(Reading time: 34 - 68 minutes)

காலையிலிருந்து இதுவரை கண்களை தொடாத கண்ணீர் இப்போது கண்களில் கட்டிக்கொள்ள பதில் பேசாமல் கொலுசை கழற்றி வைத்து விட்டு படுத்துக்கொண்டாள் லாவண்யா.

இரண்டு மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் தொடர்ந்தது இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.

‘வெறுத்துவிட்டானா? என்னை முழுவதுமாக வெறுத்துவிட்டானா?’ உள்ளுக்குள் குமைந்து போனாள் லாவண்யா. அவன் முகத்திலும் நிறையவே வருத்தமும், சோர்வும் அப்பிக்கிடந்தது என்பதும் உண்மை.

அன்று இரவு உணவுக்கு பிறகு ஹால் சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்த அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தான் ஷிவா.

‘அம்மா கொஞ்ச நேரம் உன் மடியிலே படுத்துக்கவா?’ என்றான் மெல்ல

‘ஏன்டா திடீர்னு. படுத்துக்கோ வா?’ அம்மா சொல்ல

‘தெரியலைமா. என்னமோ மனசே சரியில்லை’ என்றபடி அவன் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ள, அம்மா இவன் கேசம் வருடிவிட

‘என்னதானடா இருக்கிறது உன் மனதிற்குள்?’ இவளுக்குள் சுளீர் சுளீரென வலித்தது.

அறைக்கு திரும்பினாள் லாவண்யா. அங்கே மேஜை மீது அவனது மொபைலும், பர்சும் கிடந்தன. சில நொடிகள் அவற்றையே பார்த்திருந்தாள் லாவண்யா.. அவனது பர்சின் முகப்பில் இவளது புகைப்படம் வைத்திருப்பானே. ஒரு வேளை அதையும் தூக்கி எறிந்து விட்டானோ?

அவசரமாய் அவள் அவனது பர்சை திறந்து பார்க்க புகைப்படம் அங்கேயே இருந்தது. கைப்பேசி திரையிலும் இவள் புகைப்படமே. ஏதோ சின்னதாய் ஒரு அல்ப சந்தோஷம் அவள் மனதில்.

அப்படி எல்லாம் என்னை அவன் ஒன்றும் வெறுத்துவிடவில்லைதான்’ அவள் யோசித்துக்கொண்டிருக்க பின்னாலிருந்து கேட்டது அவனது தொண்டை செருமல். திடுக்கிட்டு குலுங்கி திரும்பினாள் இவள்

என்ன வேணும்?’ சற்றே உறுமினான் அவன்.

‘இ... இல்ல... உங்களுக்குத்தான் என்னை பிடிக்கலையே. அதான் என் போட்டோ வெச்சிருக்கீங்களா? தூ.. தூக்கி போ...போட்டுடீங்களான்னு பார்த்தேன்’ கரைந்த குரலில் அவள் சொல்ல அவள் கண்களில் துளித்துளியாய் நீர் சேர்ந்தது. அவள் கண்களையே இமைக்காமல் பார்த்தவனின் கண்களிலும் இப்போது நீர் கோடிட்டது போலே தோன்றியது அவளுக்கு.

சில நொடிகளில் விருட்டென பார்வையை திருப்பிக்கொண்டவன் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினான். செருப்பை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு இறங்கி சாலையில் கால் போன போக்கில் நடந்தான். மனம் பொங்கி பொங்கி வழிந்தது.

‘ராஜாத்தி.. என் ராஜாத்தி... ஏன்டி இப்படி பண்ணே? ஏன் இப்படி பண்ணே? கல்யணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் உன்னாலே என்னை நம்ப முடியலையா? என் மனசு ரொம்ப வலிக்குதுடி..’

 

.............................................................?

 

கதையை இங்கே இருந்து தொடர்ந்து முடிவை சொல்லுங்கள் பிரென்ட்ஸ், ஆயிரம் ரூபாய் பரிசை வெல்லுங்கள்!!!

நீங்கள் அனைவரும் அனுப்பும் முடிவுகளில் இருந்து வெற்றி பெற்றவரை வத்சலா தேர்வு செய்வார்! 

உங்கள் 'கதை முடிவை' This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.

உங்களின் ‘கதை முடிவு’ எங்களை வந்து சேர வேண்டிய இறுதி நாள் – 27 ஏப்ரல் 2018 30 ஏப்ரல் 2018

முடிவுகள் வெளியாகும் நாள் – 4 மே 2018 

All the best friends!!!!!

 

பொது விதிமுறைகள்:

உங்கள் ‘கதை முடிவு’ தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்

உங்கள் ‘கதை முடிவுக்கான’ நீள அளவில் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

ஒருவருக்கும் அதிகமானவர்கள் வெற்றி பெற்றவராக தேர்வு செய்யப் பட்டால் பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப் படும்.

 

{tab title=போட்டி பதிவுகள்}

contest entry #01 - Contestant - Sasirekha

contest entry #02 - Contestant - Anusuya

contest entry #03 - Contestant - Kiruthika J

contest entry #04 - Contestant - Madhu_Honey

contest entry #05 - Contestant - Padmini S

contest entry #06 - Contestant - Keerthi B

contest entry #07 - Contestant - Rani

contest entry #08 - Contestant - Prama B

contest entry #09 - Contestant - Jay

contest entry #10 - Contestant - Buvaneswari

contest entry #11 - Contestant - Maria

contest entry #12 - Contestant - Naveeth

contest entry #13 - Contestant - Devi

contest entry #14 - Contestant - Mangala

contest entry #15 - Contestant - Jebin

{tab title=முடிவு}

Result

ன்பு தோழமைகளே

நமது chillzee.in  நடத்திய முடிவை கண்டுபிடி போட்டியில் பங்குபெற்று சிறப்பித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

முதலில் இப்படி ஒரு போட்டிக்கு கதை எழுத வேண்டும் என்று என்னை நம் chillzee  குழு கேட்டுக்கொண்டவுடனேயே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இது ஒரு புது அனுபவமும் கூட. அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்.

ஒரே கதைக்கு இத்தனை முடிவுகளை பார்த்து பிரமித்து போனேன் நான். மிக மிக அழகான சிந்தனைகள் அழகான கோணங்கள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது யாரை விடுவது என்று நான் குழம்பி நின்றதும் உண்மைதான்.

இப்போது போட்டி முடிவுக்கு வருவோம்.

இது போன்ற கதையையும், காட்சிகளையும் நாம் ஒரு சில கதைகளில் பார்த்திருப்போம்தான். பொதுவாக இது போன்ற கதைகளின் முடிவு நாயகன் அல்லது நாயகியின் பழைய காதலுடன் தொடர்புடையதாக இருக்கும் அல்லது அவர்களுக்கு இருக்கும் ஏதாவது தீராத நோயுடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லது குழந்தையின்மை பற்றியாதாக இருக்கும் அல்லது ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் சந்தேகமும் காரணமாக இருக்கும்.

