(Reading time: 11 - 21 minutes)

வருமானத்தை விடுவாரா, புரோகிதர்! மற்றவர்களும் முணுமுணுத்தவாறே நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது!

 லீலாவின் முகமும் மனமும் இருண்டுகிடந்தது! தன்னால் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதே என்று விசனித்தாள்!

 " லீலா! சியர் அப்! இந்த பத்தாம்பசலிகளுக்குப் பயந்து நாம் அடங்கிப்போனால், மூடநம்பிக்கை எப்போ ஒழியறது? பார்! எனக்கு சரியான நேரத்திலே, இயற்கையா பிறக்கப்போகுது, குழந்தை கொழுகொழுன்னு! இவங்கள்ளாம் வெட்கித் தலைகுனியப்போறாங்க!"

 நானும் லீலாவிடம் உற்சாகமாகப் பேசி, வீட்டுக்குத் திரும்பினோம்.

 விதி வலியது! லீலாவை பழிவாங்குவதுபோல, அன்றிரவு செய்தி வந்தது!

 என் நண்பனின் மனைவி பாத்ரூமில் வழுக்கிவிழுந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.

 ஓடோடிச் சென்று பார்த்தோம். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. "எந்த உயிர் காப்பாற்றப்படவேண்டும், தாயா, சேயா?" என்ற கேள்வி எழுந்து, தாயைக் காப்பாற்ற சேயின் உயிர் பலியானது!

 " லீலா! ஒண்ணும் குடி முழுகிப் போயிடலே, ஏதோ நினைப்பிலே பாத்ரூமிலே தவறி விழுந்துட்டேன், நான்தான் உயிரோடிருக்கேனே, அடுத்த வருஷம் இதே நாளிலே, இன்னொரு குழந்தையை பெற்றுக் காட்டுகிறேன், பார்!" 

 என்று நண்பனின் மனைவி லீலாவை உற்சாகப்படுத்தியபோது, நான் அவளை கையெடுத்துக் கும்பிட்டேன். " நீ சாதாரணப் பெண்ணல்ல; தெய்வப் பிறவி! நட்பின் இலக்கணமே நீதான்!" என்று பாராட்டிவிட்டு, நானும் லீலாவும் வீடு திரும்பினோம்.

 விளக்கை அணைத்துவிட்டு, படுக்கையில் இருவரும் படுத்தோம். அசதியில் நான் உறங்கிவிட்டேன்.

 'டொப்'னு ஒரு சத்தம் என்னை எழுப்பி விளக்கைப் போடவைத்தது.

 எதிரே, லீலா! அவள் கையில் விஷ பாட்டிலின் மூடி! பாட்டில் கீழே உருண்டு கிடந்தது!

 நல்லவேளை! இருட்டில், லீலா பாட்டிலை திறக்கும்போதே, அது நழுவி கீழே விழுந்துவிட்டது!

 அலறிப் பதறி துள்ளிக் குதித்து வந்து, லீலாவின் கையிலிருந்த மூடியை பிடுங்கிக்கொண்டு, அவளை அணைத்தவாறே, படுக்கையில் அமர்த்திவிட்டு, அறையை சுத்தம் செய்தேன். 

 லீலாவின் முகவாயை தூக்கி நிறுத்தி, அவள் கண்களுக்குள் ஊடுருவினேன்.

 அவள் என் மார்பில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள்.

 " என்னால்தானே, ஒரு உயிர் பலியாகிவிட்டது! நான் இன்னமும் உயிர் வாழ்ந்தால், ஊரார் என்னை வார்த்தைகளால் குத்திக் குதறியே கொன்றுவிடுவார்கள்! அப்படி சிறுகச் சிறுகச் சித்திரவதைப்பட்டு சாவதைவிட, தற்கொலை எனக்கு விடுதலை தரும், ரகு!"

 " ரொம்ப கரெக்ட், லீலா! ஆமாம் லீலா! விடுதலை தரும், இந்த ஒரு பாட்டில் விஷம்! உனக்கு மட்டுமல்ல, உன்னையும் சேர்த்து நான்கு உயிர்களுக்கு விடுதலை தரும். சந்தோஷமா?"

 " நான்கு உயிரா! என்ன சொல்றே, ரகு?"

 " லீலா! நீ என்னைவிட விவேகமும் துணிவும் உள்ளவள்! ஒரு நெருக்கடியிலே, அவை இரண்டும் உன்னை கைவிட்டுவிட்டன. யோசித்துப் பார்! உன் உயிர் போனதும், விஷம் அருந்தாமலேயே, என் உயிர் போகும்! அதுமட்டுமா? நம்மால்தானே இரண்டு உயிர்கள் பலியாகிவிட்டன என, என் நண்பனும் அவன் மனைவியும் பலியாவார்கள். லீலா! நீ அதையா விரும்புகிறாய்? உனக்காக இந்த உலகத்தையே எதிர்த்துநின்ற என் நண்பனின் மனைவிக்கு நீ செலுத்துகிற நன்றிக்கடனா, இது

 சரி, யோசித்துப் பார்! நீ இறந்தபிறகு, இதே ஊராரும் சுற்றமும் என் நண்பனின் மனைவியை சும்மா விடுவார்களா? அந்தக் கூட்டம், ஒரே வினாடியில் நாக்கைப் புரட்டிப் பேசும் நச்சுப் பாம்புகள் தெரியுமா?

 உன் சாவுக்குக் காரணம், என் நண்பனின் அசட்டுப் பிடிவாதமே என்று அவளை நார் நாராக கிழித்துவிடுவார்கள்! இப்போதே, அந்த 'பிறக்கவிருந்த சிசுவை கொன்றுவிட்டாயே பாவி!' என்று அவர்கள் என் நண்பனின் மனைவியை கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார்கள். உனக்காக துணிந்து தனித்து நின்றவளை நீ அருகிலிருந்து ஆதரவு தரவேண்டாமா? உனக்கிருக்கிற கடமையிலிருந்து தப்பித்து ஓடப் பார்க்கிறாயா? சொல்லு, லீலா!"

 " இல்லே, இல்லே, ரகு! நான் அவசரப்பட்டது தவறுதான்! எனக்கு கடமைகள் இருக்கின்றன. அத்துடன், சமுதாயத்தில் உள்ள நச்சுகளை நசுக்கவேண்டிய முக்கியமான பணியும் இருக்கிறது, நான் வாழப்போகிறேன், எதிர்த்து நிற்கப்போகிறேன், ஒருவேளை செத்தாலும் போராடிச் சாவதையே விரும்புகிறேன்! ரகு! நாளைமுதல், சில நாட்களுக்கு நாமிருவரும் உன் நண்பன் வீட்டிலேயே அவர்களுக்கு ஆதரவாக தங்குவோம். சரியா?"

 என் எதிரில் இருந்த என் அழகிய மனைவி லீலா, இன்னமும் அதிகப் பொலிவுடன் சுடருடன் காட்சி தந்தாள்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.