(Reading time: 11 - 21 minutes)

“சரி விடுங்கப்பா ஏதோ பொம்பள புள்ளைங்க பாவம். தெரியாம பண்ணிடுச்சுங்க." என்று ஒரு குரல் கேட்டது. 

அதற்குள் கீழே கிடந்த பைக்கை நாலுபேர் தூக்கி நிறுத்தினர். பைக் காரனும் மெல்ல எழுந்து நின்றான். பெரிய அடி எதுவும் இல்லை என்று அவன் நின்ற தோரணையிலேயே தெரிந்தது.

கூட்டம் எதுவும் பேசவில்லை என்றதும் சற்று தைரியம் அடைந்த அமுல்யா பைக்காரனை நோக்கி " சாரி அண்ணா ,பாவம் உங்களுக்கு அடி பட்டுடுச்சு போலிருக்கு, நீங்க வந்தீங்கன்னா  உங்களை ஹாஸ்பிடல்ல ட்ரோப் பண்ணிடறோம்., உங்க ட்ரீட்மெண்ட்  செலவையும் நாங்களே ஏத்துக்கறோம், ப்ளீஸ் வர்றீங்களா? " என்று அவள் மேலும் கூறவும் பைக் காரனுக்கு சற்று சங்கடமாக்கிப் போனது.

பெண்கள் ஓட்டிய காரில் தான் அடிபட்டுவிட்டதாக ஒப்புக் கொண்டால் தன் ஆண்மைக்கு அவமானம் என்று நினைத்தான் போலும். அதோடு அமுல்யா அண்ணா என்று கூப்பிட்டது வேறு மனதை தொட்டுவிட

"பரவாயில்லைம்மா .. பரவாயில்லை ,எனக்கு பெரிசா ஒண்ணும் அடியில்லை. இனிமேலாவது பாத்து ஓட்டுங்க.." என்றபடி அவன் பைக்கை உருட்டிக் கொண்டு நகரவும் கூட்டம் கலையலாயிற்று .

ஹரிஹரன் பிரமித்துப் போய் நின்றார். பெண்ணின் மென்மைக்கு இப்படி ஒரு சக்தியா ?

அவர்  தோளில் கையை  வைத்து  அழுத்திய சாருமதி "வாங்க போகலாம்.பசங்க பயந்து போய் இருக்காங்க"  என்று சொல்ல  உடனடியாக அந்த இடத்தை விட்டு கிளம்பினர்.

அன்று இரவு

அமுல்யாவின் சாமர்த்தியத்தை  பற்றி நம்ப முடியாமல் வியந்து கொண்டிருந்தார் ஹரிஹரன்.

“அமுல்குட்டியைப்   பத்தி நா நெனைச்சது தப்பாயிடுச்சே , நீ சொன்ன மாதிரி அவளது மென்மையான அணுகுமுறைதான் ஒரு பெரிய பிரச்சனையை தீர்த்திருக்கு . இல்லைன்னா  போலீஸ்  கேஸுன்னு  பெரிய பிரச்சனையாகி  இருக்கும்  " என்றார் .

"இப்போவாவது நா சொன்னதை நம்பறீங்களா  ? பெரியவளை விட சின்னவளுக்குத்தான் சாமர்த்தியம் அதிகம். கடினமான கருங்காலிக் கட்டையை பிளக்கும் கோடரியால் மென்மையான வாழை மரத்தை பிளக்க முடியாது. வலிமையான ஆலமரத்தை வேரோடு சாய்க்கும் புயற்காற்றினால் வளைந்து கொடுக்கும் நாணலை ஒன்றும் செய்ய முடியாது. அது மாதிரிதான் பயங்கரமாக எதிர் பேச்சு, ரூல்ஸ் பேசின அகல்யாவால்  ஆவேசம் கொண்ட கும்பலை சமாளிக்க முடியல , அமுல்யா சட்டென பணிந்து போனதோடு செய்த தப்புக்கு பரிகாரம் செய்ய ஒப்புக் கொண்டது தான் பிரச்னையை சுமூகமா தீர்த்து வச்சுது. " என்று சொல்ல அவரும் அதை ஆமோதித்தபடி "அமுலுக்கு சாமர்த்தியம் அதிகம்னு நா ஒப்புக்கறேன். அதேபோல அமுல் இனிமே என் செல்லம்ன்னு நீ ஒப்புக்கணும் " என்றார் கண் சிமிட்டியபடி.

"க்கூம்  , இதுல  கூட  பங்குக்கு  வந்துடுங்க ..." என்று ஒழுங்கு காட்டியபடி  அவரோடு  சேர்த்து  சிரித்தாள் சாருமதி.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.