இது எதுவுமே இல்லாத ஒரு கோணத்தில் கதை முடிவு அமைய வேண்டும் என நான் நினைத்தேன். அதனால் சின்ன ஊடலும் கூடலுமாக தான் இந்த கதையின் முடிவை அமைத்திருந்தேன். அதற்கு கொலுசுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டேன்.

ஆனால் இதை வைத்து ஒரு நல்ல சமூக சிந்தனையுடன் ஒரு கதையை கொடுக்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. அதையும் ஒருவர் மிக அழகாக செய்து முடித்திருக்கிறார் இங்கே.

நமக்கு கல்யாணம் ஆனதில் இருந்து இப்போ வரைக்கும், ஒரு குட்டி ஷிவாவை பெத்துகொடு, ஒரு குட்டி லாவண்யாவை பெத்துகொடு, வாரிசு பெத்துகொடுனுதானே எல்லாரும் கேட்டாங்க..

எல்லா குடும்பத்திலுமே குடும்ப வாரிசைத்தான் எதிர்ப்பார்பாங்க.. அது இயற்கையான இயல்பாக இருக்கலாம்.. ஆனால் ரெண்டு வருஷமாகியும் நமக்கு குழந்தை இல்லன்னதும், நல்ல டாக்டரை பார்க்கலாம்னு தானே சொன்னாங்க? ஆசிரமத்துக்கு போவோம்னு சொல்லலையே

இந்த ரெண்டு வரிகளுமே என்னை இந்த கதையின் பக்கம் திரும்ப வைத்தது. லாவண்யாவோட மனதையும் அதில் இருக்கும் குழப்பங்களையும் கூட ரொம்ப அழகா சொல்லி இருந்தாங்க. அதனாலேயே இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

போட்டியில் பங்கு பெற்ற அத்தனை கதைகளும் அருமை என்றாலும் இந்த சமூக சிந்தனை காரணமாகவே கதை மற்ற கதைகளை விட ஒரு படி மேலே நிற்கிறது என்று எனக்கு ஒரு எண்ணம்.

அது வேறே யாரும் இல்லைங்க நம்ம ‘புவனேஸ்வரி’ தான். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

இந்த போட்டியில் பங்கு பெற்று சிறப்பித்த மற்ற அனைவர்க்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்

வாழ்த்துக்கள் புவனேஸ்வரி!!!!!

{tab title=பரிசு பெறும் முடிவு}

Winner

என் நெஞ்சிலே பனிமூட்டமா? - முடிவு- புவனேஸ்வரி. எஸ் கே

ன்டீ ராஜாத்தி இப்படி பண்ணின?” ஆதங்கத்துடன் விடுவிடுவென நடந்தான் ஷிவா. “ராஜாத்தி” என அழைக்க வேண்டாமென  இதழ்களை அடக்கியவனுக்கு தனது மனதினை அடக்க முடிந்ததா? இல்லையே! அவன் இதயத்தில் ஒவ்வொரு அணுவும் “ராஜாத்தி” என அவளையே அழைத்து ஏங்கி கொண்டிருந்தன. அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த சிக்கல்கள் எல்லாம் தன்னை சுவாசிக்கவும் விடாமல் அழுத்துவது போல தோன்றிடவும் ஷிவாவின் கால்கள் தானாகவே அருகில் இருந்த பூங்காவை நோக்கி தஞ்சம் அடைந்தன.

இன்னொரு பக்கம் லாவண்யாவோ, தலையை அழுந்த பிடித்துக் கொண்டு மெத்தையில் பொத்தென அமர்ந்தாள். அவள் விழிகள் உணர்ச்சிகளின்றி எங்கேயோ வெறிக்க தொடங்க, அவள் அமர்ந்திருந்த கோலம் வேதனையின் வெளிப்பாட்டினையே காட்டியது.

“இப்படி எல்லாம் அவங்க என்கிட்ட இருந்ததே இல்லையே? கல்யாணம் ஆனதுமே இனி நீ என் உரிமைனு சொல்லி என்னிடம் ஆதிக்கம்காட்டினதும் இல்லை.. அதே நேரம் யாரோ போல விலகி இருந்ததும்இல்லையே? இப்படி பட்ட நாட்களை இதுவரைக்கும் சந்திச்சதே இல்லையே?” அந்த  வெற்றிடத்தில் தன் வெறுமைகளை நிரப்பி கொண்டிருந்தாள் லாவண்யா.

இதற்கு முன்பு கூட, ஷிவா- லாவண்யா இடையே சின்னஞ்சிறு வாக்கு வாதங்களை வந்ததுண்டு தான். ஆனால் அப்போதெல்லாம் ஷிவா இப்படி ஒதுக்கம் காட்டியது இல்லை. ஒரே ஒருமுறை அவன் தான் கோபமாக இருப்பதாகவும், மௌனமாகவே இருக்க விரும்புவதாகவும் பாவனை செய்ததற்கு, லாவண்யா துடித்து போனாள்.

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. கோபம் வந்து நீங்க கத்தினாலும் கூட பரவாயில்லை..ஆனால் என்கிட்ட பேசாம இருக்காதீங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று லாவண்யா விசும்பலுடன் பேச ஆரம்பித்ததுமே அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான் ஷிவா. “மன்னிச்சிருடா ராஜாத்தி.. மன்னிச்சிரு.. நான்..ஏதோ.. சும்மா” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தவித்தாலும், இனியொருமுறை அவளை துடிக்க வைப்பதில்லை என்றே முடிவெடுத்தான். ஆனால் இன்று என்னவாகியது? ஏனோ இனி அழுவதும் வீண்தான் எனவே தோன்றியது லாவண்யாவிற்கு. மனம் விட்டு பேச வேண்டும் என்ற எண்ணமிருந்திருந்தால் பேசி இருக்கலாமே? சற்றுமுன்பு அவன் விழிநோக்கி வினவியபோது சொல்லி இருக்கலாமே? அவனுக்கே அந்த எண்ணம் இல்லை என்றபோது தான் என்ன செய்ய முடியும்? செய்வது எதுவாக இருந்தாலும்,இனி கண்ணீர் சிந்துவதாக இல்லை! என்றெண்ணி எழுந்தவள் முகத்தை கழுவிவிட்டு தன்னையே பார்த்து சொல்லிக் கொண்டாள்.

