(Reading time: 12 - 24 minutes)

ஜனனியை மேடைக்கு அழைத்து வந்தனர்.தாலி கட்டும் நேரம் வந்தது.கெட்டிமேளச் சத்தம் காதைப் பிளந்தது.சிரித்த முகத்துடன் எந்த ஒரு சலனமும் இன்றி மேடையில் அமர்ந்திருந்தாள் ஜனனி.அவளது பெற்றோர் ஒரு கடமை முடியப் போகிறது என மிகவும் சந்தோசப்பட்டனர்.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என அய்யர் கூற மேளச் சத்தம் கேட்கும் என எதிர்பார்த்திருந்த தருணத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.அதிர்ந்து போய் அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினர்.ஜனனி எழுந்து தன் கழுத்தில் கிடந்த மாலையை கழட்டினாள்.மேடையை விட்டு இறங்கி துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த பெண் போலீசின் அருகில் சென்றாள்.

“அனைவரும் ரொம்பவே அதிர்ச்சியடைந்திருப்பீர்கள்.இதற்கு காரணம் யார் என குழம்பிப் போயிருப்பீர்கள்.இவளை வெளியே கூட விடவில்லையே எப்படி இது சாத்தியம் என ஆச்சரியப்படும் உங்களுக்கு நான் சில விஷயங்களை கூற விரும்புகிறேன்.இந்த கல்யாணத்திற்க்கு ஒத்துழைத்தேன் என நீங்கள் எண்ணியிருப்பீர்கள்.நான் முன்பே இதை நிறுத்தியிருந்தால் என்னுடைய வாழ்க்கையை மட்டுமே காப்பாற்றியிருக்க முடியும்.ஆனால் இது போன்ற நிகழ்வுகள் இங்கு சாதாரணமாய் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.இது தவறு என அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகதான் இவ்வளவு நாட்களாய் நான் ஒத்துக் கொண்டது போல் நடித்தேன்.பெண் பிள்ளைகள் கல்யாணம் செய்து கொண்டு மாமியார் வீட்டில் நல்ல பெயர் வாங்கி தங்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என நினைக்கும் அனைவரும், அவர்கள் படித்து வேலை செய்து கூட உங்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள் என ஏன் நினைக்கவில்லை.உங்கள் கடமை முடிய வேண்டும் என்பதற்காக அவர்களை கரையேற்ற நினைக்கிறீர்களே அவர்கள் காலம் முழுவதும் வாழப் போகும் வாழ்க்கையை அவர்களது விருப்பத்திற்கு மாறாய் அமைத்துக் கொடுக்க எண்ணுகிறீர்களே அவர்களது கனவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என உங்களுக்குத் தோன்றவில்லையா.எனக்கு என் பெற்றோரின் சந்தோசம் முக்கியம்தான் ஆனால் அவர்களுக்கு எனது சாதனைகள் மூலம் சந்தோசத்தைத் தர வேண்டும் என எண்ணுகிறேன்.ஏழையாய்ப் பிறந்தால் இப்படி குடும்பத்திற்காக எதையும் தாங்க வேண்டும் என நிறைய பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் தன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள பணம் மட்டும் முக்கியம் இல்லை.பெண்களுக்கு எதையும் எதிர்த்துப் போராடும் தைரியம் தான் முக்கியம் என நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கல்யாணம் செய்து வைப்பது தவறல்ல ஆனால் அதற்கென வயது இருக்கிறது.இதை நான் தனியாக செய்யவில்லை.இந்த பயணத்தில் எனக்கு உறுதுணையாய் இருந்து என் மேல் நம்பிக்கைக் கொண்டு எனக்கு உதவிய என் தங்கை அனுவின் நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பாற்றுவேன்.அம்மா…,அப்பா… நான் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்.நான் செய்தது சரிதான் என என் செயல்கள் மூலம் நிச்சயம் ஒரு நாள் உங்களுக்குப் புரிய வைப்பேன்” என குழந்தைகள் கல்யாணத்திற்க்கு எதிராய்த் தன் கிராமத்தில், முதல் விதையைத் தூவிய திருப்தியில் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் மண்டபத்தை விட்டு வெளியேறினாள் ஜனனி.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.