(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - நீரும் நெருப்பும் - K.சௌந்தர்

fireWater

சிலு சிலுவென தென்றல் வீசி பால்கனியில் நின்றிருந்த ஹரிஹரனின் சிகையை கலைத்துவிட்டு சென்றது. முழு நிலவின் ஒளியில் சிங்காரச் சென்னை மூழ்கியிருந்தது. மணி  பத்தானது. இன்னும் அவர் மனைவி  உள்ளே வரவில்லை. கிச்சனில் உருட்டும் சப்தம் கேட்டது. தூக்கம் லேசாக கண்களைத் தழுவிய நேரம் அவள் வரும் அரவம் கேட்டது. சாருமதி இந்த நாற்பத்தைந்து வயதிலும் முழுமதிதான்.

உள்ளே நுழைந்த அவள் கையிலிருந்த ஆர்லிக்ஸை டீப்பாய் மேல் வைத்துவிட்டு அவரை  நோக்கி வந்தாள். “என்னங்க அதுக்குள்ளே தூங்கிட்டீங்களா ?” என்றபடி கால்மாட்டில் அமர்ந்தாள்.

“எங்கே தூங்கறது. ஒருவேளை தூங்கிவிட்டாலும் நீ எழுப்பி அந்த ஆர்லிக்ஸை கொடுக்காம விடப்போறதில்லை. சரி கொடு”. என்றபடி எழுந்து அமர்ந்தார் ஹரி.

காலிக்   கோப்பையை அவளிடம் நீட்டியபடி “பசங்க ரெண்டுபேரும் தூங்கியாச்சா ?” என்றார்.

“பெரியவா தூங்கிட்டா , சின்னது ஏதோ பூஜையறையில் கிளீன் பண்ணிக்கிட்டு இருக்கு. வர்ற வெள்ளிக்கிழமை  வரலக்ஷ்மி பூஜையில்லை? அதான், என்ன இருந்தாலும் அவளுக்கு பொறுப்பு அதிகம்” என்றாள்.

“ஆமாம், பெரிய பொறுப்பு, நாளைக்கு காலேஜ் போகணுமே வேளையா தூங்க வேணாமா? இப்போ இவதான் இதெல்லாம் செய்யணுமா? நீ செய்துக்க மாட்டியா ?? " என்றார் சலிப்புடன்.   

அவருக்கு  எப்பவுமே பெரியவள் மேலேதான் இஷ்டம். அதனால சின்னவள் என்ன செய்தாலும் குறை சொல்வார்.

மூத்தவள் அகல்யா எதிலும் போல்ட் டைப் . தனக்கு சரியென்று பட்டதை முகத்துக்கு நேரே சொல்லிவிடும் ரகம். ஆணாக பிறக்கத் தவறி பெண்ணாக பிறந்தவள் . இருபத்தி இரண்டு வயது. எம். இ முதல் வருடம். இவள்  அப்பா  செல்லம். இளையவள் அமுல்யா பெயருக்கேற்ப அமுல் பேபிதான் . இளகிய மனது. அமைதி. பிறர் மனசு நோக பேசமாட்டாள். பதினெட்டு வயது .எம்.பி.பி.எஸ் முதல் வருடம். இவள் அம்மா செல்லம்.  

பூஜைக்கு பெண்கள் இருவருக்கும் வேலை கொடுக்க முனைந்த போது அகல்யா இயல்பாகவே வேண்டிய பொருட்களை வாங்க கடைக்கு அப்பாவுடன் காரில் கிளம்பிவிட்டாள். அமுல் தாயுடன் வீட்டு வேலைகளை பார்க்கத் தொடங்கினாள்.

" நீயும் கூட போயேண்டி" என்று சாருமதி சொன்னதற்கு “வேணாம்மா ..நா உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் " என்றபடி வீட்டிலேயே இருந்துவிட்டாள்.

"விடு சாரு...அது ஒரு கட்டுப் பெட்டி. அப்பிடியே உன்னைப் போல..." என்றவர் அவள் முறைப்பதை பார்த்து சிரித்துவிட்டு காரில் ஏறினார்.

அன்று பூஜைக்கு நேரம் ஆகிவிட்டது. நிறைய விருந்தினர்கள் . பெண்கள் இருவரும் கல்லூரியிலிருந்து  வரவில்லை. ஒரு மணிநேரம் கழித்து வந்த அகல்யாவை சாருமதி பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டாள். அவள் திட்டி முடித்ததும் அகல்யா " சாரிம்மா ... காலேஜ் முடிஞ்சதும் ஸ்பெஷல் கிளாஸ் விஷயமா மேடத்தை பார்க்க வேண்டியிருந்தது , அதான் லேட் " என்று பதில் சொல்லிவிட்டு நேரே உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள். அவள் கோபப்பட்டால் இப்படித்தான். யாரிடமும் பேசாமல் தனியே சென்றுவிடுவாள்.

"பாத்தீங்களா உங்க செல்லப்பொண்ணை. நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா. திட்டினதும் ரூமுக்குள்ளே போயிட்டா. இப்போ என்கூட ஹெல்ப் பண்றது யாரு? " என்றாள் எரிச்சலுடன்.

"இவளாவது இப்போ வந்தாள் , உன் செல்லத்தை இன்னும் காணவில்லை ..." என்று கிண்டலடித்தபடி சாருமதிக்கு தானும் பூஜையில் உதவிக்கு கொண்டிருந்தார் ஹரிஹரன்.

இன்னும் அரைமணிநேரம் கழித்து அமுல்யா வந்தாள். சாருமதி அவளை கவனிப்பதற்குள் அவள் மடமடவென்று வேலைகளை பார்க்கத் தொடங்கி விட்டாள் .

வந்தவர்களுக்கு தாம்பூலம், பிரசாதப் பை கொடுக்க, என்று சுழன்றவளை சாருமதியால் மேற்கொண்டு எதுவும் கேட்க முடியாமல் போய்விட்டது.

பூஜை நல்லபடியாக முடிந்தது.

இரவு தூங்கப்போகும் முன் அறைக்கு வந்து “சாரிம்மா, இன்னிக்கு ட்ராபிக் ரொம்ப அதிகமா இருந்ததால என்னால டயத்துக்கு வர முடியலை” என்றாள்.

"ஆமா .  இதுக்குதான் வண்டி கத்துக்கோன்னு பல தடவை சொன்னேன். உங்க அக்காவைப் பாத்தாவது உனக்கு புத்தி வரவேணாம்? ரெண்டு பஸ் மாறி வந்தால் டயத்துக்கு எப்படி வரமுடியும்? இந்த காலத்து பிள்ளைங்களுக்கு அம்மா அப்பா பேச்சை கேக்குற பழக்கமே இல்லை. நீ மட்டும் எப்படி இருப்பே" என்றார் ஹரிஹரன்.

அமுல்யாவின் கண்களில் நீர் தளும்பிவிட்டது.

 “சரி பரவாயில்லைடா நீ அழாதே” , என்று அவள் கண்களை துடைத்து அனுப்பி வைத்தாள் சாருமதி..

 "ஹீம் இதெல்லாம் எப்பிடித்தான் பொழைக்கப் போகுதோ , இப்படி இம்மென்றத்துக்குள்ளே கண்ணுல தண்ணி வச்சிக்குது. அவுங்க அக்கா மாதிரி தைரியமா எப்போதான் பேசப் போகுதோ ?” என்று அங்கலாய்த்துக் கொண்டார் ஹரிஹரன்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.