“இதுவே கடைசியாக அழுததாக இருக்கணும்!”. தன்னைத் தானே தேத்திக் கொண்டு அவள் வெளிவந்த நேரம் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்திருந்தான் ஷிவா. அவன் ஓடிவந்த வேகத்தை கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை கடந்து போய் தனது செல்போனையும் ப்ர்சையும் எடுத்துக் கொண்டான். ஏதோ வேகத்தில் அப்படியே போய்விட்டான். அந்த கோபத்தில் லாவண்யா தனது புகைப்படத்தை எடுத்துக் கொள்வாளோ? என்ற எண்ணம் தோன்றிடவே பதறிபோய் திரும்பி வந்தான். அவனது ஆசுவாச பெருமூச்சினை கண்டுக்கொள்ளாமல், லாவண்யா இல்லாத வேலையை எடுத்து போட்டுக்கொண்டு செய்ய, அந்த மௌனம் அவனை ஏதோ செய்தது. சற்றுமுன் அவளிடம் ஏதும் சொல்லாமல்சென்றது ஒரு பக்கம் குற்ற உணர்வை கொடுக்க வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான்.

“நான் போனதும் பர்ஸ்ல இருந்து ஃபோட்டோவை எடுத்துருப்பியோனு நினைச்சேன்!”

“அது உங்க பர்ஸ்..நான் ஏன் எடுக்கனும்?”

“அதில் இருக்குறது உன் படம் தானே?” . “உஃப்ஃப்” என பெருமூச்சு விட்டவள் சட்டென ஷிவாவை நெருங்கி வந்தாள். இத்தனை நாட்களாக அவளை சடாரென தவிர்த்தவன், இப்போது கொஞ்சமாய் தடுமாறிய மிக அழுத்தமான குரலில் பதில் வந்தது லாவண்யாவிடமிருந்து.

“உங்களை கல்யாணம் பண்ணதில் இருந்து இப்போ வரைக்கும், நானும், என் சம்பந்தப்பட்டது எல்லாமே உங்களுக்கு உரிமையானதுதான்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்.. இது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும்னு இல்லை” ஒவ்வொரு வார்த்தைகளாக அவள் சொன்ன விதத்தில் அவன் அகமகிழ்ந்திருக்க வேண்டுமோ? கோபம் தணிந்திருக்க வேண்டுமோ? இல்லை..மாறாக ஷிவாவின் முகத்தில் கடுமை பரவியது..

“என்ன? உன் சம்பந்தப்பட்டது என்னுடைய உரிமையா? அப்படித்தான் இருக்கியா நீ? ஹ்ம்ம்.. உன் லைஃப்லயே நீ சொன்ன பெரிய பொய் இது லாவண்யா!”

“மீண்டும் லாவண்யா!”. ஏனோ அவன் கூப்பிடும்போது அந்த பெயரே திடீரென பிடிக்காமல் போனது. எதுவும் பதில் பேசவில்லை அவள். அவனும் பேச்சை தொடரவில்லை. இந்த கண்ணாமூச்சியே இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்தன.

மூன்றாவது நாள் மின்னஞ்சலை அடிக்கடி செக் செய்து கொண்டிருந்தான் ஷிவா. ஒருவழியாக இன்று அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு வந்துவிடும் என்ற எண்ணமே அவனுக்கு உற்சாகம் தந்திருந்தது.

“அம்மா,வீட்டுல யாரும் வெளில போகாதீங்க.. ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டியது இருக்கு” என்றிருந்தான் ஷிவா.

“ என்னடா ஷிவா? என்ன விஷயம்?” என்று அவர் கேட்க,

“முக்கியமான விஷயம்மா.. வெயிட் பண்ணுங்க..சொல்லுறேன்.. ஷாலுகுட்டிக் கிட்டயும் சொல்லிடுங்க..நான் கொஞ்ச நேரத்தில் வரேன்” என்றவன் லேப்டாப்பில் மூழ்கினான். லாவண்யாவோ, என்ன சொல்ல போகிறான் என்ற பரிதவிப்பிலேயே வலம் வந்து கொண்டிருந்தாள்.

“எதையாச்சும் சொல்லிட்டு செய்யுறாங்களா? இப்போ என்ன புது வில்லங்கமோ தெரியலயே.. ஒருவேளை என்னை பிடிக்கலனு சொல்லிடுவாங்களோ? ச்ச..ச்ச.. அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்க.. ஒரு வேளை சொல்லிட்டா?” அலைபாய்ந்தது அவளின் உள்ளம்.

அப்பா,அம்மா,தங்கையை அனைவரும் அமர்ந்திருக்க,அங்கு ஒரு ஓரமாய் நின்றிருந்த லாவண்யாவை ஒருமுறை அழுத்தமாக பார்த்துவிட்டு, கையில் இருந்த பெண்ட்ரைவை தொலைகாட்சியில் பொருத்தினான்.

“ஷிவா.. என்னடா விஷயம்?”

“சொல்லுறேன் அப்பா”

“ காலையில் இருந்து இதேதான் சொல்லுற கண்ணா நீ..”

“அச்சோ என் அம்மாதான் இந்த வீட்டுலேயே பொறுமைசாலினு நினைச்சேனே.. அதை உடைக்கிறீங்களேம்மா..”.

“சரி சரி.. எல்லாரும் இந்த வீடியோவை பாருங்க.. எல்லாம் புரியும்” என்றான். அவன் “எல்லாம்” என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்திட, தனக்காக பதில் அதில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள் லாவண்யா.

எதிர்ப்பார்ப்பும் குழப்பமும் நிறைந்த அவள் விழிகள் தொலைக்காட்சியில் தெரிந்த அந்த பிஞ்சு பாதங்களைக் கண்டதும் ஒரு நொடி ஸ்தம்பித்து போனது., புரியாத அனைத்தும் புரிவதுபோல இருக்க, லாவண்யா சட்டென ஷிவாவை பார்க்க,அவனோ தொலைக்காட்சியைவிட்டு பார்வையை திருப்பவே இல்லை. ஆனாலும்,அவனது தாடை இறுகுவதை வைத்து அவனது மனநிலையை உணர்ந்து கொண்டாள் லாவண்யா. கடந்த சில நாட்களாய் ஆடிய கண்ணாமூச்சிக்கு விடை கிடைத்த சந்தோஷம் அவள் இதயத்தில் இதமாக பரவியது. தனக்குள் எழுந்த கலவை உணர்வை எல்லாம் வெளிப்படுத்திடும்முன் அந்த காணொலி அவளை அசையவும் விடாமல் கட்டிப்போட்டது.

கேமரா சரியாக அந்த சிறுமியில் பிஞ்சு பாதங்களை ஊருடுவி காட்டிட, லாவண்யாவின் கொலுசின் சாயலில் கொஞ்சமும் மாறாத கொலுசு அந்த சிறுமி அணிந்திருப்பதை காண முடிந்தது. “ஒரு உதவி செய்யுறியா? அந்த கொலுசை கழட்டி வைச்சிடேன்..”என்று ஷிவா சொன்னதின் காரணம் புரிந்தது.

“சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே!

