(Reading time: 15 - 29 minutes)

அன்பு, பாசம், காதல், நட்பு, கருணை, இரக்கம் அத்தனையையும் அழித்துவிட்டு விளக்கம் தருகிறாளாக்கும்…? இவை அத்தனையையும் ப்ரமோதா நம்பியதும் கடைபிடித்ததும் உண்மையென்றால், அவளுக்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும். அத்தனை எளிதாக அவளை யாரும் விலக்கி வைக்க முடியாது. எப்போது தேவையோ அப்போது அந்த முடிவினை அவளே எடுப்பாள். அதனை அவள் மனதிற்குள் உறுதியாக நினைத்தாள்.

“ப்ரமோதா, நீங்கள் இந்த விவாகரத்திற்கு சம்மதிக்கிறீர்களா?”

 நீதிமன்றத்தில் பெண் நீதிபதி அவளிடம் அந்த கேள்வியை கேட்டபோதும் அவளுக்கு அதே தீர்மானம்தான். துயரத்தினால், கரகரத்திருந்த குரலை செருமி சரி செய்து கொண்டு ப்ரமோதா கூறினாள்.

“மை லார்ட், எனக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை” உறுதியாக கூறிட, அஸ்வின் அதிர்வது துல்லியமாக தெரிந்தது.

“ஆனால், இந்த வழக்கை தாக்கல் செய்யும்போது இருவரும் மனம் ஒத்து பிரிவதாக கையெழுத்திட்டிருக்கிறீர்களே?” அவர் மேலும் கேட்க,

“உண்மைதான் மேடம், ஆனால், இப்போது என் சூழ்நிலை மாறிவிட்டது. விவாகரத்து கோரும் நிலையில் நான் இல்லை.”

“ஏன்?”

“நான்… கருவுற்று இருக்கிறேன்… மூன்று மாதம்” என்றாள். ப்ரமோதா நீதிபதியிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அஸ்வினிடம் ஏற்பட்ட மாற்றத்தை அவளால் யூகிக்க முடிந்தது. அவன் விறைப்புற்று, பனிச்சிலையென உறைந்து போய் அவளை நோக்குவதை உணர முடிந்தது. என்ன இருந்தாலும் மனிதன் ஒரு சமூக விலங்குதானே. பிள்ளை குட்டி குடும்பம் என்று சமூகத்தில் கிளைபரப்பும் ஆசை உள்ளவன்தானே..? இவனுக்கு மட்டும் தன் பிள்ளை என்ற எண்ணம் இருக்காதா என்ன?.

“இதோ அதற்கான ரிப்போர்ட் மேடம். தயவு கூர்ந்து என் நிலையினை புரிந்து கொண்டு தாங்கள் தீர்ப்பளியுங்கள். ஒரு குழந்தை மேல் .தந்தைக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு தந்தை மேல் குழந்தைக்கும் உள்ளது. என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து குழந்தையின் வாழ்வை தீர்மானிக்க மாட்டேன்.” கையெடுத்து கும்பிட்டு அவள் கேட்டாள். அந்த ரிப்போர்ட்டினை படித்துவிட்டு,

“ப்ரமோதா, விவாகரத்து என்பது பெண்ணின் உரிமையும்கூட. அவளின் கருத்திற்கு மதிப்பு தரப்படும். சரி, அஸ்வின் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” ப்ரமோதா எதிர்பார்த்த பதிலை அவன் கூறினான்.

“இல்லை மேடம், எனக்கும் இதில் விருப்பம் இல்லை. இந்த விவாகரத்து மனுவை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்”. ப்ரமோதாவிற்கு அம்மா கூறிய ‘அவனுக்குரியதை அடுத்தவர் கொண்டு செல்லாமல்’ என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதும் புரிந்தது.

“நல்லது, உங்கள் இருவரின் கோரிக்கையினையும் ஏற்று வழக்கினை தள்ளுபடி செய்கிறேன். இனியாவது பொறுப்பை உணர்ந்து வருங்காலத்தில் நல்ல பெற்றோர்களாக நடந்து கொள்ளுங்கள்.” நீதிபதி தீர்ப்பளித்தார்.

அவருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்து திரும்பிய ப்ரமோதா தந்தையிடம் சென்றாள். கோர்ட் அறையின் வாசலில் தீர்ப்பின் நகலுக்காக காத்திருந்தபோது,

“ப்ரமீ, ஏண்டா, நீ இப்படி கூறிவிட்டாய்? விட்டு தொலைத்துவிடு என்று அனைவரும் கூறியிருந்தோமே?” அவளின் அப்பா வினவினார்.

“அப்பா, நான் உண்மையாகவே வாழ்ந்தேன். உண்மைக்காகவே வாழ்வேன். தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டேன். அதற்காகவே, ஒரு காற்றுக் குமிழை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன்” வெறுப்பாக சிரித்தாள். இந்த பந்தம் ஆயிரம் காலத்து பயிரல்ல, கைபட்டால் உடைந்துவிடும் ஆபத்தில் பயணிக்கும் வெறும் வெற்று குமிழ்தான்!

“இப்படியெல்லாம் குடித்தனம் நடந்தால் அது நல்லதொரு குடும்பமாக இருக்குமாடா”

“அப்பா, குழந்தை என்பது அப்பா அம்மா இருவரின் பொறுப்பும்தான். அஸ்வினால் யாரோ ஒருவர் பெற்ற ப்ரமோதாவை விட்டுக் கொடுக்க முடியும் அவனுடைய பிள்ளையை விட்டுக் கொடுக்க மாட்டான். அவன் அந்த அளவிற்கு இனெர்ட் அல்ல!. அவனுடைய பொறுப்பை அவன் சுமந்தே ஆக வேண்டும்”

“ஆனால், எப்போதும் ஒரு வெறுப்பில் வாழ முடியாதேம்மா?”

“அவனைவிட்டு விலகினால் மட்டும் வெறுப்பு மறைந்துவிடுமா?, நானும் அவனுக்கு நிறைய காற்றுக் குமிழ்களை பரிசளிக்க வேண்டாமா?”

“காலம் முழுவதும் நீ தனித்து இருக்க வேண்டியதில்லை ப்ரமீ. வேறு யாரையாவது மணம் முடிக்கலாம் அல்லவா…”

“எனக்கு வேறு வாழ்க்கை தேடிக் கொள்ளும் எண்ணம் கிடையாது. அப்புறம் அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம். அவன் என்னிடம் நல்ல கணவனாக ஒரு காலத்தில் நடந்து கொண்டிருக்கிறான். நானும் முழு மனதோடு வாழ்ந்திருக்கிறேன்.”.

“ஆனால்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.