் முன்னேயே அது உடைபட்டுப் போகிறது.” எண்று கூறி கண்கலங்கிய அம்மாவை தேற்றும் பொருட்டு,.

“அம்மா, நான் நன்றாகவே இருக்கிறேன். பயப்படாதீர்கள். குளித்துவிட்டு வருகிறேன். காபி எடுத்து வையுங்கள்” என்றபடி படுக்கையைவிட்டு எழுந்து கொண்டாள். குளித்து முடித்து ஹாலிற்கு சென்றால், அவளுக்காக அனைவரும் காத்திருந்தனர். அப்பா ஆரம்பித்தார்..

“ப்ரமீ, நம் வக்கீலிடம் பேசிவிட்டேன். சரியாக பத்து மணிக்கு குடும்பநல கோர்ட்டிற்கு வர சொல்லிவிட்டார்.. நீ ஒன்றும் கவலைப்படாதேம்மா. நாங்கள் உனக்குத் துணையாக இருக்கிறோம். உன் முடிவை உறுதியாக சொல்லிவிடு” என்றார். மேலும் தொடர்ந்து,

“ஆமாம், இன்றுடன் அவனைத் தலைமூழ்கிவிட்டு வா. என்ன ஒரு துரோகம்?… அவன்தான் உன்னை பெண் கேட்டு வந்தான். இப்போது கசந்துவிட்டதாக்கும். அந்தம்மா சம்பந்தி என்னதான் பிள்ளையை பெற்று வளர்த்தார்களோ?”” என்று பொருமினார்.

“அவங்களை குறை சொல்லாதீங்கப்பா… அவர்களும் எவ்வளவோ பேசிப் பார்த்தும்… முடியாமல் போய்விட்டது.” ப்ரமோதா பதில் கூறினாள்.

“சரி, அதைவிடுங்க, ப்ரமீ கிளம்ப தயாராகட்டும். கோர்ட்டிற்கு செல்ல நேரமாகிவிட்டது.” அம்மா கூற, தங்கை அவளை கட்டிபிடித்து “நாங்க இருக்கிறோம். கவலைப்படாதேக்கா” என்றாள். ப்ரமோதாவும் அப்பாவும் மட்டும் கோர்ட்டிற்கு கிளம்பினார்கள்.

சரியான நேரத்தில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டவர்கள், தங்களின் அழைப்பிற்காக கோர்ட்டு அறைக்கு வெளியே காத்திருந்தார்கள். அப்போது தொலைவில் வந்து நின்ற காரில் இருந்து அஸ்வின் இறங்கினான். அவனுடன் மேகலாவும் கையில் இரண்டு வயது மகனை தூக்கிக் கொண்டு இறங்கினாள். அப்பா ‘த்த்தூ’ என்று காரித்துப்பிய சப்தம் கேட்டது. அவர்களை பார்க்க விரும்பாமல், ப்ரமோதா தலையை திருப்பிக் கொண்டாள்.

அவர்கள் இருவரும் நடந்து வந்து அவளை கடந்து சென்றார்கள். மேகலா தலையை திருப்பி அவளை பரிதாபமான பார்வை பார்த்தாள். அஸ்வின் தொலைவில் வக்கீலுடன் பேசிக் கொண்டிருக்க, மேகலா வேறு வழியறியா சூழ்நிலை கைதிபோல… குற்ற உணர்வு கொண்டவள் போல அவளருகில் வந்து நின்றாள்.

“ஸாரிப்பா, இப்படியாகும் என்று நான் நினைக்கவில்லை. அஸ்வினுக்கு என்மேல் எப்படி இவ்வளவு பிடிப்பு வந்தது என்றும் தெரியவில்லைப்பா. நானும்கூட எவ்வளவோ…” அவளை முடிக்கவிடாமல், ப்ரமோதா வாயை மூடிக் கொள்ளும்படி சைகை காட்டினாள். “ஷட்-அப்.” கடுமையாக கூற அவ்விடம் விட்டு அவள் அகன்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.