என்னை களி தீர்தே

உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!” இனிய குரலில் ஒலித்த பாடலுக்கு அபிநயம் பிடித்தாள் அந்த சிறுமி. ஷிவாவின் தங்கை ஷாலினியோ, “லாவி, இது உன் குரல் தானே?” என்று கேட்டாள்.

“ஆ”மென லாவண்யா தலையசைக்க, அவளை ஒரு நொடி திரும்பி பார்த்தான் ஷிவா. அந்த மழலையின் அபிநயத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டு நிற்க, லாவண்யாவின் கண்களிலோ, பேரானந்தம்,பெருமை,கர்வம் அனைத்தையும் மீறி தாய்மை பெருக்கெடுத்தது.

“அம்மு..” மனதில் சொல்லிக் கொண்டாள் லாவண்யா. “என் அம்மு.. அம்மா உங்கள மிஸ் பண்ணுறேண்டா.. எப்போடா உங்களைப் பார்ப்பேன்” என்று அவள் மருகினாள்.

“சூப்பரா பாடி இருக்கா என் மருமக,இல்ல ஷிவா?” என்று அவனது அன்னை சிலாகிக்க,

“அவ அதை மட்டுமா பண்ணா? தொடர்ந்து பாருங்க” என்றான் உணர்ச்சிகளற்ற குரலில். நடனம் முடிந்ததும் அந்த அரங்கில் கரகோஷம் எழுந்தது. அந்த நிகழ்வின் தொகுப்பாளினி அந்த சிறுமியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

“லேடிஸ் அண்ட் ஜெண்டல்மேன்ட். ஒன்ஸ் அகெயின் கிவ் அப்ளோஸ் ஃபார் அவர் ஒன் அண்ட் ஒன்லி சூர்யா” அந்த கரகோஷத்தின் பிரதிபலிப்பை உணராமல் நின்றிருந்தாள் அந்த சிறுமி. ஆங்கிலத்தில், சூர்யாவைப் பற்றி பேசத் தொடங்கினாள் அந்த பெண்.

“இவ்வளவு திறமையாக நடமாடிய நம்ம சூர்யாவினால் இசையை கேட்கவும் முடியாது பேசவும் முடியாது!”! நிசப்தம் நிரம்பிய அந்த அரங்கில் அந்த சிறுமியைப் பற்றிய காணொலி ஒளிபரப்ப, “சூர்யா.. என் அம்மு”என்று அன்பொழுகும் குரலில் அந்த  பிஞ்சுகுழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தவள்,சாட்சாத் லாவண்யாவேதான்!

4-5 வருடங்கள் முன் எடுத்த காணொலி போலும்! “அன்பொளி இல்லத்தில்” அந்த குழந்தையை லாவண்யா கொஞ்சி கொண்டிருக்கும் காட்சி இருக்க,இன்னொரு பக்கம் தற்பொழுது அந்த இல்லத்தின் நிர்வாகி பேசிக் கொண்டிருந்தார்.

“சுயநலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது நம்ம சமுதாயம்னு சொல்லிட்டு இருக்குற காலத்துல அன்பின் ஒளியில் இருளை விரட்ட பலர் பேரு சேர்ந்தோம். பொதுவாக கல்யாணம் ஆகாதவங்க, குழந்தையை தத்தெடுக்க முடியாதுனு ஒரு சட்டம் இருக்கு. ஆனால் அன்பொளியை பொருத்தமட்டிலும் தகுதியானவர்களுக்கு  அந்த சட்ட்த்தையும் வளைக்க முயன்று வெற்றி கண்டிருக்கிறோம். அதற்கு முக்கியமான ஒரு காரணம் லாவண்யா! தவறு செய்யுறவங்க மட்டும் சட்டத்தை மீறுறாங்க, நாங்க நல்லதை பண்ண ஏன்பா கொஞ்சம் மீற கூடாதுனு 17 வயதில் என்னைப் பார்த்து கேட்டாள். அதற்கான பதில்தான் எங்களின் நடவடிக்கைகள்!”

“சூர்யாவுக்கு தன்னபிக்கையையும், நல்ல எதிர்க்காலத்தையும் ஏற்படுத்தியது லாவண்யாதான்.. சில காரணங்களினால். சூர்யா,லாவண்யாவின் அரவணைப்பில் வளரமுடியாமல் போனாலும், மற்ற எல்லா விதத்திலும்ஒரு தாயாக தன் கடமையை சரியாக செய்யும் லாவண்யாவுக்கு என் ஆசிர்வாதங்கள். லாவண்யா மாதிரி இப்போ பல பேரு முன்வந்து இந்த மாதிரி குழந்தைகளுக்கு வாழ்க்கை தந்திருக்காங்க,என்பது அன்பொளி இல்லத்திற்கு பெரும் மகிழ்ச்சி!”. அந்த காணொலியை அதுவரையில் ஒளிபரப்பி நிறுத்தியிருந்தான் ஷிவா.

“இது என்ன ஷோவ்னு தெரியாமல்தான் அங்கே போனேன்.. போனதினால்தான் பல உண்மைகள் தெரிஞ்சது..”என்று ஷிவா கூறிட,

“என்னங்க,” என விளக்கம் அளிக்கும்குரலில் லாவண்யா பேச்சை தொடங்கினாள். அவளை சட்டை செய்யாதவன் போல அவன் தங்களது அறைக்கு செல்ல, லாவண்யாவும் அவனைப் பின்தொடந்தாள்.

“இப்போ சொல்லு லாவண்யா..உன்  சம்பந்தப்பட்ட்து எல்லாமே எனக்கு சொந்தம்னு சொன்னியே.. அப்போ சூர்யா?”

“சூர்யாவும் உங்களுக்கு சொந்தம்தான் .. ஆனால், என்னால அந்த உரிமையை நிலைநாட்டிக்க முடியலயே!”

“காரணம் சொல்ல போறியா? இல்லை கதை சொல்ல போறியா?”

“இரண்டில் எதுவாக நீங்க எடுத்துக்கிட்டாலும், அது உண்மையான விஷயம்.. நீங்க அதை கேட்டுத்தான் ஆகனும்” தீர்க்கமாக அவள் பேசிட அமைதி காத்தான் ஷிவா.

“ நீங்க என் வாழ்க்கையில வர்றதுக்கு முன்னாடி என் இலக்கே வேறங்க..நானும் கல்யாணம் பண்ணுவேன்,கணவன் தான் உலகம்னு ஒரு அழகான வாழ்க்கையில் என்னையே மறப்பேன்னு கற்பனை கூட செஞ்சு பார்த்தது இல்லை. சின்ன வயசுல இருந்தே அம்மாவும் அப்பாவும் என்னை அன்பொளி இல்லத்துக்கு அழைச்சிட்டு போவாங்க.. குறிப்பிட்ட வயசுக்கு அப்பறம் நானே அங்கு விரும்பி போக ஆரம்பிச்சேன்..”

