(Reading time: 11 - 22 minutes)

"யாரு! உன் மவளா? அவ எங்கே ஸ்கூல்ல சாப்பிட்டா?தேவிய நான் வரிசைல பார்த்த ஞாபகமே இல்லையே!?

"நீ கவனிச்சிருக்கமாட்ட!"

"அதுஞ்சரிதான்! பல புள்ளைகளை பார்க்குறேன்ல நெதமும், ஞாபகம் செரியா இருக்காது! நேரமாவதுக்கா! நானும் ராத்திரிக்குப் போய்த்தேன் பொங்கணும்! வாரேன்க்கா!'

"சரி மணி! பொறவு பாப்போம்!" என்று விடைபெற்று நடந்தாள் தேவி.

"என்ன இவ! வீட்லயும் சாப்பாடு வேண்டாம்னு சொல்றா! ஸ்கூல்லயும் சாப்பிடல!" என்ன தான் பிரச்சனை! வாத்தியார் திட்டி ஸ்கூல்ல சாப்பிடக்கூடாதுன்னு வம்பா இருக்காளா? கூடப் படிக்கிற புள்ளைக கூட சண்டையா? இல்லை பயலுக யாரும் வம்பு பண்ரானுகன்னு இப்படி இருக்காளா? இன்னிக்கு விடை தெரியாம விடக்கூடாது!" வெளியில் விளையாடப் போன கண்ணன் இன்னும் வரலை! கேட்டுற வேண்டியது தான்! என்று மனதில் தனக்குள் சொல்லிகொண்ட வாறே,  தேவியின் அருகில் சென்றாள்.

"தேவி! ஏண்டா கண்ணு இப்படி திடீர்னு சாப்பிடாமல் இருக்க? அம்மாவுக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குடா! சத்துணவில சாப்பிடுறேன்னு பொய் தானே சொல்லிருக்க! உண்மைய சொல்லுடா! அம்மாகிட்ட ஏன் மறைக்கிற!" என்று அமைதியாக கேட்டாள் லெட்சுமி. அவளின் கேள்வியின் தொனி, தேவிக்குக் கண்ணீர் வரவைத்து விட்டது.

"அழாதடா கண்ணு! என்ன பிரச்சனைனாலும் அம்மாட்ட சொல்லுடா! "

"எதையும் மறைக்கணும்னு நினைக்கலமா! நான் என் ப்ரெண்ட் நசீரா கூட சேர்ந்து நோன்பு இருக்கேன்மா? "

"நோன்பா? என்ன நோன்பு ?" என்றாள் லெட்சுமி.

"நான் சாப்பிடாமல் இருக்கப்போறேன்னு சொன்னால் நீங்க ஒத்துக்கமாட்டீங்கன்னுதான் இதை உங்ககிட்ட சொல்லலம்மா! இப்ப சொல்றேன்மா. என் ப்ரெண்ட் நசீராவோட வாப்பா வெளிநாட்டுல இருக்கார்னு உங்களுக்குத் தெரியும்ல!"

"ஆமா! தெரியும்! அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்!"

"எனக்கு தம்பியா கண்ணன் இருக்கான்! ஆனால் அவளுக்குத் தம்பி, தங்கச்சி யாரும் இல்லை!"

"அதுதான் தெரியுமே! அவ மூணோ நாலோ வயசுப் புள்ளையா இருக்கும்போதே அவங்கப்பா வெளிநாட்டுக்குப் போயிட்டாரே! அஞ்சு வருசமா வராமத் தானே இருக்காரு!"

"வீட்டில் அவளும் அவங்கம்மாவும் மட்டும் தானே என்பதால், நசீரா அம்மா எதையுமே விதவிதமா சமைக்க மாட்டாங்க. இட்லியும் தோசையும் தான் அடிக்கடி செய்வாங்க. அதுக்குத் தொட்டுத் திங்க சாம்பார், சட்னி கூட கிடையாது. எப்பவும் பொடியும் எண்ணையும் தான்!" அதைத்தான் மத்தியான சாப்பாட்டுக்கும் வச்சு விடுவாங்கம்மா! "

"நீ நிதம் நிதம் பால்சோத்தையும், பக்கடாவையும் கொண்டு போற மாதிரி, அவ இட்லி, தோசை, பொடி எண்ணை கொண்டு வருவாளாக்கும்!"

"ஆமாம்மா! ஆனால் நாங்க ரெண்டு பெரும் எங்க டிபன் டப்பாவை மாத்திக்குவோம். அவள் பால்சோறு சாப்பிடுவா! நான் தோசை சாப்பிடுவேன்!"

"அடக்கழுதைகளா!" என்றாவாறே, மேலும் "இப்பவும் அதே மாதிரி சாப்பிடுறதுக்கென்ன?" உங்க ரெண்டு பேத்துக்கும் சண்டையா?"

"இல்லம்மா! நான் தான் நோன்புன்னு சொன்னேன்ல! ரம்ஜான் வரபோகுதுல்ல. அதனால் நசீரா நோன்பு இருக்கப்போறேன்னு சொல்லி சாப்பிடாமல் இருக்கிறா! அவளை விட்டுட்டு சாப்பிட எனக்கு மனசு வரலம்மா!"

"இவ்வளவு சின்ன வயசுல எதுக்கு அவ நோன்பு இருக்கிறா?"

"அவங்க வாப்பா சீக்கிரம் திரும்பி வரணும்,அவங்க குடும்பத்துக் கடன் அடைக்கணும்னு வேண்டிக்கிட்டு எச்சி கூட முழுங்காம அவ நோன்பு இருக்கிறா!"

"இந்த மாசம் முழுதும் அவ நோன்பு இருப்பா, நானும் அவ கூட இருப்பேன்மா! என்னை தயவு செய்து தடுக்காதீங்கம்மா!" இறைஞ்சும் குரலில் கேட்டாள் தேவி.

அது வேணும், இது வேணும்னு கேக்குற புள்ளைகளுக்கு மத்தியில், தன் தோழிக்காக சாப்பாட்டை வேண்டாம்னு மறுக்கிற தன் பெண்ணைப் பார்த்து வியந்தாள் லெட்சுமி.

"சரி! உங்களோட நோன்பு பலன் கொடுக்க நானும் சாமி கும்புட்டுக்கிறேன்!" என்றவாறே இரவுச் சாப்பாட்டை சமைக்க சென்றாள் லெட்சுமி.

ம்ஜான் நாளும் வந்தது, "தேவி! தேவி! வாசலில் நசீரா குரல் கேட்டது.

"அத்தை, தேவி இருக்காளா?"

"நான்தான்மா அவளைப் பக்கத்துக்கடை வரை ரெண்டு சில்லுத்தேங்கா வாங்க அனுப்பிருக்கேன்! இப்ப வந்துருவா! உள்ளே வந்து உக்காரும்மா!

“அம்மா நல்லா இருக்காங்களா! அப்பா போன் போட்டாங்களா?டீ குடிக்கிறியா?" வரிசையாக லெட்சுமி கேட்டுக் கொண்டு இருக்கையில், உள்ளே நுழைந்தாள் தேவி,

"இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் நசீரா!" என்றவாறே தன் தோழியை அணைத்துக் கொண்டாள் தேவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.