(Reading time: 11 - 21 minutes)

“என்னங்க, பெரியவளை விட அமுலுக்குத்தான் சாமர்த்தியம் அதிகம். இன்னிக்கி திட்டினப்போ கூட அகிலா மூட் அவுட் ஆகி உள்ளே போயிட்டா. ஆனா அமுல் தான் கூடவே நின்னு எல்லா வேலையையும் பாத்தா. உங்களுக்கு அவ மென்மையா இருக்கறதால அவளுக்கு திறமை இல்லைன்னு தோணுது. அது தப்பு. சாதிக்கும் திறமை ஒரு ஆணை விட பெண்ணுக்கு குறைவுன்னு நினைக்காதீங்க. அவ நூறு சதம் பெண்ணா இருக்கா . எதையும் சாதிக்கும் திறமை என் அமுலுக்கு அகிலை விட அதிகம். நீங்க.  வேணா பாருங்க. " என்றாள் சாருமதி.

“இல்லை சாரு . அகல்யாவுக்குத்தான் சாமர்த்தியம் அதிகம் , ஆம்பளை பிள்ளை இல்லாத குறையை என் அகில் தான் தீர்த்து வைக்கிறா. அன்னிக்கி கூட நா டூருக்கு போயிருந்த சமயம் எல்லா வெளி வேலைகளையும் பத்து  நாளா அகல்யாதான் பாத்துக்கிட்டா.  கடை கண்ணிக்கு ஸ்கூட்டியை எடுத்துக்கிட்டு போய் எல்லாம் வாங்கி வந்தா. அவ மட்டும் செய்யலைன்னா நீயே தான் சிரமப் பட்டிருக்கணும். அதை மறந்துட்டு நீ இவளையே கொஞ்சிக்கிட்டு இருக்கே" என்றார் ஹரிஹரன்.

சாருமதிக்கு அது புரியாமல் இல்லை. அது அவளுக்கு பெருமையும்தான். ஆனால் அதற்காக அமுல்குட்டிக்கு  பொறுப்பில்லை  என்பதுபோல்  அவர்  பேசுவதுதான்  அவளுக்கு வருத்தம். போனமாதம் அவள் காய்ச்சலால் படுத்த போது கூடத்தான் அமுல்யா சமையல் முதல் வீட்டுவேலை எல்லாம் பார்த்து இவர்களுக்கு எந்த தாமதமும் நேராமல் பார்த்துக்கொண்டாள். அதை சொன்னால் நிச்சயம் ஹரிஹரன் அதற்கும் ஏதாவது நொட்டை சொல்வார். எனவே  "சரி சரி சீக்கிரம் தூங்குங்க. நாளைக்கு லீவு நாள். சீக்கிரம் எழுந்து மலைக் கோயிலுக்கு போகணும். நீங்க தானே நேத்து சொன்னீங்க " என்று பேச்சை முடித்தாள்

றுநாள்  மலைக்  கோயிலுக்கு போக குடும்பத்துடன் கிளம்பினார் ஹரிஹரன். தயாராகி மாடியிலிருந்து இறங்கி வந்த இரு மகள்களையும் பெருமையுடன் பார்த்தனர் பெற்றோர்.

ட்ரெஸ் பண்ணுவதிலும் இருவரும் நேரெதிர்தான் . அகல்யாவுக்கு ஜீன்ஸ்பேண்ட் டி- ஷர்ட் தான் இஷ்டம். அன்றும் அதைத்தான் போட்டிருந்தாள் . இளமஞ்சள் நிறத்தில் கருப்பு வரிகள் போட்ட டி ஷார்ட் , கருப்பு ஜீன்ஸ் அகல்யாவுக்கு  ஹைடெக்  லுக்கை கொடுத்தது என்றால் மஞ்சளில் அரக்கு பார்டர் போட்ட பட்டுப் பாவாடை தாவணி அமுல்யாவை தங்க  குத்துவிளக்காக காட்டியது.

காரை எடுத்த அவரை  இரு மகள்களும் தடுத்தனர். டாடி இன்னிக்கி நா ட்ரைவ்  பண்றேன் , நீங்களும் மம்மியும் பைக்கில் பின்னாடியே வாங்க. நா எப்படி ட்ரைவ் பன்றேன்னு பாருங்க” என்றாள் அகல்யா.

