(Reading time: 12 - 24 minutes)

அந்நேரத்தில் ஏதோ கார் சத்தம் கேட்க வெளியே வர எத்தனித்தவளை அறைக்குள் போகச் சொல்லி செய்கை செய்தாள் பாட்டி.உள்ளே சென்ற பின் தன் சொந்தக்காரர்கள் ஒருவர் பின் ஒருவராக வீட்டுக்குள் வருவதையும் அவர்களுடன் தன் மாமா வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளைத் தோரணையில் வருவதையும் அப்பா அவர்களுடன் தான் வருகிறார் என்பதையும் தன் தங்கைகள் கூறக் கேட்டு அதிர்ந்து விட்டாள்.

அவளுக்கு இப்பொழுது என்ன நடக்கிறது எனத் தெரிந்து விட்டது.ஆனால் மாமா ஏன் மாப்பிள்ளை போல் வருகிறார்.அத்தை எங்கே? என அவள் குழம்பிக் கொண்டிருக்கும் தருணத்தில், பாட்டி அவளை அழைத்தார்.வெளியே வந்த அவளைப் பார்த்து புன்னகை செய்தார் மாமா.தனது மாமா தானே என்ற எண்ணம் இப்பொழுது அவளுக்கு சுத்தமாக இல்லை.இதெல்லாம் கனவாய் இருக்கக் கூடாதா என்ற அவளின் எண்ணமே மேலோங்கி இருந்தது.பாட்டி அவளை உள்ளே போகச் சொன்னதும் சென்றவள் அப்படியே மயங்கி விட்டாள்.அனைவரையும் வழியனுப்பி விட்டு பாட்டி அம்மா அப்பா என அனைவரும் இவளது நிலை கண்டு அதிர்ந்து விட்டார்கள்.முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினர்.

“அப்பா என்ன நடக்கிறது இங்கே?” என அதிர்ச்சியுடன் கேட்டவளுக்கு விடை கூற வார்த்தையற்றவளாய் அம்மா அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.ஆனால் ஜனனியின் அப்பாவால் அப்படிச் செல்ல முடியவில்லை.அனைவரையும் வெளியே போகச் சொல்லி விட்டு ஜனனியின் பக்கத்தில் உட்கார்ந்து அவளது முகத்தைப் பார்க்க தைரியம் அற்றவராய் தரையைப் பார்த்துக் கொண்டே ஜனனியிடம் பேசத் தொடங்கினார்.”அம்மா ஜனனி, உனக்கு இந்த குடும்பத்தின் மேல் அக்கறையிருப்பது எனக்கு நன்றாகத் தெரியும்.உனக்கு அப்பாவால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது அம்மா.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என நான் நினைத்துக் கொண்டே இருப்பதால் நான் ஒழுங்காய்த் தூங்கக் கூட இல்லை ஜனனி.உனக்குப் பின் இரு தங்கைகள் இருக்கின்றனர்.நீ அவர்களைப் பார்த்துக் கொள்வாய் என நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது என்றால் அதை விட எனக்கு மனசு வரவில்லை.அதனால்……” அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.இருந்தும் அவர் கூறியே ஆக வேண்டிய நிலைமை.அதனால் ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார்.”அதனால் உனக்கு ஒரு கல்யாணம் செய்து பார்க்கலாம் என முடிவு செய்து விட்டோம்.மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை.உனது மாமா ராசு தான்.அவர் பெரிய பணக்காரர்.உனக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்.உன் தங்கைகளின் படிப்பிற்க்கும் அவர்களின் கல்யாணத்திற்கு ஆகும் செலவுகளையும் அவரே பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.”.

“அப்பா, அத்தை இருக்கிறார் அல்லவா?” என அழுதுக் கொண்டே கேட்ட ஜனனியிடம்,“அவர்கள் பிரிந்து விட்டனர் ஜனனி.உன் மாமா மிகவும் நல்லவர்.அவருடன் வாழ உன் அத்தைக்கு கொடுத்து வைக்கவில்லை.நம் குடும்பம் இருக்கும் நிலைமையில் உனக்கு செலவு செய்து திருமணம் செய்ய இயலாது.அவரே கல்யாண செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டார். குடும்ப நிலைமையை மனதில் வைத்துக் கொள்.இன்னும் இரண்டு மாதத்தில் உனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும்.நான் வருகிறேன்” எனக் கூறிச் சென்று விட்டார்.

அவர் சென்ற பின் ஜனனி அடக்கி வைத்திருந்த அழுகையை மொத்தமாய்க் கொட்டித் தீர்த்தாள்.அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூடத் தெரியவில்லை.கல்யாண வேலைகள் மும்முரமாய் நடந்துக் கொண்டிருந்தது.

இது அனைத்திற்க்கும் அவளது வீட்டு நிலைமையே காரணம் என அவளுக்கு நன்றாகத் தெரியும்.அவள் படித்து மருவத்துவராகி தன் பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என நினைத்திருந்தாள்.இப்படி நிலைமை தலைகீழாய் மாறிப் போகும் என அவள் நினைத்திருக்கவில்லை.

அவளை பள்ளிக்கும் அனுப்பவில்லை.படிப்பை நிறுத்தி விட்டனர்.கல்யாண நாள் நெருங்கிக் கொண்டே வந்தது.அவளை வெளியே எங்கும் அனுப்பவில்லை.இதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை என அவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.இருந்தும் வேறு வழியில்லை. கிராமம் என்பதனால் இது போன்ற நிகழ்ச்சிகள் சாதாரணமாக நடப்பவையே.அதனால் வேறு யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அவர்களிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தாள் ஜனனி.பட்டிமன்றப் பேச்சாளர் அல்லவா? ஆனாலும், நடுவர்களிடம் பேசி பாராட்டுப் பெற்ற அவளால் தன் குடும்பத்தைச் சமாதானப் படுத்த முடியவில்லை.

சிறிது நாட்களில் அவள் பேசுவதையே சுத்தமாய் நிறுத்தி விட்டாள்.மௌனம் சம்மதம் என நினைத்துக் கொண்டனர்.அவள் சம்மதம் இங்கு அவர்களுக்கு முக்கியமாய்ப் படவில்லை.இருந்தும் அவர்கள் நினைத்தது நடந்து விட்டது என மகிழ்ந்தனர்.இவளும் ஒத்துழைக்க ஆரம்பித்து விட்டாள்.ஒத்துழைக்க ஆரம்பித்து விட்டாள் என்பதை விட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினால் சரியாய் இருக்கும்.

கல்யாண நாளும் வந்தது.ஜனனியைத் தவிர அனைவரும் சந்தோசமாய் இருந்தனர்.மாமாவை மேடையில் அமர வைத்தனர்.ஜனனியை அழைத்து வர அவளது தங்கை சென்றாள்.அக்காவின் இந்த நிலைமையைக் கண்டு அவள் இவ்வளவு நாட்கள் சிரிப்பதையே மறந்து போயிருந்தாள்.ஆனால் இன்று மிகவும் சந்தோசமாய் இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.