“..”

“அங்க எத்தனை குழந்தைங்கள், எத்தனை விதமான வாழ்க்கை அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு அவங்களோடு இருந்து பார்த்துக்கனும்னு தோணுச்சு..அன்பொளி என்வாழ்க்கையில முக்கியமான ஒரு அங்கம்னு நானே முடிவெடுத்தேன். காதல்,கல்யாணம்னு நானும் மத்தவங்க மாதிரி இல்லாம அவங்களுக்காக வாழனும்னு ஆசைப்பட்டது தான் நிஜம்.

அங்க இருந்த எல்லாபிள்ளைகள் மேலயும் பாசம் இருந்தாலும் சூர்யா மேலே எப்பவும் ஒரு தனி பிணைப்பு.. அவளுக்கு பேரு வைச்சது கூட நாந்தான்..சூர்யா பத்தி வீட்டுல தெரிஞ்சா கண்டிப்பா பிரச்சனை வரும்..ஒருவேளை என்னை அன்பொளிக்கே அனுப்ப மாட்டாங்கனு பயந்துதான் நான் அப்பாஅம்மாவுக்கே எதுவும் சொல்லாமல் இருந்தேன்..”

“எல்லாம் நல்லா போயிட்டு இருந்தப்ப தான் நம்மகல்யாண பேச்சு ஆரம்பிச்சது.. ஓரளவுக்கு மேல என்னால அப்பாஅம்மவை சமாளிக்க முடியல.. கல்யாணத்துக்கு அப்பறம், உனக்குனு ஒரு வாழ்க்கை வரும்மா..அதை தொடங்கு.. அப்பவும் உனக்கு சூர்யா மேல இதே அன்பு இருந்தால் அவளை தாராளமாக அழைச்சிட்டுபோனு அந்த இல்லத்துல சொன்னாங்க…”

“இந்த ரெண்டு வருஷத்துல எனக்கு கல்யாண வாழ்க்கையின் அர்த்தமும் அழகியலும் புரிஞ்சது..அதே நேரம் சூர்யா மேல இருந்த பாசமும் குறையல..”

“அப்போ ஏன் சூர்யா விஷயத்துல நீ எந்த முடிவும் எடுக்கல? நானும் சராசரி ஆண்.. உன் ஆசையை நிறைவேற்ற மாட்டென்னு நினைச்சியோ?” ஒரு வழியாக அவள் தோள் பற்றிபடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் ஷிவா. ஷிவாவின் கேள்வியும் பரிதவிப்பும், அவனது கோபம் உண்மையை மறைத்த்தில் இல்லை, அதை பங்குகொள்ளாமல் போனதிலேயே உள்ளது என்பதை உணர்ந்து கொண்டாள் லாவண்யா. எதையோ வென்றுவிட்ட களிப்பில்,மனதில் இருந்ததைச் சொன்னாள்.

“ எப்படி சொல்லுறது? நமக்கு கல்யாணம் ஆனதில் இருந்து இப்போ வரைக்கும், ஒரு குட்டி ஷிவாவை பெத்துகொடு, ஒரு குட்டி லாவண்யாவை பெத்துகொடு, வாரிசு பெத்துகொடுனு தானே எல்லாரும்கேட்டாங்க.. பெற்றால்மட்டும்தான் பிள்ளையா?” ஆதங்கமாக கேட்டாள்லாவண்யா.

“ஒத்துக்குறேன்.. எல்லா குடும்பத்திலுமே குடும்ப வாரிசைத்தான் எதிர்ப்பாங்க.. அது இயற்கையான இயல்பாக இருக்கலாம்.. ஆனால் ரெண்டு வருஷமாகியும் நமக்கு குழந்தை இல்லன்னதும், நல்ல டாக்டரை பார்க்கலாம்னு தானே சொன்னாங்க? ஆசிரமத்துக்கு போவோம்னு சொல்லலையே!”

“ராஜாத்தி!!”

ஒருவழியாக அழைத்திருந்தான் “ராஜாத்தி” என! அவன் மார்பில் சாய்ந்து கொள்ள பரபரத்த உள்ளத்தை அடக்கும் வழி அறிந்தும் அடக்கவில்லை லாவண்யா. அவனை உடனே கட்டிக்கொண்டாள். “விட்டுட்டா ஓடினாலும் ஓடிருவாங்க!” என்று எண்ணிக் கொண்டாள்.

“நீ ஏன் எல்லாத்தையும் தனியாக சுமக்கிற?ஒரு வார்த்தை என்கிட்டசொல்லி இருந்தால்,நான் வீட்டில் பேசி இருப்பேனே ராஜாத்தி?”

“நாம அழைச்சிட்டு வரப்போறது ஒரு பொருளை இல்லைங்க.. அவ ஒரு உயிர்..அவளை எல்லாரும் ஏத்துக்கனுமில்லையா? நீங்க சொல்றீங்கனு கட்டாயத்துல ஏத்துக்கிட்டா சூர்யாவின் நிலைமை?”

“உண்மைதான்.. ஆனா நம்ம மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குனு சொல்லவேண்டியது நம்ம கடமை இல்லையா?”

“ஆமாதான்..ஆனாலும் நான் கொஞ்சம் குழம்பி போயிருந்தேன்.. இதை பேசலாமா வேணாமனு யோசிச்சிட்டே இருந்தேன்..”

“ தாய்மைங்கிறது, பெத்து எடுக்குறதுல மட்டுமில்ல..வளர்ப்பில் தான் அது உன்னதமாகுது! அதனால்தான் கிருஷ்ணரை யசோதாவின் மகன்னும், முருகனை கார்த்திகை பெண்களின் செல்வன்னும் கும்பிடுறோம்..எனக்கு என் அம்மாஅப்பா பத்தி தெரியாது..நீ பயப்படுற மாதிரி அவங்க உன் தாய்மையை புரிஞ்சுக்காமல் இருக்கலாம்..ஆனால் நான் புரிய வைப்பேன்..”

“என்மேல உங்களுக்கு வருத்தம் தானா? கோபமில்லையா? இதை ஏன் என்னிடம் நேரடியா கேட்கல? ஏன் கொலுசை கழட்டி வைக்க சொன்னீங்க?” அவன் மார்பில் செல்லமாய் குத்தியபடி கேட்டாள் லாவண்யா..

“பின்ன,  சூர்யா உன் வாழ்க்கையில ஒரு பெரிய அங்கம்..அப்படிங்குறப்போ அது எனக்கும் தெரிஞ்சுருக்க வேண்டிய விஷயம்..நான் வாங்கி தந்த கொலுசு மாதிரியே அவளுக்கு கொலுசு கூட ரெடி பண்ணி இருக்க, ஆனால் என்கிட்ட சொல்லமட்டும் உனக்கு மனசேவரலைல?” பதிலுக்கு ஷிவா கேட்க லாவண்யா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.

