(Reading time: 15 - 29 minutes)

“அப்பா, திருமணம் என்பது நம் கலாச்சாரம் தொடர்புடைய ஒரு சடங்கு. அது எனக்கு ஒரு மரியாதையை என் சமூகத்தில் வாங்கித் தரும். பாதுகாப்பு, என் குழந்தைக்கான எதிர்காலம்… இவற்றை தரும் ஒரு ஒப்பந்தம். அவனுக்கு ஒரு நல்ல அப்பாவாக இருக்கும் தகுதிகூட இருக்கலாம். இதையெல்லாம் இழக்கும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்து விடவில்லை. மற்றபடி ஆதர்ச தம்பதிகள்…. கருத்தொருமித்தவர்கள்…. என்பதெல்லாம் அப் டு த ஸ்கேல். எல்லோருக்கும் கிடைக்காது. அது இல்லாமல் வாழவே முடியாது என்பதும் இல்லை. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்ந்து கொள்கிறேன்”

“உனக்கு ஏன் இந்த தண்டனைம்மா? விட்டுத் தொலைத்திருக்கலாமே”

“அப்படியெல்லாம் விட்டுவிட முடியாதுப்பா. சாமர்த்தியத்திற்கு பதில் ஏமாளித்தனம்தான் என்பது எப்போதுமே இருக்காது. அப்பா, ஐ டூ ஹாவ் மை சான்ஸ்!”

அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவளருகில் வந்த அஸ்வின் “டேக் கேர், ப்ரமீ” என்று குரல் கரகரக்க சொல்லிவிட்டு விறுவிறுவென அவ்விடம் விட்டு நகர்ந்தான். தனியே சென்று காரில் ஏறி கிளம்பிவிட்டான்…. மேகலா இல்லாமலே….!

அவனுடைய குழந்தைக்காக வந்த ரிக்வெஸ்ட் அது. உண்மையில் ப்ரமீயின் அன்பும் காதலும் அவனிடம் மதிப்பிழந்து நின்றன. அவனுடைய உரிமையாக குழந்தையை நினைக்கும் அளவிற்கு அவளை நினைக்கவில்லை. அன்பு இருந்திருந்தால் உரிமை கோரும் தன்மையும் வந்திருக்கும்…. அவளுள் இருந்த கணவன் என்ற பிம்பம் இப்படியாக கலைந்து போனது. இது அவள் கணவனல்ல… அவன் காற்றில் கரைந்து போனான். இப்போது இருப்பது சற்றே வடிவம் மாறிய காற்றுக் குமிழ் மட்டுமே. அப்போது….

தீர்ப்பின் விவரத்தை தெரிந்து கொண்டு, இடுப்பில் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கே ஓடி வந்த மேகலா, அவளை விட்டு அஸ்வின் சென்றுவிட்டதை பார்த்தாள்.. சக்தியிழந்தவள் போல் தடாலென்று தரையில் விழுந்தாள்…

“என்னை விட்டுட்டு போயிட்டானா…? அடிப்பாவி… என் வாழ்க்கையை அழித்துவிட்டாயே…. என்னை வாழ விடாமல் செய்து விட்டாயே.. இப்படி அனாதையாக என்னையும் என் பிள்ளையையும் நிறுத்திவிட்டாயே…“ என்று உருண்டு புரண்டு கதற ஆரம்பித்தவளை பார்த்து,

ப்ரமோதாவிற்கு… எந்த அழுகுரலையும் கேட்க சகிக்காத இரக்க குணமுள்ள ப்ரமோதாவிற்கு… காதல், நட்பு ஆகியற்றில் நம்பிக்கை வைத்திருந்த ப்ரமோதாவிற்கு…. இந்த சந்தப்பவாதிகளின் கூச்சமில்லாத செயல்களை பார்த்து அசந்தர்ப்பமாக சிரிப்பு வந்தது. அடக்கமாட்டாமல் வெடித்துக் கொண்டு வந்த சிரிப்பினை உதடு கடித்து ரத்தம் வர அடக்க முயற்சித்தாள். அதற்கும் அடங்காமல்… . அவளுக்குள்ளிருந்த அன்பு, பாசம், காதல், நட்பு, இரக்கம், கருணை அத்தனையையும் அழித்துக் கொண்டு அந்த சிரிப்பு வெடித்து கிளம்பியது. அது அந்த வளாகத்தில், கணவனை இழந்த கண்ணகி மதுரையை அழித்தபோது கிளம்பிய எரிதழல் சிரிப்பாக ஒலிக்க ஆரம்பித்தது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.