(Reading time: 8 - 15 minutes)

 என்னப்பன் கந்தன் கோவிலுக்கு வெளியே, ஒரு மீட்டர் அளவுகூட இடம் விடாமல், கடைகள் வந்துவிட்டன. அதனால், செடி, கொடி எதுவும் யாரும் பயிரிடவில்லை, அதனால் நீர் பாய்ச்சும் சந்தர்ப்பமுமில்லை!

 அதனால், கோவிலுக்குள்ளே தினமும் காலையில் பெருக்கி, நீர் வார்த்து சுத்தம் செய்யும் பணியில் நிறைய பெண்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருத்தி, எப்போதாவது, ஒரு முறை, ஒரு பக்கெட் தண்ணீர் கொண்டுவந்து, என் அருகே வைத்து, ஒரு குவளையும் கையில் கொடுத்து, " அப்படி ஒரு ஓரமா போயி, உடம்பை நனைச்சிக்க!" என்று சொல்வாள்.

 நான் குளித்து முடித்ததும், பக்கெட்டையும் குவளையையும் எடுத்துச் செல்வாள்.

 என்மீது இவளுக்கேன் அக்கறை? எனக்குப் புரியவில்லை, எல்லாம் என்னப்பன் கந்தனின் வேலை என்று மறந்துவிடுவேன்.

 அதுதான் எனக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்! நீங்கள் அதை நினைத்து தூக்கத்தை தொலைப்பீர்கள்! 

 இப்போது விளங்கியிருக்குமே, என்னால் எப்படி எப்போதும் சந்தோஷமாய் இருக்கமுடிகிறதென்று!

 நான் நிகழ்காலத்தில் எப்போதும் வாழ்கிறேன். கடந்த கால நினைவுகளை நெஞ்சில் சும்ப்பதில்லை! நாளை காலை நான் உயிரோடிருப்பேனா என்று கவலைப்படமாட்டேன்.

 ஆனால், எனக்கு குளிக்க பக்கெட்டில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாளே, அவள் உங்களைப்போல!

 ஒருநாள், அவள் வேலை முடிந்து வீடு திரும்பும்போது, என்னைப் பார்த்து சிரித்தாள்.

 நானும் ஒப்புக்கு சிரித்தேன்.

"ஏதாவது சாப்டியா?" என்று கேட்டாள்.

" இல்லை" என்றேன்.

" பல் விளக்கிட்டியா?"

" சாப்பிடுவதற்கு முன், வாய் கொப்பளிப்பேன்........"

"முன்னெல்லாம் உன்கூட, உன்னை பெத்தவங்க இருப்பாங்களே.........?"

நான் சிரித்தேன்.

" ஏன் சிரிக்கிறே?"

" அவங்க இருந்தப்ப, கோவிலுக்கு வர கூட்டம் அதிகம், மூணுபேருக்கும் கணிசமா காசு கிடைச்சுது, கூட்டம் குறைய ஆரம்பிச்சதும், அவங்க வேற இடம் தேடி போய்ட்டாங்க!"

" உன்னை.......?"

" எனக்கு காலில்லையே! வேற அங்கங்கே நாலு இடம் அலையமுடியாதே..........."

" வீட்டிலே ஏதாவது பணியாரம் இருந்தா கொண்டுவரட்டா?"

நான் சிரித்தேன்.

" ஏன்யா, தப்பா கேட்டுட்டேனா?"

" ஒரு பிச்சைக்காரன்கிட்ட கேட்கிற கேள்வியா இது?"

 அவள் சிரித்துக்கொண்டே போய்விட்டாள். நானும் அதை மறந்துவிட்டேன்.

 அவள் கேட்காத ஒரு கேள்வி, நீங்களாவது கேட்பீர்கள் என நினைத்தேன், பரவாயில்லை, நானே சொல்கிறேன்!

 உங்களுக்கும் பிச்சைக்காரனுக்கும் உள்ள தொடர்பு, நீங்கள் வீதியில் செல்லும்போது, வழியை மறைத்து, 'ஐயா! சாமி! தர்மம் பண்ணுங்க!'ன்னு அவன் கேட்கிறபோது, உங்க மனநிலையைப் பொறுத்து காசு போடுவீர்கள், இல்லையென்றால், ஒதுங்கிப்போய்விடுவீர்கள். என்றாவது ஒருநாள், அவனுக்கு யார் சமைத்துப் போடுகிறார்கள், அதற்கு தேவையான வருமானம் தினமும் கிடைக்குமா என்றெல்லாம் யோசிக்க உங்களுக்கேது நேரம்?

 நானே சொல்கிறேன், என்னைப்பற்றி! மற்ற பிச்சைக்காரன்களைப்பற்றி தெரியாது.

 நான் பிச்சை எடுக்கிற இடத்துக்கு எதிரிலே, ஒரு டீ கடையிருக்கு. பேர்தான் டீ கடை! அங்கே டீயைத் தவிர, வடை, பன், ரொட்டி, பஜ்ஜி போடுவாங்க!

 எனக்கு அந்தக் கடையிலே ஒரு கணக்கு உண்டு! எனக்கு தினமும் கிடைக்கிற காசுகளை, நான் அப்படியே கொண்டுபோய் டீகடை நாயரிடம் தந்துவிடுவேன், எண்ணிக்கூடப் பார்க்கமாட்டேன், ஒரு பிச்சைக்காரனை யாராவது ஏமாற்றுவார்களா? 

 நாயர் நல்லவர்! நான் தருகிற காசுகள், அவர் எனக்கு தினமும் இரண்டு வேளை டீ, வடை, பன் தருவதற்கு அதிகமா, குறைவா என்பதை அவர் கணக்கு பார்ப்பதாக எனக்கு தெரியவில்லை!

 தினமும் பிற்பகலில் கடைப்பையனிடம் ஒரு குவளை குடிநீருடன் சாப்பிடவும் கொடுத்தனுப்புவார், ஏன் தெரியுமா

 ஒருநாள், நான் கையை தரையில் ஊன்றி, உடலை தரையில் தேய்த்து இழுத்துக்கொண்டு, சாலையை கடந்து, அவர் கடையை அடைவதை பார்த்தபிறகு, என்மீது பரிதாப்ப்பட்டு, இந்த ஏற்பாடு!

 எல்லாம், என்னப்பன் கந்தனின் கருணை!

 அதோ! அவள் வருகிறாளே, பணியாரங்களை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வருகிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.