“ சரி சரி.. ஐ லவ் யூ” என்று அவள் நெற்றியில் அழுத்தமாக அவன் முத்தமிட, இதுவரை பனிமூட்டமாக சூழ்ந்திருந்த சுமையெல்லாம் உருகி எங்கோ மறைந்தது.

“என்னங்க..”

“சொல்லு ராஜாத்தி..”

“கொலுசு போட்டுக்கவா?”

“ம்ம்ம்ஹ்ம்ம் வேணாம்..”

“ஏன்?”

“அது உனக்கு பனிஷ்மண்ட்..”

“ப்ளீஸ்.. வேணாமே”

“ப்ளீஸ்.. வேணுமே..” அவன் கிறக்கமாக கொஞ்ச,

“இவங்க சரியான கள்ளன்..காரணம் இல்லாமல் எதுவும் பண்ண மாட்டாங்க”என்று மைண்ட்வாய்சில் பேசினாள் லாவண்யா.

மூன்று மாதங்களுக்கு பிறகு,

“ஷாலு, சூர்யா வந்தாச்சுமா..ஆரத்தி கொண்டு வா” என்று ஷிவாவின் அம்மா குரல் கொடுக்க, ஷிவாவின் அப்பாவோ அவனையும் லாவண்யாவையும் பெருமையாக பார்த்தார்.

“அதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் மா” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்து இரண்டு சின்ன பெட்டிகளை எடுத்தான். அவன் என்ன செய்ய போகிறான் என்று அறிந்து கொண்ட லாவண்யாவின் உள்ளத்தில் உவகையும்நிம்மதியும் பெருக்கெடுக்க, தன் மனையாளுக்கும் மகளுக்கும் புது கொலுசுகளை மாட்டி விட்டான் ஷிவா! இனி அவன் செவிகளை கொலுசு சத்தம் இரட்டிப்பாக ஆட்கொண்டு மகிழ்வில் ஆழ்த்தட்டும் என்று வாழ்த்தி விடைப்பெருவோம்!

-முற்றும்-

{tab title=வத்சலா எழுதிய முடிவு}

Love

கொலுசை மட்டும் கழட்டி வெச்சிடேன். அந்த சத்தம் எனக்கு பிடிக்கலை’ சொல்லி விட்டான்தான் அவன். அந்த வார்த்தைகள் அவளை புரட்டிப்போட்டிருக்கும் என அறியாதவன் இல்லை ஷிவா.

ஆனாலும் அவள் ஒரு வாரம் முன்பு பேசிய அந்த வார்த்தைகள் அவனை எத்தனை புரட்டிப்போட்டன? அது எப்படி அவள் அப்படி பேசலாம். இந்த உலகத்தில் வேறே யார் அதை பேசி இருந்தாலும் அவனால் எளிதாய் எடுத்துக்கொண்டிருக்க முடியும். ஆனால் பேசியது அவன் ராஜாத்தி ஆயிற்றே.

ஒரு வாரம் முன்பு மிக இனிமையாய்தான் ஆரம்பித்தது அந்த தொலைப்பேசி உரையாடல். எப்போதுமே அவன் அலுவலக வேலைகள் தொடங்கி எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்து கொள்வது அவன் வழக்கம்தான். எப்போதும் போல் அவன் பேசிக்கொண்டே போக அவளுக்கே சற்று அயர்ச்சியாகத்தான் இருந்தது.

ஒரு மாதம் என்பது மிக எளிதாக கடந்து விடும் என்று நினைத்தவளுக்கு அவன் இல்லாத ஒவ்வொரு நொடியையும் அழுத்தி தள்ளவே வேண்டி இருந்தது. எப்போதுதான் அவனை பார்ப்போமோ என்றிருந்தது. அந்த அழுத்தம் அவளை பேசத்தூண்டியது.

அவன் பேசி முடிக்கும் வரை ‘ம்’ கொட்டிக்கொண்டிருந்தவள் அவன் முடித்தவுடன்  ‘ஹப்பாடா’ என்றாள் ‘எப்போ பாரு உங்க ஆபீஸ் கதையேதானா? என்னை கொஞ்சமாவது மிஸ் பண்றீங்களா இல்லையா?’

சட்டென ஒரு வாஞ்சை அவன் குரலில் வந்து ஒட்டிக்கொண்டது. ‘என்ன ராஜாத்தி கேள்வி இது? உன்னை விட உன் கொலுசு சத்தத்தை ரொம்ப. கொலுசு போட்டிருக்கியாடி ராஜாத்தி? என்றான் தனது அறை கட்டிலில் ஆயாசமாக சாய்ந்துக்கொண்டபடியே.

‘போட்டிருக்கேன் போட்டிருக்கேன்’ அவள் குரலில் ஒரு சலிப்பு வந்தது போல் தோன்றியது இவனுக்கு. அது ஏனோ அந்த கொலுசுகளின் மீது அவளுக்கு ஒரு பொறாமையே வந்துவிட்டதை போல் இருந்தது.

‘உங்களுக்கு என்னை விட என் கொலுசுதான் ரொம்ப பிடிக்கும் போல. நான் என்னைக்காவது பட்டுன்னு போய் சேர்ந்திட்டா என் கொலுசோடவே நீங்க வாழ்ந்துடுவீங்க. அது மட்டும் நல்லா புரிஞ்சு போச்சு எனக்கு’

சற்றே அதிர்ந்து போனான் ஷிவா ‘ஹேய்... லூசு என்னடி பேசறே?’ என்றான் சட்டென ‘நீ இல்லாம என்னாலே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுடி’

‘அதெல்லாம் இருக்கலாம். நோபடி  இஸ் இன்டிஸ்பென்ஸ்சிபிள் இன் திஸ் வோர்ல்ட் தெரியுமா? இவர் இல்லாம இந்த உலகம் இயங்காதுன்னு ஒருத்தர் கிடையவே கிடையாது. நான் இல்லாம நீங்க ஜாலியா இருப்பீங்க. எப்பவாவது என் ஞாபகம் வந்தா இருக்கவே இருக்கு என் கொலுசு’ மனதிலும் உடலிலும் இருந்த ஒரு சோர்வில் பேசி விட்டாள் அவள். அது சுரீரென தைத்தது அவன் மனதை.

‘சரி ஒரு முக்கியமான வேலை இருக்கு’ அப்புறம் பேசறேன் துண்டித்திருந்தான் அழைப்பை. அப்போதிலிருந்து சரியாக பேசவில்லை அவளிடத்தில். உயிர் வரை கீறி இருந்தது வார்த்தைகள்.

