(Reading time: 34 - 68 minutes)

ஆனால் அவன் மனநிலை? அது எப்போதும் போல் இருக்கிறதா என்ன? இவளெங்கே அறிந்தாள் அதை!

விமானம் தரை இறங்கிய பிறகும் அவன் முகம் கண்களுக்கு தென்படுவதற்குள் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. சாம்பல் நிற பேண்ட்டும், கருப்பு நிற டி ஷர்ட்டும், கண்களில் குளிர் கண்ணாடியும், காற்றில் ஆடும் கேசமும் என ட்ராலியை தள்ளிக்கொண்டு வந்து நின்றான் அவளது மன்னவன்.

ஆனால் அதன் பிறகு நடந்தவை எதையுமே லாவண்யாவால் நம்பவே, ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தந்தையிடம் சிரித்து அளவளாவி, அம்மாவிடம் அன்பை பொழிந்துவிட்டு, தங்கையிடம் சிரித்து சீண்டிவிட்டு வெகு இயல்பாக ட்ராலியை தள்ளிக்கொண்டு அவர்களுடன் நடந்தான் அவன். அங்கே அவள் ஒருத்தி இருப்பதையே அவன் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை அவளுக்கு.

‘என்ன இது? என்ன இது? ஏன்? ஏன்?’ கூவித்துடித்தது அவள் உள்ளம்.

மற்றவர்கள் முன்னால் கட்டியணைக்க முடியாதுதான், முத்தமிட கூடாதுதான் இனிதாய் ஒரு புன்னகை கூடவா சிந்தக்கூடாது? ரகசியமாய் அவனால் அவளை பார்த்து கண்ணடிக்க கூடவா இயலாது.

‘இல்லை சரி இல்லை. ஏதோ ஒன்று சரியில்லை. என்னவாயிற்று அவனுக்கு?’ பதறியது இவளுக்கு. அவனை விட்டு விழி அகற்றாமலே அவர்கள் பின்னால் நடந்தாள் லாவண்யா.

‘வேண்டுமென்றே அவளை சீண்டுவதற்காக செய்கிறானோ?’ ஆம் இருக்கும். அபப்டித்தான் இருக்கும். வீட்டுக்கு சென்று தனிமை கிடைத்ததும் தாவி அணைத்துக்கொள்வான் பார்’ தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள் லாவண்யா. இருப்பினும் மனம் ஏற்றுக்கொள்ளவில்லைதான்.

காரின் அருகில் வந்து பொருட்களை உள்ளே அடுக்கி விட்டு மிக இயல்பாக

நீ முன்னாடி உட்கார்ந்துக்கறியா ஷாலு’ என்றானே பார்க்க வேண்டும் தங்கையிடம்.

அவள் ஒரு முறை இவளை பார்க்க இவள் முகத்தில் ஏனோ உணர்வுகளை துடைத்துவிட்ட பாவம். யார் பதிலுக்கும் காத்திராமல் அவன் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்திருந்தான்.

‘கீ எங்கே ஷாலு’ அவனிடமிருந்து குரல் .gm

காரின் சாவி இவள் கையிலிருந்து ஷாலுவின் கைக்கு மாறி அவன் கை சேர்ந்திருந்தது. இவள் மனதிற்குள் பெரியதொரு பாறை வந்து விழுந்த உணர்வு.

இரவு வரை அவனிடமிருந்து ஒரு புன்னகை கூட கிடைக்கவில்லை அவளுக்கு. ஏன் ஒற்றை விழி தீண்டல் கூட இல்லை. மதியம் முழுவதும் உறங்கி உறங்கியே அவளிடமிருந்து தப்பி இருந்தான்.

அவன் வந்து விட்ட சந்தோஷத்தில் வீட்டில் யாரும் அவன் இவளிடம் விளையாடும் விளையாட்டை சரியாக கவனிக்கவில்லைதான். இரவு இவள் அறைக்குள் வந்த நேரத்தில் அங்கிருந்த மேஜையின் மீதிருந்த மடிக்கணினிக்குள் தலையை விட்டிருந்தான்.

‘இதற்கு மேல் எத்தனை நேரம் பொறுக்க? எப்படி பொறுக்க? அவனருகில் சென்று அப்படியே பின்னாலிருந்து அவனை அணைத்துக்கொண்டாள்.

‘ப்ளீஸ்...’ படீரென வெடித்தது அவன் குரல். ‘தயவு செய்து தள்ளி போறியா? எனக்கு வேலை இருக்கு’ அவன் உதிர்த்த வார்த்தைகளில் அப்படி ஒரு வெப்பம். அதிர்ந்து விலகினாள் லாவண்யா.

சில நொடிகளில் சுதாரித்துக்கொண்டு ‘என்னாச்சு உங்களுக்கு?.’ என்றாள் மெதுவாக. என் மேலே நீங்க இப்படி கோபப்பட்டதே இல்லை..’

இறுகிய முகத்துடன் கண்களை மூடிக்கொண்டான் அவன் ‘தயவு செய்து என்னை நிம்மதியா விடு’ இன்னொரு அணு குண்டு வெடித்தது அவன் தொனியில்.

பேசாமல் விலகி சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். அவன் கணினியை விட்டு திரும்பவே இல்லை.. புரண்டு புரண்டு படுத்தாள் லாவண்யா. உறக்கம் பக்கம் வர மறுத்தது. எழுந்து சென்று பால்கனியில் சில நிமிடங்கள் நடந்துக்கொண்டிருந்தாள்.

‘ஏன்? ஏன்? ஏன்?’ இந்த ஒற்றை கேள்வி மட்டுமே திரும்ப திரும்ப குதறியது அவளை. கடந்த ஒரு வாரமாகவே அவன் சரியில்லை என்று தோன்றியது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து அழைத்த போது கூட அப்பாவின் எண்ணையே அழைத்திருந்தான்.

இவளிடம் பேசுவதை அவன் இயல்பாக தவிர்த்து விட்டது மெல்ல புரிந்தது அவளுக்கு.

ஒரு வாரம் முன்பு நடந்த அந்த சம்பவம் அவள் நினைவில் ஆட மனம் நிறைய யோசனையுடனே அவள் மறுபடியும் அறைக்குள் வர .

‘லாவண்யா..’ என்றான் சற்றே இறங்கிய தொனியில். இன்னமும் கணினியை விட்டு நிமிரவில்லை அவன். அவள் பெயரை அவன் முழுமையாக அழைத்ததே அவளுக்கு சுருக்கென வலித்தது. இருப்பினும் சமாளித்துக்கொண்டு

‘ம்?’ என்றாள்.

‘எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?’

‘சொல்லுங்க’

‘கொலுசை மட்டும் கழட்டி வெச்சிடேன். அந்த சத்தம் எனக்கு பிடிக்கலை’ அவன் நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக உச்சரிக்க உயிர் உடைந்து சில்லு சில்லாக சிதறியது லாவண்யாவுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.