அவள் அடிக்கடி ட்ரைவ் பண்ணுவதுதான். ஓரளவுக்கு   நன்றாகவே   பண்ணுவாள்   . எனவே “சரிம்மா.. ஜாக்கரதையா ஓட்டு” என்று கார் சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு ஹரிஹரனும் சாருமதியும் பைக்கில் பின் தொடர்ந்தனர். அகல்யா பக்கத்தில் அமுல்யா உட்கார்ந்திருந்தாள்.

ஒரு லெவல் க்ராஸ்ஸில் அவர்கள் கார் முன்னால் சென்றுவிட பைக் சற்று தாமதித்து சென்றது. திருப்பத்தில் திரும்பிய அவர்களுக்கு பயங்கர ஷாக். அந்த தெரு முனையில் கார் நின்றிருக்க  காரை சுற்றி ஒரே கூட்டம் , ஏதோ ஆக்சிடென்ட் நடந்துவிட்டது புரிய பைக்கை சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு இருவரும் ஓடிச் சென்றனர். கடவுளே யாருக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது..

கூட்டத்தை நெருங்க நெருங்க அகல்யாவின் குரல் ஓங்கி ஒலிப்பது கேட்டது. "என்னசார் நீங்க தப்பா வந்துட்டு என்மேல சொல்றீங்க, ரூல்ஸ் படி நேரா போறவங்க ஸ்பீட் கொறைக்கணும்னு அவசியமில்லை. நீங்கதான் பாத்து வரணும்"  என்றாள்.

எட்டிப் பார்த்த சாருமதிக்கு தலை சுற்றியது..பைக்கும் காரும் மோதிக் கொண்டு, பைக்கும் அதில் வந்திருந்த இளைஞனும் கீழே விழுந்து கிடந்தனர்.

"இடிச்சது இல்லாம திமிரா வேற பேசரியா... இதோ இப்போவே போலீஸ் ஸ்டேஷன் போவோம் , தப்பு யார்மேலேன்னு அவுங்களே விசாரிச்சு சொல்லுவாங்க ..." என்றான் அடி பட்டவன்.

“ஓ பண்ற  தப்பையும் பண்ணிட்டு  போலீசுக்கே போவீங்களா ..போங்களேன் ..எங்கப்பா யார் தெரியுமா? என் சித்தப்பா கூட போலீஸ்ல தான் இருக்கார், “என்றாள் நிமிர்வோடு.

 “ஓ அதனால தான் வண்டியை கண்டபடி ஓட்டி எல்லோர் மேலயும் இடிக்கறியா?” என்றான் ஒருவன்

அவனிடம் அகல்யா ரூல்ஸ் பேச கூட்டம் சலசலப்பாக "ஏ பொண்ணு ..என்ன கார்ல வந்தா கண்ணு தெரியாதா? ஏய் போலீசுக்கு போன் போடுங்கப்பா , இதை இப்படியே விடக்கூடாது ..." என்று தலைக்கு தலை பேச ஆரம்பித்தனர்.

அய்யோ இது என்ன விபரீதம், தப்பு அவன் மேலேயே இருந்தாலும் அவன் அடிபட்டு விட்டதால் கூட்டம் அவனுக்குத்தானே பரிதாபப்படும்?

பதறிப்  போய் ஹரிஹரனும் சாருமதியும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னாள் வர முயன்ற நேரம்  அதுவரை பயந்து அழுது கொண்டிருந்த அமுல்யா முன்னால் வந்து பேச ஆரம்பித்தாள்.

 " சாரி சார் ..வெரி  சாரி ஸார்...நாங்க வேணும்ன்னு மோதலை சார்... பிரேக்கை அழுத்தறதுக்குள்ளே உங்க வண்டி கிராஸ் பண்ணிட்டதால எங்களால ஒண்ணுமே பண்ண முடியலை சார். தயவு செய்து மன்னிச்சுடுங்க, ப்ளீஸ் " என்று அமுல்யா கண்ணீருடன் பேசியது  தவறேதும்  செய்யாத  ஒரு  குழந்தை பயத்தில் மன்னிப்பு கேட்பது போலவே இருக்கவே , கூட்டம் உச்சு கொட்டியபடி மௌனமானது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.