‘நம்பலை இல்ல. என்னை நீ நம்பலை இல்ல? வேண்டாம் போடி. உன் கொலுசு சத்தம் இனிமே என் காதில் விழ வேண்டாம் போடி.’’ உள்ளம் பொங்கிக்கொண்டிருக்க வாய்விட்டே சொல்லிக்கொண்டான் அவன்.

ஆனால் அந்த வார்த்தைகள் பலித்து போகும் போது அவன் இன்னமும் எத்தனை துடித்து போவான் என அவனுக்கு அப்போது தெரியவில்லை. ஏதேதோ எண்ண ஓட்டங்களுடன் இவன் காலாற நடந்துவிட்டு வீடு வந்து சேர்ந்திருந்தான் ஷிவா.

லாவண்யாவின் மனதிற்குள்ளும் ஒரு வாரம் முன்பு அந்த பேச்சுக்கள் ஓடி ஓடி மறைந்தன. ஒரு வேளை அவன் கோபத்திற்கு இதுதான் காரணமோ? நெருடியது அவள் உள்ளம்.

பேசி இருக்ககூடாது. அவனிடம் அப்படி பேசி இருக்ககூடாது. குத்தியது அவள் மனசாட்சி.  தவறுதான். ஏதோ அவனது பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு தவிப்பில்,ஒரு சோர்வில் வந்து விட்ட வார்த்தைகள் அவை. இதை எப்படி அவனுக்கு புரிய வைக்க?

பேசாமல் அவள் அருகில் வந்து படுத்துக்கொண்டவனிடம் எப்படி துவங்க என்ன பேச என்றே புரியவில்லை அவளுக்கு. இரவு முழுதும் உறக்கம் இல்லாமல் புரண்டுக்கொண்டே இருந்த இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.

றுநாள் காலை

அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தான் ஷிவா. அதே நேரத்தில் தனது அலுவலகம் செல்ல கிளம்பி வெளியே வந்தாள் லாவண்யா. இருவருக்கும் இடையில் நடந்துக்கொண்டிருக்கும் அந்த மௌன விளையாட்டை கவனித்துக்கொண்டேதான் இருந்தாள் ஷாலினி.

வெளியே வந்த லாவண்யா தனது ஸ்கூட்டியை இயக்க முயல அது அவனை போலவே அவளுடன் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்திருந்தது. பல முறை முயன்றும் தோல்வியே.

அதே நேரத்தில் அவனும் வெளியே வர அவனை பின் தொடர்ந்து வந்து கதவில் சாய்ந்து நின்றுக்கொண்டாள் ஷாலினி. அவர்கள் இருவரையும் ஒரே வாகனத்தில் அனுப்பிவிட வேண்டும் என்பதுதான் அவளது எண்ணமாக இருந்தது.

ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அடுத்து என்ன செய்ய என அவள் யோசிக்க ஆரம்பிக்க இவன் பைக்கின் அருகில் வந்தான்..

‘என்ன ஆச்சு ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலையா லாவி?’ கேட்டாள் ஷாலினி.

‘ம்.. ஆமாம். அதான் அடுத்து எதிலே போறதுன்னு யோசிச்சிட்டு நிக்கறேன்’ யோசனையுடன் நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டாள் லாவண்யா.

‘அதான் உன் டிரைவர் ரெடியா பைக்கை வெச்சிட்டு நிக்கறானே? அப்புறம் என்ன யோசனை? இந்த மாதிரி நேரத்திலே கூட அவன் உன்னை டிராப் பண்ணலைன்னா அப்புறம் மூணு வேளை சோறு போட்டு தங்க இடமும் கொடுத்து அவனை வீட்டிலே வெச்சிருக்கிறது எல்லாம் வேஸ்ட்’ என சொல்லியபடியே ஷிவாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே நின்றாள் ஷாலினி.

சட்டென அவன் திரும்பி ஷாலினியை ‘அய்யோ... என்ன இது நம்ம டிரைவர் இவ்வளவு சூடா இருக்காரு? அவனை ஏதும் திட்டி விட்டுட்டியா என்ன? ஷாலினி அவளை மெல்ல குடைய

‘ஹேய்... சும்மா இருக்க மாட்டியா நீ? ஏற்கனவே அவருக்கு வேலை டென்ஷன்’ லாவண்யா இடை புக

சட்டென பைக்கை உதைத்து கிளப்பினான் ஷிவா. ஆனாலும் நகர்ந்து விடாமல் ஆக்ஸிலேடரை அவன் திருகிக்கொண்டே இருக்க பைக் உறுமிக்கொண்டே இருக்க அவன் திரும்பி லாவண்யாவை பார்த்த சூடான பார்வையில் வந்து பின்னால் அமர்ந்துக்கொள் என்ற ஆணை இருந்தது.

இவர்கள் ஆட்டம் எல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணம் இவனுக்கு.

அவன் கண் ஜாடை காட்டிய மாத்திரத்தில் ஓடிச்சென்று பைக்கில் ஏறி அமர்ந்துக்கொண்டாள் லாவண்யா. திருப்தியாய் ஒரு புன்னகை ஷாலினியின் இதழ்களில். ஆனால் இதற்கு சந்தோஷ பட்டிருக்கக்கூடாது என பிறகுதான் புரிந்தது அவளுக்கு.

கிளம்பியது பைக். அவனது கோபம் அவன் பைக் ஒட்டிய விதத்தில் தெரிந்தது அவளுக்கு. அது எப்படி என் ராஜாத்தி அப்படி பேசலாம் என்ற தவிப்பு, ஆதங்கம்  அவனுக்கு. சரியாக சொல்ல வேண்டுமென்றால் பைத்தியக்காரன் போல் பைக்கை செலுத்திக்கொண்டிருந்தான் ஷிவா. எதுவும் பேசி விடவும் பயமாக இருந்தது,

அன்றைக்கு என சேலை வேறு அணிந்திருந்தாள். அவன் தோள் பிடித்துக்கொள்ளவும் பயம். சரியான பிடிமானம் இல்லாமலே அமர்ந்திருந்தாள் லாவண்யா. சாலையில் வந்தது அந்த சின்னதான திருப்பம். வேகத்தை குறைக்காமல் ஹாரனும் கொடுக்காமல் சரேலென திருப்பினான் வண்டியை.

அப்போது சட்டென எதிரில் வந்த அந்த வேனை தவிர்க்கவென அவன் போட்ட பிரேக்கில் வண்டியிலிருந்து நழுவி கீழே விழுந்திருந்தாள். லாவண்யா பின்னால் வந்த ஒரு பைக்கும் தடுமாறி நிதானத்துக்கு வருவதற்குள் அதன் சக்கரம் அவளது ஒரு பாதத்தை பதம் பார்த்திருந்தது.

‘ரா.. ஜா....த்,,தி...’ சற்றே சமாளித்து வண்டியை கீழே போட்டுவிட்டு அவளருகே பாய்ந்தவனின் உதடுகள் அலறின. துடித்து, பதறி உடைந்து போனான் ஷிவா. அவளை எப்படி மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் என அவனுக்கே புரியல்லை.

