(Reading time: 11 - 22 minutes)

“பரவாயில்லை விடு மது... எல்லாரும் எல்லாம் தெரிஞ்சவங்களா இருக்க மாட்டாங்க... சென்னைல எந்த இடத்துல நியாமான விலைல எந்தப்பொருள்  தரமா கிடைக்கும்ன்னு உனக்குத் தெரியும்.... ஊருல இருந்து யார் வந்தாலும் நீதானே இங்க சுத்தி பார்க்க, அப்பறம் திங்க்ஸ் வாங்க ஹெல்ப் பண்ற.... அது அந்தக் கமலாவால முடியுமா....”

“அப்போ என்னை என்ன ஊர் சுத்த மட்டும்தான் லாயக்குன்னு சொல்றீங்களா...”

“குதர்க்கமா பேசாத மது... ஷாப்பிங் அப்படிங்கறதும் ஒரு கலைதான்.... எல்லாராலையும் பொறுமையா மத்தவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது.... சரி ஷாப்பிங் விடு.... ரங்கோலி, குந்தன் வொர்க் இப்படி எத்தனை நீ பண்ற... அதெல்லாமும் கலைதானே....”

“சும்மா என்னை சமாதானப்படுததணும் அப்படின்னு சொல்லாதீங்க... நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்... உடனடியா நான் பாட்டும், டான்ஸும் கத்துக்கப்போறேன்... இந்த வருஷம் நடக்கப்போற ஆண்டு விழால கலந்துட்டு கலக்கப்போறேன்....”

“மதும்மா நீ சொல்றது உனக்கே நடக்கற கதையா தெரியுதா... கொஞ்சமானும் யோசிச்சு பாரு....”

“உங்களுக்கு எப்பவுமே நான்னா தொக்குதான்... எங்க நான் உலகமே புகழற அளவுக்கு பெரிய நாட்டியத் தாரகையாவோ, இல்லை சின்னக்குயிலாவோ வந்துடுவேனோன்னு பொறாமை....”

“அடியேய் எனக்கு கடுப்பை கிளப்பாத சொல்லிட்டேன்... உங்க லேடீஸ் கிளப் வருடாந்திர விழால நீ கலந்துக்க நினைக்கறதெல்லாம் சரிதான்.... ஆனா அதுல நமக்கு என்ன வருதோ அதுல கலந்துக்கணும்.... உனக்கு தெரியவே தெரியாத பாட்டுலயும், டான்ஸ்லயும் தான் கலந்துப்பேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம் சொல்லு...”

“அது எப்படி நீங்களே எனக்கு வராதுன்னு முடிவு பண்ணலாம்... அந்தக் கமலாவே இதுல எல்லாம் கலந்துக்கப் போறா... அவளுக்கே வரும்ன்னா எனக்கு வராதா...”

“புரியாம பேசாத மது.... அவங்க சின்ன வயசுலேர்ந்து கத்துட்டு இருக்காங்க.... உனக்கு வயசு முப்பத்தஞ்சு.... இதுக்கு மேல உடம்பு வளைஞ்சு டான்ஸ் ஆடறது எல்லாம் நடக்கற கதையா....”, ஷங்கர் சொல்ல அவனை முறைத்தாள் மது....

“மனசிருந்தா எல்லாத்துக்கும் மார்க்கம் உண்டு.... நிறைய பேர் இப்போ யோகா பண்றாங்க, எல்லாரும் என்ன சின்ன வயசுலேர்ந்தா பண்றாங்க... அவங்களுக்கு எல்லாம் உடம்பு வளையலை.... என்ன பெரிய பாட்டு, இல்லை டான்ஸ்.... என்னால முடியாதா.... சாப்பிட வாங்க அப்படின்னு சொல்றதையே ‘சா....ப்.....பி....ட வா.....ங்....க....’ன்னு நீட்டி முழக்கி சொல்லணும்..... பாட்டு வந்தாச்சு.... கூடவே கரண்டி கைல வச்சுட்டு அபிநயத்தோட சொன்னா டான்ஸ்.... அவ்வளவுதான் முடிஞ்சுது....”, என்று கூற

மது கையில் கரண்டி வைத்துக்கொண்டு ‘தக தக தக, தக தகவென ஆடவா.... சிவ ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா....’, என்று தலைவிரி கோலமாக ஆடுவது ஷங்கர், மற்றும் அஸ்வதி மனதில் தோன்றி அவர்களுக்கு பீதியில் பேதி வரவைத்தது....

