(Reading time: 10 - 20 minutes)

இன்று அவர் இல்லை என்றாலும் , அவர் அன்று இல்லை என்றால் தனது நிலைமை என்ன என்று எண்ணி பார்க்கவே அச்சமாக இருந்தது அவளுக்கு. “நீ பெண் என்று உனக்கு தெரியும். அதில் உறுதியாக இரு” என்று அவர் கூறிய வார்த்தை தான் தன்னை இன்று வாழ வைத்திருக்கிறது என்று எண்ணி மகிழ்வாள். எல்லா தடைகளையும் உடைத்து பொறியியல் முடித்து இன்று ஃப்ரீலேன்சராக இருக்கிறாள்.

எவ்வளவோ ஏளனங்கள், அவமானங்கள்,தடைகளை பார்த்துவிட்டாள். இவள் துவண்டு இருக்கும்பொழுது மாலினி “பழசையெல்லாம் நினைக்காதே அக்கா, நடக்கப்போவதை நினை” என்பாள். ஆனால் அவளுக்கு தெரியும் நடக்கப்போவதை நினைப்பதென்பது கனவு காண்பதுதான். நடந்தவற்றை நினைப்பதை நிறுத்திவிட்டால், நினைப்பதற்க்கு எதுவுமே இருக்காது. எதுவுமே நினைக்காமல் மனிதனால் இருக்க முடியாது. நடந்தவற்றை தனக்கு கவசமாக மாட்டிக்கொண்டாள். கடந்தகால நினைவுகள் தான் அவளை மேலும் வலிமையாக்கிக் கொண்டிருந்தன.

அவளுக்கு பிடித்த ஆங்கில தொடர் ஒன்றில் டிரியன் என்று வளர்ச்சிக்குன்றிய கதாபாத்திரம் வரும். ஒருமுறை டிரியன் “ நீ யார் என்பதை மறக்காதே. ஏனெனில் இந்த உலகம் அதை மறக்காது. அதையே நீ ஒரு கவசமாக அணிந்துக்கொள். உன்னை யாராலும் புண்படுத்த இயலாது” என்று கூறுவான். அதை தனது அறையில் எழுதி ஒட்டி வைத்திருந்தாள்.அதன் படியே வாழ்ந்துக்கொண்டும் இருக்கிறாள்.

இப்படித்தான் ஒருமுறை சினிமா பார்க்கச் சென்றபொழுது இவளை பார்த்து ஒருவன் இரண்டு முறை கை தட்டினான். சட்டென்று திரும்பி , “ சில்லரை இல்லப்பா, ஆனா பாத்தா பாவம இருக்க, இந்த இருபது ரூபா வச்சிக்கோ” என்று அவன் கையில் இருபது ரூபாயை போட்டுவிட்டு நடந்தாள்.அவனை சுற்றி இருந்தவர்கள் அவனை பார்த்து சிரிக்க அவமானத்தில் தலை குனிந்தான்.

இதையெல்லாம் எண்ணியவாறே மண்டபத்திற்க்குள் நுழைந்தாள். மேடை மேல் மாலினியையும் மாப்பிள்ளையும் அமர்ந்திருப்பதை கண்டாள். அவள் மனம் என்றும் இல்லாத அளவு நெகிழ்ச்சியுற்றது. மாலினி சிரித்தாவாறே கையசைத்தாள். அக்ஷயா வழிந்தோடிய ஆனந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கை அசைத்தாள். அம்மாவை விதவை என்பதால் மேடைக்கு கீழே நிற்க வைத்திருந்தனர். இவளை பார்த்தும் பாராதுமாய் முகத்தை திருப்பிக்கொண்டாள்

“டேய் அக்ஷய், நீ வரமாட்டேன்னு சொன்னாங்க, பரவாயில்லை கரெக்ட்டா தாலி கட்டுற சமயதுல வந்துட்டே “ என்று கூறியவாறு கமலா சித்தி வந்து நின்றாள்.

“நல்லா இருக்கிங்களா சித்தி, சித்தப்பா நல்லா இருக்காறா ?.... அப்புறம் என் பெயர் அக்ஷயா,….. அக்ஷய் இல்லை”

“ஆரம்பிசிட்டியா…எல்லாம் நல்லா இருக்காங்க…”

இன்னும் சித்தி அவளை நலம் விசாரிக்கவில்லை

“அப்புறம் சித்தி..”

“அப்புறம்… அது வந்து…சொல்றேன்னு தப்பா எடுத்துகாதே..அம்மாகூட கீழ தான் நிக்கிறாங்க..நீ மேடைக்கு போனா மாப்பிள்ளை வீட்டுல எதாவது நினைச்சுப்பாங்க…நீ இங்கயே இரு….” என்றாள் தயக்கத்துடன் கமலா சித்தி

எதிர்பார்த்தது தான். இதுவே மற்ற நாளாய் இருந்திருந்தால் இந்நேரம் வீம்புக்கென்றே நேராக மேடை ஏறியிருப்பாள். ஆனால் இன்று மாலினியின் தினம். இன்று களேபரம் செய்து தன் பக்கம் கவனத்தை திருப்பிக்கொண்டால் நன்றாக இருக்காது என்பதிறிந்து அமைதியாக இருந்தாள்.

“எல்லாம் எனக்கு தெரியும்,சித்தி. நீங்கள் போய் கல்யாண வேலையை பாருங்க…” என்று புன்முறுவல் செய்தாள்.

கமலா சித்தி “என்ன செய்ய காத்திருக்கிறாளோ ? “ என்ற ஐயத்துடன் நகர்ந்து செல்ல , அக்ஷயா அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தாள் .

மாங்கல்யத்தை அனைவரிடமும் கொடுத்து ஆசி பெற்றுக்கொண்டு இருந்தார்கள். சுற்றி பார்த்தாள். பரிட்சையமான முகங்கள் சில தன்னை குருகுருவென்று பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்தாள். இவள்  அவர்களை கண்டதும் தலையை திருப்பிக்கொண்டார்கள்.

புதிய முகங்கள் யாரும் தன்னை கவனிக்கவில்லை, தன்னை அறியாதவர்கள் சாதாரணமாக அவளை கடந்து சென்றுக்கொண்டு இருந்தார்கள் என்பதை கவனித்தாள். அப்படியே யோசனை கடலில் மூழ்கினாள்.

சிறுவயதில் அக்ஷய்யாக இருந்த பொழுது, கமலா சித்தி பெண் விடுதலைக்காக கட்டுரை எழுத நமக்கு உதவியிருக்கிறாள்.  இப்பொழுது தன்னை மேடை ஏற தடுக்கிறாள்.

சரி, நாம் தான் பெண்ணாக மாறியவள் என்று வைத்துக்கொண்டாலும் பெண்ணாகவே பிறந்த அம்மா மேடை ஏறுவதிலும் அவளுக்கு உடன்பாடில்லை. ஏன்! அம்மாவிற்கே அதில் உடன்பாடில்லை….பெண்களே தங்களுக்கு முட்டுக்கட்டை அமைத்திக்கொண்டால் பாலின சமத்துவம் எப்படி சாத்தியமாகும் ?

மாலினி அவளுக்கு பிடுத்த பயோ டெக்னாலஜி படித்துவிட்டு , அதில் ஆய்வு மேற்கொண்டு இருந்தாள். இவளுக்காவது பிடித்ததை செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனால், இன்று திடிரென்று அவளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளது கணவன் திருமணத்திற்க்கு பிறகு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதாக மாலினி கூறியிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.