வலியில் துடித்துக்கொண்டிருந்தவளின் கண்களில் கூட கண்ணீர் அதிகம் வரவில்லை. இவன் கண்களில் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது கண்ணீர். அவள் காலில் சின்னதாய் ஒரு எலும்பு முறிவு. இவளுக்கு வைத்தியம் செய்துக்கொண்டிருந்த மருத்துவரே இவனை சற்று விநோதமாகவே பார்த்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

மருத்துவர் காலில் கட்டு போட்டுவிட்டு சிறிது ஒய்வு எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு ‘ஒண்ணுமில்லை உங்க மனைவிக்கு. நீங்க தைரியமா இருங்க. நீங்க அவங்க மேலே வெச்ச பாசம் உங்க கண்ணீர்லே தெரியுது. ஷீ இஸ் வெரி லக்கி’ என்று அவன் தோள் தட்டிவிட்டு நகர்ந்தார் மருத்துவர்.

அவர் பேசியது எதுவுமே இவன் காதில் ஏறியதாக தெரியவில்லை.

‘வலிக்குதாடி. வலிக்குதாடி ராஜாத்தி. எல்லாமே என் தப்பு. அன்னைக்கு நீ ஏதோ ஒரு மூட்லே பேசி இருப்பே. நான் அதுக்கு போய் கோபப்பட்டு... உனக்கு இப்படி.... சாரிடி ராஜாத்தி. ரொம்ப சாரி நான் உன் மேலே கோபப்பட்டிருக்ககூடாது’  குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான் ஷிவா. ‘ நீ என் உயிர்டி’’

பொதுவாகவே ஆண்களின் கண்ணீர் மிகவும் ரகசியமானது. அதை அவர்கள் மற்றவர்களிடம் அதிகம் காண்பித்துக்கொள்ள விரும்புவதே இல்லை. அப்படி இருக்கும் பொது வெளியில் தனக்காக அவன் இத்தனை கண்ணீர் சிந்துகிறான் என்றால் அவன் மனதிற்குள் தனக்கு அவன் கொடுத்திருக்கும் இடம் என்ன என்பது தெளிவாக புரிந்தது லாவண்யாவுக்கு.

‘நான் இல்லாம நீங்க ஜாலியா இருப்பீங்க.’ வெகு எளிதாக சொல்லிவிட்டாள்தான். ஆனால் அது அவனுக்கு எத்தனை பெரிய வலியை கொடுத்திருக்கும் என இப்போதுதான் புரிகிறது அவளுக்கு. இப்போது இவள் கண்களில் கண்ணீர் சேர்ந்திருந்தது.

தன்னை சமாளித்துக்கொண்டு கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவனின் கரம் பற்றிக்கொண்டாள் அவள். எதுவும் பேசிக்கொள்ளவில்லை அவனிடம்.

வீட்டுக்கு வர இரவு ஆகி இருந்தது. அவளை அப்படியே கைகளில் ஏந்திக்கொண்டு வந்து படுக்கையில் படுக்க வைத்தான் ஷிவா. அங்கே இருந்த மேஜையில் அனாதையாக கிடந்தன அவள் கொலுசுகள்.

‘கொலுசை மட்டும் கழட்டி வெச்சிடேன். அந்த சத்தம் எனக்கு பிடிக்கலை’  நான்தானே சொன்னேன். வேண்டாம் போடி. உன் கொலுசு சத்தம் இனிமே என் காதில் விழ வேண்டாம் போடி.’’ நான் தானே உளறினேன். இதோ அடி எடுத்து வைக்க முடியாமல் படுத்து கிடக்கிறாளே என் தேவதை. இனி சில நாட்களுக்கு அவள் கொலுசு சத்தம் என் செவிகளில் கேட்காதே. இப்போது மகிழ்ந்து போனதா என் மனம்?

ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது ஷிவாவுக்கு. ‘வாழ்க்கையின் அடுத்த நிமிடம் என்பது நிரந்தரம் இல்லை. தேவை இல்லாத கோப தபாங்களை மனதில் சுமந்து கொண்டு நாம்தான் வாழ்க்கையின் இந்த நிமிட சந்தோஷங்களை இழந்துக்கொண்டிருக்கிறோம்’

வீட்டில் இருக்கும் அனைவரும் கொஞ்ச நேரம் அவர்களுடன் இருந்துவிட்டு நகர இருவருக்கும் கிடைத்தது அவர்களுக்கான தனிமை.

‘நான் அன்னைக்கு அப்படி பேசி இருக்க கூடாது’ அவள் மெல்ல ஆரம்பிக்க அவள் அருகில் அமர்ந்து அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டு அழுந்த முத்தமிட்டான். ‘எதுவும் பேசாதே. நான் எதையும் கேட்கும் மன நிலையில் இல்லை’ சொல்லிக்கொண்டே அவளை இறுக்கிக்கொண்டான் தன்னோடு.

இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில் அன்று காலையில் அரை குறை உறக்கத்தில் அவன் புரண்டுக்கொண்டிருந்த நேரத்தில் அவன் செவிகளை தொட்டது அவள் கொலுசொலி. சற்றே தடுமாறி மெல்ல மெல்ல நடந்து வந்துக்கொண்டிருந்தாள் லாவண்யா.

வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தான் ஷிவா கண்கள் பளபளக்க தனதருகில் வந்து நின்றவளை பார்த்தான் ஷிவா.

‘நீ கொலுசு போட்டுட்டியா?’

‘ஆமாம் என் காலு நான் போட்டுக்கறேன் நீங்க கழட்டி வைக்க சொன்னா நான் கழட்டி வெச்சிடணுமா என்ன?’ அவள் கேட்க சட்டென அவளை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான். இப்போது மறுபடியும் அவன் கண்களில் நீர் கோடுகள்.

‘சரியான எமோஷனல் ஃபெல்லோ நீங்க. எப்போ பாரு கண்ணிலே தண்ணி’ அவள் அவன் நெற்றி முட்ட

‘அப்படி இல்லை’ என்றான் அவன் ‘என் கண்ணீர் உனக்காக மட்டும்தான். நீ என்ன சொன்னாலும் சரி. யூ ஆர் இன் இன்டிஸ்பென்ஸ்சிபிள் இன் மை வோர்ல்ட். நீ இல்லன்னா நான் இல்லைதான்’

‘சரிப்பா. சரி. நான் போனா உங்களையும் சேர்த்து கூட்டிட்டு போறேன். கூடவே நம்ம கொலுசையும் சேர்த்து கூட்டிட்டு போயிடுவோம்’ என்று நிறைவான மனதுடன் சிரித்தபடியே அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள் லாவண்யா.

{/tabs}

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.