“மது சொன்னாக் கேளு, இதெல்லாம் ஆவறதில்லை... பாட்டுக்கூட பரவாயில்லை... டான்ஸ்லாம் முடியாதும்மா....”

“இங்க பாருங்க…. பொண்டாட்டி ஏதானும் புதுசா கத்துக்க போறேன்னு சொன்னா  அதை encourage பண்ணனும்... இப்படி அபசகுனம் பிடிச்சா மாதிரி எடுத்த உடனேயே மங்களம் பாடக்கூடாது... நான் நெட்ல தேடி பாட்டு டீச்சர், டான்ஸ் டீச்சர் ரெண்டு பேரையும் பிக்ஸ் பண்ணிட்டேன்... நாளைலேர்ந்து டெய்லி அவங்க வந்து எனக்கு சொல்லித்தருவாங்க.... ஸோ இன்னும் ஒரு மாசத்துக்கு நான் ரொம்ப பிஸி.... அப்பாவும், பொண்ணும் என்னைத் தொந்தரவு பண்ணாம இருங்க....”, என்று கூறிவிட்டு படுக்கையறையை நோக்கி நடந்தாள்... நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்று சோகமாக ஷங்கரும், அஸ்வதியும் பார்த்துக் கொண்டார்கள்....

றுநாளிலிருந்து ஆரம்பித்தது மதுவின் லட்சியத்தை நோக்கிய இடைவிடாத பயணம்.... டைம் டேபிள் போட்டு ஆடவும் பாடவும் ஆரம்பித்தாள்.... காலை ஐந்து மணிக்கு பாடலுடன் ஆரம்பிக்கும் மதுவின் சாதகப் பயிற்சி, இரவு பத்து மணிக்கு ஆடலுடன் முடியும்....

இவளின் தொல்லையைத் தாங்க முடியாத ஷங்கர் இரவு ஒன்பது மணிக்கு குறைந்து வீடு வர மாட்டான்... மொத்தமாக மாட்டியது அஸ்வதிதான்.... மது அன்று கற்றுக்கொண்டதை அஸ்வதி முன் அரங்கேற்றாமல் விடமாட்டாள்....

“அப்பா என்னை ஏதானும் கோச்சிங் கிளாஸ் சேர்த்து விடுங்கப்பா... அப்போ நானும் உங்களை மாதிரியே லேட்டா வரலாம் இல்லை... என்னால அம்மா பாடறதையும், ஆடறதையும் பார்க்க முடியலை...”

“மூணாங்கிளாஸ் பசங்களுக்கெல்லாம் கோச்சிங் கிளாஸ் இல்லைடா குட்டி.... அம்மா ப்ராக்டிஸ் பண்ணும்போது நீ போய் உன் friends கூட விளையாட வேண்டியதுதானே....”

“நான் போனேன்ப்பா... ஆனா அவங்க மம்மிஸ் கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியலை... இஷாவோட மம்மி அன்னைக்கு.... உங்க வீட்டுலேர்ந்து எப்பவும் யாரோ அழறா மாதிரியே சத்தம் கேக்குதே, யாரு அதுன்னு கேக்கறாங்க.... அப்பறம் தீப்புவோட மம்மி, உங்க வீட்டுல flooring  வேலை நடக்குதா அஸ்வதி.... எப்ப பார்த்தாலும் டங்கு டங்குன்னு இடிக்கற சத்தம் கேட்டுட்டே இருக்கேன்னு சொல்றாங்க... இவங்கக்கிட்ட அது எங்கம்மா ப்ராக்டிஸ் பண்ற சத்தம் அப்படின்னா சொல்ல முடியும்.... இதை எல்லாம் avoid பண்ணவே இப்போலாம் நான் விளையாடவே போகறதில்லை...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.