(Reading time: 11 - 22 minutes)

இவர்களின் நிலை இப்படி என்றால் கற்றுக்கொடுக்க வந்த குருவின் நிலை அந்தோ பரிதாபம்... மது பாட்டு டீச்சர், டான்ஸ் டீச்சர் இருவரிடமும் தனக்கு இருக்கும் நேரத்தில் முதலிலிருந்து கற்றுக்கொள்வது கடினம்... எனவே இரண்டு பாட்டு இரண்டு டான்ஸ் மட்டும் சொல்லிக்கொடுக்குமாறு கூறிவிட்டாள்... ஸ்ருதி, தாளம் எல்லாம் குருவிற்கே மறக்கும் நிலையில் இருந்தது மதுவின் பாடும் திறன்... ஆடும் திறன் அதற்கும் மேல்.... கடவுள் வணக்கத்திற்கு அரை மண்டி போட வைக்கக்கூட ஆசியையால் முடியவில்லை....

எந்தக் கலையை நாம் கற்றுக்கொண்டாலும் ஓரளவாவது அதில் ஈடுபாடு இருக்க வேண்டும்... அடுத்தவருக்காக என்று எந்த விஷயத்தையும் யாராலும் கற்றுக்கொள்ள முடியாது.... மது விஷயத்திலும் நடந்தது அதேதான்...

மதுவிற்கு பொறுமை என்பது மிக மிகக் குறைவு.... எடுத்த உடனேயே எல்லாமே வந்துவிடவேண்டும் என்ற துடிப்பு... முதல் ஒரு வாரம் இருந்த ஆர்வம் அவளுக்கு பாட்டும், நடனமும் வராததால் படிப்படியாக குறைய ஆரம்பித்தது....

பாட்டு குரு ஒரு பக்கம் ஒரு ஸ்ருதியில் இழுக்க, மது அதற்கு ஏழெட்டு ஸ்ருதியில் மறுபக்கம் இழுக்க சங்கீதம்தான் இவர்கள் இருவரிடமும் இரண்டுபட்டது... மதுவால் விளைந்த ஒரே நன்மை, அபஸ்வரம் என்பது என்ன என்பதை மிகத் தெளிவாக கற்றுக்கொண்டார் அவளின் குரு....

நாட்டியமும் மதுவின் கையில் வன்பாடு பட்டது... ஒரு வழியாக குரு ஒரு பக்கமும், அஸ்வதி மறுபக்கமும் பிடிக்க குத்து மதிப்பாக அரை மண்டி போட்டாள் மது... அதன் பிறகு சிம்பிள்ளாக ஒரு விநாயகர் துதிக்கு அவளின் குரு நடனம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்க, குரு விநாயகர் பாவம் காட்ட சொன்னால் மது அதற்கு ஆஞ்சநேயர் பாவம் காட்டினாள்... பாட்டு டீச்சரைப் போலவே டான்ஸ் டீச்சரும் இடுப்பையே வளைக்காமல் எப்படி டான்ஸ் ஆடுவது என்று கற்றுக்கொண்டார்...

மேலும் இரண்டு வாரங்கள் சடுதியில் ஓட மதுவும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்று விடாது பயிற்சியைத் தொடர்ந்தாள்....

அவள் ஆடுவதையும், பாடுவதையும் பார்த்து ஷங்கருக்குத்தான் வயிற்றில் புளியைக் கரைத்தது... ‘ஐயோ விழா அன்னிக்கு எத்தனை பேர் முட்டையும், தக்காளியும் அடிக்கப்போறாங்களோ, ஆண்டவா இது ரெண்டும் எங்கயும் அன்னைக்கு கிடைக்காம பண்ணிடு’, என்று ஒரு இன்ஸ்டன்ட் வேண்டுதல் வைத்தான்....

அவனின் வேண்டுதலின் மகிமையோ இல்லை அஸ்வதியின் வேண்டுதலின் மகிமையோ மிகச்சரியாக விழாவிற்கு இரண்டு நாள் முன்பு, இரண்டு காலையும் தூக்கி குதித்து ஆடும்போது மது தவறி விழ. காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மருத்துவர் இரண்டு வார காலம் complete பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும் என்று கூற தப்பித்தோம், பிழைத்தோம் என்று இரண்டு டீச்சர்களும் ஓட்டம் பிடித்தார்கள்....

ஷங்கரும், அஸ்வதியும் மதுவின் நடனத்திலிருந்து காண்போரை காப்பாற்றிய அனைத்து கடவுள்களுக்கும் 1008 சுற்றுக்கள் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்...

இத்தனை நடந்தும் மதுவின் அலப்பறைதான் குறையவில்லை, தான் எந்த அளவிற்கு விழாவில் நடனமாடத் தயாராக இருந்ததாகவும் ஆனால் அனைத்தும் வீணாகி விட்டது என்றும் வருவோர், போவோரிடமெல்லாம் கூறிக்கொண்டிருந்தாள்....

“மது நீ கவலையே படாத.... வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் பேசி உனக்கு தொண்டை கட்டிப்போச்சு... அதே மாதிரி காலையும் அசைக்க முடியாது.... அதனால பாட்டும், டான்ஸும் கஷ்டம்.... ஆனா இத்தனை கலை ஆர்வத்தோட இருக்கும் உன்னை ஏமாத்த எங்களால முடியலை... அதனால ஆண்டு விழாவை இன்னும் ஒரு வாரத்துக்கு தள்ளி வச்சுட்டோம்... நீ என்ன பண்ற.... சேர்ல உக்கார்ந்தபடியே வயலின் வாசிச்சுடு....”, ப்ரெசிடென்ட் லலிதா கூற, மது உடனே வயலின் டீச்சரை நெட்டில் தேட.... ஷங்கரும், அஸ்வதியும் இன்ஸ்டன்ட் மயக்கம் போட்டார்கள்....

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.